இலங்கை வடக்கில் போதைப்பொருள் புழக்கம் - கடல் கடந்து வரும் ஆபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2022 (புதன்கிழமை)
பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி - காலப்போக்கில் அதற்கு அடிமையானார். இப்போது அவருக்கு 28 வயதாகிறது. கடந்த வருடம் கோவிட் தொற்று அதிகரித்திருந்த காலகட்டத்தில், வழமைபோன்று ஹெரோயின் கிடைக்கவில்லை.
அதனால், அதற்கு அடிமையான சுகுமாருக்கு கடுமையா உடல் வலி மற்றும் உளரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் - போதையினல் பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வளிக்கும் மட்டக்களப்பிலுள்ள நிலையமொன்றில் தன்னைச் சேர்த்து விடுமாறு தனது குடும்பத்தினரை சுகுமார் வேண்டிக் கொண்டார். அதற்கிணங்க அங்கு அவர் ஒரு மாதகாலம் தங்க வைக்கப்பட்டார். இதன்போது போதைக்கு அடிமையான நிலையிலிருந்து அவர் மீண்டார். ஆனாலும் 'கதை' இன்னும் முடிவில்லை.
சுகுமார் - இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். போதைக்கு அடிமையான நிலையிலிருந்து மீண்ட அவர், தனது சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர், இப்போது மீளவும் சிறுகச் சிறுக - போதைப் பொருட்களைப் பாவிக்கத் தொடங்கியுள்ளார்.
இப்போது அவர் ஹெரோயின் பாவிப்பதில்லை. சிகரட், கஞ்சா புகைக்கத் தொடங்கியுள்ளார். வலி நிவாரணத்துக்காக பாவிக்கும் ஒருவகை மாத்திரையை - அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம், அவர் தனக்கு போதையேற்றிக் கொள்கிறார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் - சுகுமார் போன்று ஆயிரக் கணக்கானோர் இவ்வாறு போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாடு அங்கு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருக்கிறது.
"கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை உயர்வடைந்திருக்கிறது," என்கிறார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி.
இதேவேளை, கடல் வழியாக போதைப் பொருள் கடத்தி வரப்படும் இடமாகவும் 'வடக்கு' மாறியுள்ளது.
இந்த நிலையில், ஹெரோயின் பாவனையினால் பாதிக்கப்பட்ட நிலையில் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று மாதங்களில் மரணமடைந்துள்ளனர் எனவும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் 54 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஜுலையில் 53 பேர், ஆகஸ்ட் மாதம் 93 பேர், செப்டம்பர் 112 பேர் என - சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினர் - போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியொன்றில் ஈடுபட்டதோடு, யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கே. மகேசனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், பெற்றோர் மற்றும் பாடசாலைகளைத் தாண்டி, வடக்கில் போதைப் பொருள் வியாபாரம் மிகவும் நுணுக்கமாக நடைபெறுவதாக டாக்டர் சத்திமூத்தி சுட்டிக்காட்டுகின்றார்.
"யுத்தத்தின் பின்னர் மக்களிடமிருந்த பதட்டம், பொலிஸார் மற்றும் ராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னத்தினால் ஏற்படும் பயம், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பணம் போன்றவை - போதைப் பாவனை அதிகரிப்புக்கு காரணங்களாக இருக்கக் கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.
"பாடசாலை மாணவர்களில் தொடங்கி, 30 வயது வரையிலானோரே ஹெரோயின் பாவனையில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஆரம்ப கட்டத்தில் போதையின்பத்துக்காகவும் - பின்னர் அடிமைப்பட்ட நிலையிலும் இவர்கள் ஹெரோயின் போதைப் பொருளைப் பாவிக்கின்றனர்" என அவர் விவரித்தார்.
இந்தக் கட்டுரையில் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சுகுமார், எவ்வாறு ஹெரோயின் பழக்கத்துக்கு அடிமையானார்? எனும் கேள்விக்கு - அவரின் சித்தி (அம்மாவின் சகோதரி) பதிலளிக்கும் வகையில் பிபிசி தமிழிடம் பேசினார்.
"அவர் சிறிய வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். தாய் நடத்தி வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டது. அதனால், சுகுமாரை விட்டும் அவரின் தாய் வேறொரு இடத்துக்குச் சென்றார். இதனால், சிறு வயது தொடக்கம் அவர் தனிமையுடன்தான் வாழ்ந்தார். இந்த நிலைதான் அவரை போதைப் பழக்கத்துக்குள் தள்ளியது".
"அவரின் 15 வயதில், 10ஆம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குப் புகைத்தல் பழக்கம் ஏற்பட்டது. 18 வயதில் அவர் ஹெரோயின் பழக்கத்துக்கு ஆளானதை நான் அவதானித்தேன். ஆனால், அவரின் தாயார் அதனை நம்ம மறுத்தார்.
அவரின் உடல் மெலிந்து கொண்டு சென்றது. சாப்பாட்டில் நாட்டமிருக்கவில்லை. குளிர்பானங்களை அதிகமாக அருந்தினார். வித்தியாசமான நண்பர்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினார்கள். இவற்றினை வைத்து - அவர் போதைப் பழக்கத்துக்குள் விழுந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.
ஒரு கட்டத்தில் அவர் ஹெரோயினுக்கு அடிமையானார். அது இன்றி இருக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. ஹெரோயின் வாங்குவதற்கு காசு இல்லாது விட்டால் - தடுமாறிக் கொண்டு திரிவார். காசு கேட்டு அழுவார். அடுத்தவரின் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். ஒருநாள் ஹெரோயின் இல்லாத போது - அவர் வலியினால் அழுது துடித்ததைப் பார்த்து, பரிதாபத்தில் - அவரின் அம்மம்மா ஐநூறு ரூபா பணம் கொடுத்து அனுப்பினார்.
இப்படியிருக்கையில் அவருக்கு சிகிச்சை பெற்றுக்கொடுக்க நாம் தீர்மானித்தோம். அதற்கு அவர் இணங்கினார், பிறகு மறுத்து விட்டார். இப்படி நாட்கள் கடந்தன.
கடந்த வருடம் கோவிட் உச்சத்தில் இருந்தபோது அவர்களுக்கு வழமைபோன்று ஹெரோயின் கிடைக்கவில்லை. அதனால் அவர் கடுமையான உடல் வருத்தங்கு உள்ளானார். உடல் கொதிக்கத் தொடங்கியது. வலி தாங்க முடியாமல் அழுதார்.
இந்த சூழ்நிலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மட்டக்களப்பிலுள்ள நிலையமொன்றில் தன்னைச் சேர்த்து விடுமாறு கடந்த வருடம் ஜுலை மாதம், அவர் எங்களிடம் கேட்டார். அந்த நிலையத்தில் அவருக்கு தெரிந்த ஒருவர் - புனர்வாழ்வு பெற்று, போதைப் பழக்கத்திலிருந்து மீண்டதாக சுகுமார் கூறினார்.
அங்கு அவரை நாங்கள் சேர்த்தோம். ஒரு மாதம் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது. போதைப் பழக்கத்திலிருந்து அவர் முற்றிலுமாக மீண்டார். இதனையடுத்து அவர் ஊர் திரும்பினார்.
ஆனால், இப்போது அவர் சிறிது சிறிதாக மீண்டும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார். சிகரட், கஞ்சா புகைக்கிறார். அதிகளவில் வலி நிவாரணம் வழங்கும் மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துகிறார். அவர் மீண்டும் ஹெரோயின் பழக்கத்துக்கு ஆளாகி விடுவாரோ என அச்சப்படுகிறோம். அதற்கு முன்னர் அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும்" என கவலையுடன் பேசி முடித்தார் சுகுமாரின் சித்தி.