வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் திருக்கோவில் பிரம்மோற்சவம் 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கால சூழ்நிலை காரணமாக நடைபெறாத போதிலும், இவ்வருடம் (2022 இல்) பிரம்மோற்சவம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது.
03.03.2022 வியாழக்கிழமை அன்று பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவம், 18.03.2022 வெள்ளியன்று நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வருகிறது.
கொடியேற்றத்தன்று இரவு விக்னேஸ்வர யாகாராம்பத்துடன் ஆரம்பமாகும் கணபதி திருவிழா 06.03.2022 அன்று பகல் தீர்த்தக் கிணற்றில் நடைபெறும் தீர்த்ததுடன் நிறைவுக்கு வரும்.
அன்று இரவு சுப்பிரமணியர் யாகாராம்பத்துடன் ஆரம்பமாகும் முருகன் திருவிழா 09.03.2022 பகல், தீர்த்தக் கிணற்றில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் முடிவுக்கு வரும். அன்று (7 ஆம் திருவிழா) இரவு இறைவனுக்குச் சந்திரசேகர் பட்டம் சூட்டும் திருவிழா நடைபெறும்.
14.03.2022 பகல் காசி யாத்திரையும் (கோவில் பின் வீதியிலுள்ள வழுக்கல் மடத்தில்) அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் உற்சவமும் நடைபெற்று முடிய, இரவு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். விசேட மேளதாள வாத்தியங்களுடனும், வேறு சில விசேட நிகழ்ச்சிகளுடனும் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தேறுவதே வழமையானது. 2 ஆம் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும் உற்சவம் காணப் பெண்கள் மிக அதிகமாக வருகை தருவார்கள். திருமண நிகழ்வு முடிந்ததும் எம்பெருமான் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தண்டிகையில் வீtதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.
16.03.2022 புதன்கிழமை (14 ஆம் திருவிழா) மாலையில் பிட்சாடணமூர்த்தி பிச்சை ஏற்கப் போகும் விழா நடைபெறும்.
17.03.2022 வியாழக்கிழமை (15 ஆம் திருவிழா) காலையில் பஞ்சரத பவனி நடைபெறும். எம்பெருமானும் – அம்பிக்கையும் பெரிய சித்திரத்தேரிலும், ராஜராஜேஸ்வரி அம்பாள் கட்டுத்தேரிலும், கணபதியும் முருகனும் இரண்டு சித்திரத்தேரிலும், குட்டித்தேரில் சண்டிகேஸ்வருமாக பஞ்சரதங்களும் பவனிவரும் அழகு காணக் கண் கோடி வேண்டும்.
வீதி நிறைந்த அடியார் கூட்டத்துடன், ஆண்கள் ஒரு பக்கமும் – பெண்கள் ஒரு பக்கமாகத் தேர் வடம் பிடித்து இழுப்பதும், குழந்தைகள் குதூகலமாக விளையாடித் திரியும் காட்சிகளும் ரம்மியமானவை.
18.03.2022 வெள்ளிக்கிழமை (16 ஆம் திருவிழா) தீர்த்தோற்சவம். வழக்கம் போல காலையில் ஊறணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடுவதாக உத்தேசிக்கப்பட்டிருப்பினும், அந்த நேரத்து நிலைமைக்கு ஏற்றபடி மாற்றம் நிகழ வாய்ப்புண்டு.
இரண்டு வருடம் நடைபெற முடியாதிருந்த பிரம்மோற்சவம் இம்முறை எவ்வித விக்கனமுமின்றி செவ்வனே நிறைவேற எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் பாலிப்பானாக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.