1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள்.
யாழ்ப்பாண மக்கள் தங்கள் உயிரை விடப் பெறுமதியாக மதித்த யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்று 45 ஆண்டுகளாகிவிட்டன.
எனினும் யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட அந்த ரணம் இன்னமும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாறவில்லை.
இந்த நாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில், மக்கள் சமூகம் வெறுக்கத்தக்க இச்செயல் நடந்தாகியதென்பது இங்கு சுட்டிக் காட்டப்படுவது அவசியம்.
ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மிக உயர்ந்த அரசியல் இராஜதந்திரம் மிக்கவராக அறியப்பட்டவர்.கூடவே சிறந்த கல்வியாளராகவும் அவர் இனங்காணப்படுகிறார்.
நிலைமை இதுவாக இருக்கையில், தென் கிழக்காசியாவின் முதன்மைக்குரிய நூலகமாக மதிக்கப்படும் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்குவதென்ற மனநிலை எப்பேற்பட்டதென்பதை ஒருகணம் நினைத்துப்பாருங்கள்.
ஆம், அப்போது மகாவலி அபிவிருத்தித் திட்ட அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து யாழ்.பொது நூலகத்தை எரியூட்டியதாக நம் யாழ்ப்பாண மக்கள் இப்போதும் கூறுவர்.
அந்தோ! கொடுமை. கற்றறியாத கயவரும் முக்திநெறியறியாத மூக்கரும் செய்ய நினையாத ஒரு பெரும் பாதகத்தை கற்றறிந்த ஓர் அமைச்சர் யாழ்ப்பாண மண்ணில் தங்கியிருந்து, யாழ்.பொது நூலகத்தை எரியூட்டினா ரெனில், அதை எப்படி - என்னவென்று கூறுவது.
ஆம், யாழ்ப்பாண மக்களை அழிப்பதாக இருந்தால், அதற்கான ஒரேவழி யாழ்.பொது நூலகத்தை எரித்துவிட வேண்டும் என நினைத்த சிறுமைத்தனத்தின் விளைவே அதுவாகும்.
இந்த உலகம் இயங்கும் காலம் வரை சிங்கள சமூகத்தால் கழுவாய் தேட முடியாத குற்றமாக - பாவகாரியமாக யாழ்.பொது நூலக எரிப்பு என்றும் இருக்கும்.
உண்மை. இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில்; யாழ்ப்பாண மக்கள் யாழ்.பொது நூலகத்தை வழிபடு கோயிலாக மதிக்கின்றனர். அவர்கள் நூலகத்திற்குள் பாதணிகள் அணிவதில்லை.
அத்தகைய பொது நூலகத்தை இனவாதத்தின் பெயரால், எரியூட்டியது எத்துணை கொடுமையானது எனக் கூறியதை யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்று 45 ஆண்டுகள் நிறைவடைகின்ற இவ் வேளையில் நினைத்துப் பார்க்கின்றோம்.
உண்மை. இன்னும் 25 ஆண்டுகள் கடக்கும் போது, யாழ்.பொது நூலகத்தை எரியூட்டிய சிங்களத் தரப்புகள் இந்த நாட்டின் தேசத் துரோகிகள் என்பதாக சிங்கள சகோதரர்கள் பிரகடனம் செய்வர். இது நிச்சயம் நடந்தேயாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.