ஐம்பது நாடுகளில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ள அதானி நிறுவனம் இலங்கையிலும் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அதானி குழுமம் (Adani Enterprises) இந்த திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் திருமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் மன்னாருக்கான போக்குவரத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் மன்னாரை அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி திட்டம் காரணமாக வங்காலை பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை தருவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர். வங்காலை பறவைகள் சரணாலயம் இந்த காற்றாலை மின் உற்பத் திக்கிராமமான தம்பபன்னி கிராமத்திலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 380 மில்லியன் யூனிற் தூய மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சாரசபை இணையத்தளம் தெரிவித்துள்ளது . மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை விட பூநகரியிலும் ஒரு காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
2018ம் ஆண்டு இலங்கையில் 1793 மெகாவாட் நீர் மின்சாரமும்,1137 மெகாவாட் எரிசக்தி மூலமான மின்சாரமும் 900 மெகாவாட் அனல் மின்சாரமும் இதர மின் உற்பத்திகளு மாக மொத்தம் 4046 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மன்னாரிலும் பூநகரியிலும் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
மன்னாரிலும் பூநகரியிலும் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை அதானி குழுமம் உற்பத்தி செய்யும் பட்சத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஏற்கனவே நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை சீனாவுக்கு வழங்க முற்பட்ட போது இந்தியா அதை தடுத்து நிறுத்தியிருந்தது உலகறிந்த இரகசியம்.
சீனத்தூதரகம் கூட தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மூன்றாவது சக்தி (Third party)ஒன்றின் அழுத்தம் காரணமாகவே சீனாவுக்கு வழங்கப்படவிருந்த திட்டம் இரத்துசெய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
சீனா 12 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்கவிருந்ததாகவும் அதானி குழுமம் 75% மானிய அடிப்படையில் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்திருந்தார்.
கடந்த 16ம் திகதி மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான விடயமாக அதானி குழுமத்துக்கு வழங்கபட்ட திட்டத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி தன்னை வற்புறுத்தியதாக ஜனாதிபதி கூறியதாக மின்சார சபை தலைவர் கூறியிருந்ததும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அடிப்படைக்காரணங்களுள் ஒன்று.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகளை தீர்ப்பதற்கு அந்நிய முதலீடுகளை வரவேற்கிறோம் ஆனால் அதானி எமக்கு வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரகளுள் ஒருவர் Econmy Next இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். அதானி நரகத்திற்குப்போ என்ற சுலோக அட்டையும் ( Adani go to hell) ஆர்ப்பாட்ட களத்தில் காணப்படுகிறது.
இருளில் மூழ்கியுள்ள ஸ்ரீலங்காவுக்கு ஒளியூட்ட முற்பட்டால் நரகத்திற்கு செல்ல வேண்டும் போலிருக்கிறது. மோடி தனது செல்லப்பிள்ளை கோத்தாவின் ஊடாக பின் கதவால் இங்கைக்குள் நுழையப்பார்க்கிறாரா என எதிர்க்கட்சியான சம்கி ஜன பலவேகய தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெளிநாடுகளுக்கு எமது சொத்துக்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசடையும் என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த கோஷங்களுள் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் சூழல் மாசடைவது வெகுவாக குறைக்கப்படும் என மின்சார சபை தெரிவிக்கிறது.இதே திட்டத்தை எரிசக்தி மூலம் உற்பத்தி செய்கையில் ஆண்டொன்றுக்கு 2.85.000 மெற்றிக் தோன் காபனீரொடசைட் வெளி விடப்படும் எனவும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினர் சீனாவுக்கு எல்லாவற்றையும் விற்பனை செய்த போது ஜே.வி.பியோ ஐக்கிய மக்கள் சக்தியோ எந்த ஒரு அமைப்பும் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இப்போது நாங்கள் இருட்டினுள் வாழ்ந்தாலும் பரவாயில்லை மின்சாரத்தடை காரணமாக தொழில்களை இழந்தாலோ உற்பத்திகள் பாதிக்காட்டாலோ பிரச்சனையில்லை இந்தியா வரக்கூடாது என்பதே சிங்கள பேரினவாதத்தின் நிலைப்பாடு.
காரணம் இந்தியா அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வலியுறுத்துவதால்.
அதானி குழுமத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கரங்களும் செயற்பட்டதாக தென்னிலங்கை ஊடகவியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தம்பபன்னி கிராமம் இந்துக்கள் செறிந்து வாழும் தலைமன்னார் பகுதியிலேயே அமைந்துள்ளது. அதானி குழுமம் மன்னாரில் காலூன்றும் பட்சத்தில் பாரதீய ஜனதாக்கட்சியின் செல்வாக்கு இந்த பிரதேசத்தில் அதிகரிக்கும் மன்னாரில் இந்துக்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற அச்சமே கிறிஸ்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்கு காரணம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.