தமிழகத் திருக்கோவில் வரிசை குன்றக்குடி - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2016 (சனிக்கிழமை)
முருகனின் படைவீடுகளில் ஐந்தாவது படைவீடாகிய குன்றுதோறாடலில் சுருளிமலை, இலஞ்சி, குன்றக்குடி, விராலிமலை, வயலூர், வைத்தீஸ்வரன் கோவில், திருத்தணி, ஆகியவை அடங்குவதாக முருகன் புகழ் பேசும் பழைய புத்தகங்கள் பகர்கின்றன. ஆனாலும் பின்னாளில் திருத்தணியே ஐந்தாவது படை வீடாகப் பொதுவாக அனைவராலும் கொள்ளப்படுகிறது.
காரைக்குடியிலிருந்து மேற்கே சுமார் 14 கி.மீ தூரத்தில் குன்றக்குடிக் குமரன் கோவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து காரைக்குடி வரும் வீதியில் பிள்ளையார் பட்டியை அண்மித்ததுமே குன்றின் மேலிருக்கும் குமரன் கோயில் கிழக்கே கண்ணெதிரே தெரிகிறது. குன்றக்குடி கிராமம் நெருங்கி வரவர வீதி ஓரத்திலேயே குன்றமும் கோயிலும் பளிச்சிடுகிறது. குன்றின் மீதமர்ந்துள்ள குன்றக்குடிப் பெருமான் அன்பர்கள் நினைத்ததை வழங்கும் அருளாளராகத் திகழ்கிறார்.
முருகப் பெருமானின் வாகனமான மயில் ஒரு குன்றுருவில் இருந்து வழிபட்டதால் இந் நகர் மயூரகிரி என்றும், குன்றக்குடி என்றும் அழைக்கப்பட்டமையை அருணகிரிநாதர் தமது இரு வேறு திருப்புகழ் வரிகளில் வைத்துப் பாடியுள்ளார்.
1) ………………………………………………………………………..
…………………………………………………………………………
“ மாமது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
மயூர கிரிமேவு பெருமாளே
2) ……………………………………………………………………….
……………………………………………………………………….
“ குறுமுனி யின்பப் பொருள்பெற அன்றுத்
பனமனு வுஞ்சொற் குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளா் கந்தப் பெருமாளே ”
மயிலின் அமைப்பினை ஒத்த மலைக்குன்றில் வந்தமர்ந்துள்ள ஆறுமுகன், மயிலின் வேண்டுதலை ஏற்று, குன்றிலிருந்து சிறிதளவு தூரத்தில் தன் திருக்கைவேலினால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப்பொய்கை காணப்படுகிறது.
மலையடிவாரத்தில் முற்றும் பழுதடைந்த நிலையில் ஒரு தேரும், பிற்காலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தேர், தேரின் தரிப்பிடத்தில் காணப்படுகிறது.
மலைக்குன்றில் ஏறுவதற்கு சமதளத்திலிருந்து நூற்றுக்கணக்கான படிகள் காணப்பட்ட போதிலும், ஓரளவிற்கு மேலே படிவரிசை போலல்லாத செதுக்கப்பட்ட மலைச்சரிவினூடாகச் சிரமம் எதுவுமின்றிச் செல்ல முடிகிறது. இடையிடையே இளைப்பாறிச் செல்ல நான்கு கால் மண்டபங்களும் அமைத்துள்ளனா். கீழ்க்கோயில் என்றும், மலைக்கோயில் என்றும் குன்றக்குடிக் கோயில் இரு பகுதிகளாக உள்ளது.
மலையடிவாரத்தில் பெருமளவு மலையைக் குடைந்தே அமைக்கப்பட்டுள்ள கீழ்க் கோவிலில் சுயம்புலிங்க வடிவான தேனாற்று நாதருக்கும் அழகம்மைக்கும் அகஸ்தியருக்கும் சந்நிதிகள் உள்ளன. இப் பகுதியிலேயே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. இவைகளில் மலைக்கொழுந்தீசர் சந்நிதியில் மலையில் செதுக்கப்பட்டுள்ள துவார பாலகர்கள், வலம்புரி விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, சிவபெருமான், துர்க்கை, சங்கரநாரயணர், சிவனின் நடனத் தோற்றம் முதலிய சிற்பங்கள் அற்புதமாக உள்ளன. குடைவரைக்களைக் காணும்போதெல்லாம் அவைகள் பல்லவ மன்னர்களோடு தொடர்புபட்டவையாகப் பொதுவாகக் கூறப்படுவது. வழக்கம் பாண்டிய நாட்டில் என்றுமே பல்லவர்கள் காலடி வைத்தததாகச் சரித்திரச் சான்றுகள் இல்லாததால் இந்தக் குகைக்கோயில் பாண்டிய மன்னர்களின் கைவண்ணமே என உறுதிபடக் கூறலாம்.
கீழ்க் கோவிலிருந்து 99 படிகள் மேலேறிச் சென்றதால் வல்லப விநாயகர் சந்நிதியும், மேலே அப்பால் இடும்பன் சந்நிதியும் காணப்படுகிறது. மேலும் 34 படிகள் மேலேறி வர மலைக் கோவிலின் வாசலில் வீரபாகுதேவரின் ஆலயம் உள்ளது. தெற்கு நோக்கியுள்ள பிரதான வாசலினை அழகிய அளவான உயரமுள்ள ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. ஒரே பிரகாரத்தினையுடைய
இவ்வாலயத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்திற்கு நாம் வந்துள்ளோம் மூலவர் கிழக்குப் பார்க்க அமர்ந்திருப்பதால் ( நாமும் முறை தவறாது ) வலஞ்சுழியாக அந்த ஒற்றைப் பிரகாரத்தை வலம் வருகிறோம். நால்வர், சொர்ணகணபதி, தெட்சணாமூர்த்தி சந்நிதிகள் கடந்து, சோமஸ்கந்தா் – உற்சவா் – மூலவா் அமர்ந்துள்ள கருவறைப் பகுதியைச் சுற்றி வலமாக வடபுறம் வந்தால் குழந்தைவடிவேலா், நடராஜா் சந்திரன், பைரவா், சண்டிகேஸ்வரா் ஆகியோர் சந்நிதிகளைத் தரிசிக்க முடிகிறது.
எமது பிரகார வலத்தினை முடித்து வர, அடுத்துள்ள அலங்கார மண்டபத்தில் சோமஸ்கந்தரும், மறுபுறம் ஆறுமுகப் பெருமானின் உற்சவ மூர்த்தமும் உள்ளன. கருவறையில் ஆறுமுகங்கள் – பன்னிரு கரங்களுடன் – தேவியர் இருவருடனும் - தனித்தனி மயில்களின் மீது கிழக்கு நோக்கியபடி ஆறுமுகப்பெருமான் அருள் பாலிக்கிறார். சிரித்த முகத்தோடு சிந்தை கவரும் சிங்கார வேலன், வழமையான திருவுருவத்தினை விடவும், சற்று பருத்த - உயர்ந்த திருவுருவமும், அழகிய அலங்காரமும் நம்மை ஆட்கொள்ள மனம் ஒன்றிக் கைகூப்பித் தொழுகிறோம். கருவறையின் முன்னுள்ள பரந்த மண்டபப் பகுதியின் நடுவே மயில் – பலிபீடம் - தம்பம் ஆகியவை உள்ளன. சிவஸ்தலங்களிற் காணப்படும் நந்திக்குப் பதிலாக இங்கே முருகக் கடவுளின் வாகனமாக மயில் வீற்றிருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கை மன்னராக விளங்கிய பெரிய மருதுவுக்கு ஏற்பட்ட நோயைத் தீா்த்தவா் குன்றக்குடிக் குமரன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீர சுவர்க்கம் அடைந்த பெரிய மருதுவும் - சின்ன மருதுவும் சகோதரா்கள். இருவரும் குன்றத்து முருகன்மீது கொண்ட பக்தியினால் சிதலமடைந்திருந்த ஆலயத்தை திருத்திப் புதுப்பித்தது இவர்களே எனவும் ஸ்தல புராண வரலாறு மேலும் கூறுகிறது. கருவறைக்கு முன் உள்ள மண்டபத் தூண்களில் எதிரெதிரே மருது சகோதர்களின் சிற்பங்கள் வணங்கும் முறையில் உள்ளன.
இந்த மண்டபம் தாண்டி சிறிய கிழக்கு வாசல் வழியே வெளியே வந்தால் சிறிய மண்டபம் ஒன்றுக்கு வருகிறோம். சில தூண்களுடனும், பாதுகாப்பு அரைச்சுவரும் கொண்ட அந்த மண்டப விளிம்பில் நின்று பார்த்தால், குன்றத்துச் செங்குத்தான சரிவும், கீழ்க் கோவிலைச் சுற்றியுள்ள வீதியின் சில பக்கங்களும் , வயல் வெளிகளும், கிராமங்களும் கொண்ட ரம்மியமான தோற்றம் தெரிகிறது. இந்த கிழக்கு வாசல் வழியாக வேறு எவ்வித பயன்பாடும் இல்லை.
வைகாசி விசாகம், ஐப்பசியில் கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்தரம் முதலியன இத்தலத்தின் முக்கிய விழாக்களாகும் பால்காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக் காவடி, சர்ப்பக் காவடி என பலவகையான காவடிகள் எடுத்து வழிபாடியாற்றி தாம் விரும்பிய வரங்களை அன்பர்கள் முருகனிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.
முருகன் புறப்பாடு உட்பட சகல காரியங்களும் தெற்கு கோபுரவாசலூடாகவே நடைபெறுகிறது. நாமும் கோபுரவாசல் வழியாக, வெளியே வந்து கீழிறங்கி மலையடி வாரத்திற்கு வருகிறோம். எதிரேயுள்ள வீதி கடந்து சென்றதால், வடக்குப் பார்த்தபடியுள்ள அழகான மணிமண்டபத்தைப் பார்க்கிறோம். பிற்காலத்தில் குன்றக்குடி கோவிலின் புனரமைப்புப் பணிகளில் முன்னின்று உழைத்தவரும், இலங்கைக்குப் பலமுறையும் வந்து பல்வேறு கோவில்களிலும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியவரும், தலைசிறந்த சைவசமய சொற்பொழிவாளருமான குன்றக்குடி அடிகளாரின் நினைவாக இந்த மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் மையத்தில் பளிங்குக் கல்லினால் ஆக்கப்பட்ட குன்றக்குடி அடிகளாரின் மார்பளவுச் சிலை மாலையணிவிக்கப்பட்டு அழபகுற உள்ளது. கலையம்சங்கள் பொருந்திய தூண்கள் கொண்ட சிறிய பிரகாரம் பார்ப்பதற்கு ஒரு சிறிய கோவில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வாழுங்காலத்தில் அவர் கலந்துகொண்ட பெரிய அளவிலான புகைப்படங்கள் மூன்று பக்கங்களிலும் பார்க்க முடிகிறது. தமிழ் நாட்டின் பல முதலமைச்சர்கள், அரசியற் பிரமுகர்கள், சினிமா நட்ஷத்திரங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மிக அதிகமாகவே மண்டத்திற் காணப்படுகின்றன.
மண்டப வாசலில் நின்றபடியே நிமிர்ந்து வடக்கே பார்த்து குன்றக்குடி மலையையும் குமரன் கோவிலையும் வணங்கி விடைபெற்று, நமது அடுத்த திருக்கோயிற் பயணத்தைத் தொடருகிறோம்.
நன்றி : ஞானச்சுடர், வைகாசி 2014
அடுத்த வெள்ளி : “ வள்ளிமலை ” தினைப்புனம் காத்து நின்ற வள்ளியைப் பல திருவிளையாடல்கள் புரிந்து கைப்பிடித்த வள்ளல் “ முருகன் ” விரும்பி வீற்றிருக்கும் திருத்தலம் “ வள்ளிமலை ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.