புரிந்து கொண்டால் கணிதமே வாழ்க்கை CWN 11 Plus லண்டன் கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2017 (புதன்கிழமை)
CWN 11 Plus இனால் இந்த வருடம் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சையின் விருது வழங்கும் மாபெரும் கணித விழா எதிர்வரும் 24 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
கணிதமேதை ராமனூஜரின் கணித மூளை கூட கணிதத்தால் சமுதாயத்தை ஒன்றுபடுத்தலாமெனச் சிந்திக்கவில்லை ஆனால் நம் சிதம்பரா பழைய மாணவர்கள் கணிதத்தால் உலகம் முழுவதும் சிதறிப்பிரிந்த தமிழினத்தை ஒன்று படுத்தலாம் என்று சிந்தித்திருக்கிறார்கள், இதுதான் இந்தப் பரீட்சையின் மகத்தான வெற்றி.
ஒன்றாக்க ஒன்றாக்க இலக்கங்களின் பெறுமதி கூடும் என்பதைச் சொல்வது கணிதம்தான் அதுபோல இங்கிலாந்தில் ஆரம்பித்த பரீட்சையை தாயகத்திலும் நடத்தி பிரிந்து கிடக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களையும் ஒன்றாக்கியிருக்கிறது இப்பரீட்சை.
புலம் பெயர்ந்த மாணவனுக்கும் தாயகத்தில் உள்ள மாணவனுக்கும் ஒரேவிதமான வினாத்தாள்களை வழங்கி அனைவர் அறிவையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து சுடர்விடும் அறிவுடன் படைக்கப்பட்டோரை அடையாளம் காட்டியுள்ளது இந்தப் பரீட்சை.
இப்படியொரு வாய்ப்பு அன்றைய மாணவனுக்குக் கிடைக்கவில்லை, இந்த கணித ஆடுகளத்தில் இறங்கிப்போட்டியிடும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவரையும் இந்த நேரம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
தாயகத்தில் தமிழ் மாணவர்கள் கல்வி பெறுவது ஒரே பாடத்திட்டத்தில் என்று பொத்தாம் பொதுவில் சொல்லப்பட்டாலும் பாடசாலைகளுக்கிடையில் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது, இதை ஒரு கருத்துக் கணிப்புப் போல கண்டறிய இந்தப் பரீட்சை பேருதவி புரிந்திருக்கிறது.
இருளான பக்கங்கள் எல்லாம் ஒளியடித்து நமக்குத் தெரியாது இலை மறைகாய்களாக கிடந்த எண்ணற்ற மாணவர்களை அடையாளம் காட்ட இந்த முயற்சி உதவியிருக்கிறது.
கணிதம் என்பது வெறும் ஏடுகளில் எழுதும் கணக்கு வழக்கல்ல அது வாழ்க்கை எதிர்கால உலக மயமாக்கலுக்கு கணிதமே ஜீவநாடியகாக இருப்பதாக முன்னேறிய நாடுகளின் அமைப்பான ஓ.ஈ.சி.டி கூறுகிறது, இதனால் மேலை நாடுகளில் கணித அறிவை கூர்மையாக்க கோடான கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள் கடந்த பத்தாண்டு காலத்தில்.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அப்படியோர் எண்ணம் வளரவில்லை அதை வளர்க்க இந்தப் பரீட்சை உதவியுள்ளது, நாம் சர்வதேச தரம் பெற வளர்த்துக் கொள்ள வேண்டிய கணித அறிவின் நிரம்பல்; என்னவென்பதை தாயக மாணவர்கள் கண்டறியவும் இந்தப் பரீட்சை நல்லதோர் எடுகோளாக இருந்திருக்கிறது.
நாளை என்று ஒரு நாள் வரும், அப்போது நம்மிடையே பல கணித மேதைகள் வருவார்கள், அவர்கள் தமது எழுச்சிக்கு வழிகாட்டியது சிதம்பரா கணிதப்பரீட்சையே என்று சொல்லப்போகிறார்கள்.
அந்த நாளே இந்த முயற்சியின் மகத்தான வெற்றித்திருநாளாக அமையும், வெற்றி ஒரு நாள் வரும் ஆனால் அந்த நாளை எட்டித்தொட கடின உழைப்பு வேண்டும். இந்த முயற்சியில் தன்னலம் கருதாது தமது உன்னத உழைப்பை வழங்கி பாடுபடும் அனைவரையும், மாணவர்கள் உட்பட சம்மந்தப்பட்ட அனைவரையும் சிதம்பராவின் பழைய மாணவரில் ஒருவன் என்ற உரிமையுடன் இத்தருணம் வாழ்த்தி மகிழ்கிறேன்.
கணிதத்தை வெறும் பாடமாக்காது வாழ்க்கையாக்கியிருக்கும் இம்முயற்சி மகத்தான வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.