":ஓளவைப்பிராட்டி கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்:; என்பதற்கிணங்க வீதிக்கொரு கோயில் கட்டி வல்வைமக்கள் குடியிருந்தார்கள். இக்கோயில் காங்கேசன்துறைச்சாலையில் வல்வைச் சந்தியிலிருந்து 300 யார் தொலைவில் மேற்குத்திசையில், முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தென்திசையில் "இராசின்தான்கலட்டி"; என்று சொல்லப்படும் 60 பரப்புக்காணியில் அமைந்து உள்ளது. திரைகடல் ஓடித் திரவியம்தேடி, அத்திரவியங்களின் துணைகொண்டு ஆகம சிற்பசாஸ்த்திர முறைப்படி அழகிய சிற்பங்கள் நிறைந்த வான் உயர்கோபுரத்துடன் அமையப்பெற்றதுமான வைத்தீஸ்வரன் ஆலயமாகும்.
இக்கோயில் 2004 ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று 20 வருடங்களின் பின்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் வல்வை சிவன் அடியார்கள் உதவியுடன் திருப்பணிகள் நிறைவுபெற்று தை (மாதம்)திங்கள் 28ம் நாள் (10 -02 -2025) திங்கட்கிழமை காலை 6.45 முதல் 7.45 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நிகழவுள்ளது.
சிவன்கோயிலின் வரலாற்றை எழுதும் முன்னர் இதன் ஸ்தாபகர் வெங்கடாசலம்பிள்ளை அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். திரு. வெங்கடாசலம் பிள்ளை அவர்களின் தந்தையாரான திருமேனியாரின் தந்தையார் ஐயம் பெருமாள் வேலாயுதர் என்பவர் அரசாட்சியினரால் ";அடப்பன்" என்ற பதவி வழங்கப்பெற்றவர். இது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலம் வாழ்ந்த முன்னணிப்பிரமுகர் வரிசையில் வல்வெட்டித்துறையைச் சார்ந்த மேற்குறிக்கப்பட்ட ஐயம்பெருமாள் வேலாயுதர் என்பவரைப் பற்றியும் அவரது புத்திரர்கள் பற்றிய விபரமும் யாழ்ப்பாணத்தின் பழைய வரலாறு கூறும் "யாழ்ப்பாண வைபவ கௌமுதி"; எனும் நூலின் 12ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நூல் 1918 இல் வசாவிளான் க.வேலுப்பிள்ளை அவர்களால் எழுதப்
பட்டது. கடலில் மூழ்கிய "அத்திலாந்திக் கிங்"; என்னும் கப்பலை மூழ்கிய நிலையிலேயே விலைக்கு வாங்கி அதனை மீட்டெடுத்து அதன்மூலம் வணிகம் செய்து இக்கோயிலை ஸ்தாபித்தார். திருமேனியார் புத்திரர்களில் ஒருவரான குழந்தைவேற்பிள்ளை கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுதர்சுவாமி கோயிலையும் பர்மாவிலுள்ள முருகன் கோயிலையும் ஸ்தாபித்தார். இன்னொரு புதல்வரான பெரியதம்பியார் அல்லது பெரியவர் என அழைக்கப்படும் வெங்கடாசலபிள்ளை என்பவரே மேலே கூறப்பட்ட வைத்தீஸ்வரர் கோயிலைக் கட்டுவித்தார்.. ஆலயத்தின் லிங்கம் பாணலிங்கம் என்று சொல்லப்படுகிறது. காசி சென்று லிங்கத்துடன், உற்சவ மூர்த்திகளாகிய நடேசர், சந்திரசேகர் ஆகியவற்றை ஆ.விஸ்வநாதபிள்ளை அவர்கள் கொண்டுவந்து சிறப்பித்தார்.
1867 ம் வருடம் அத்திவாரம் இடுதலாகிய சங்குத்தாபனம் செய்வித்தார். இக்கோயில் 08 06 -1883 இல் நூதனப்பிரதிட்டா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அடுத்து முறையாக ஆறுகாலப் பூசைகள் நடைபெறலாயின. முதன் முதலாக புலோலியைச் சேர்ந்த பிரம்மஶ்ரீ சண்முகநாதக் குருக்கள் பூசைகளை நடத்தினார். வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த பிரபுக்களில் ஒருவுரான காசிநாதர் வயித்திலிங்கம் என்பவர் 1901ம் வருடம் வசந்தமண்டபத்தினை கருங்கல்லினால் கட்டிக்கொடுத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த தெலுங்குதேச வர்த்தகரான காரஞ்சேடு ஏர்லக்கட்டர் அரங்கநாயுடுகாரு என்னும் பிரபு முன்வாசல் மண்டபத்தையும் கோபுர அடிப்பாகத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளார். வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச.வயித்திலிங்கப்பிள்ளையவர்கள் (1943 -1900) எசமானர்களுக்கு கோயில் கட்டுவதற்கும் பூசைக்கிரமங்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் சரீர உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்.
வல்வைப் பிரபு விஸ்வநாதர் சரவணமுத்துப்பிள்ளை என்பவர் நடராஜர் மண்டபத்தை அமைத்துக் கொடுத்ததோடு கோயில் வாசல் பெருவீதிக்கு தனது நிலத்தின் பகுதியைக் கொடுத்தார். கம்பர்மலையைச்சேர்ந்த வல்லியப்பர் வேலுப்பிள்ளையும் பெண் பார்வதிப்பிள்ளையும் பல திருப்பணிகளைச் செய்து கொடுத்துள்ளார்கள். திருமேனிப்பிள்ளை அவர்கள் காலத்தில் 1919 ம் வருடம் அமிர்தானந்த சுவாமிகள் என்னும் அந்தணப்பெரியார் தென் இந்தியாவில் இருந்து வல்வைக்கு வந்து ஊரவர்கள் அயலவர்களின் பொருள் உதவியுடன் பிரதிஷ்டா கும்பாபிஷேகம்
செய்வித்தார். ராஜ கோபுரத்தை 1939ம் வருடம் வல்வைப்பெரியார் சி.செல்லத்துரைப்பிள்ளை அவர்கள் அமைத்துக் கொடுத்தார். வல்வையில் உள்ள சிவநேயப் பிரபுக்களான திருவாளர்கள் சி.விஸ்ணுசுந்தரம், அ.துரைராசா, ச.ஞானமூர்த்தி(அப்பா), க.சோமசுந்தரம் ஆகியோர் ஒன்று கூடித் திருப்பணிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு 25 -06 -1966 இல் பாலஸ்தானம் செய்யப்பட்டது. பூச்சு வேலைகளுக்கான மைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்ட்டு திருபணிகள் யாவும் நிறைவெய்தியபின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 28 ஆம் திகதி (11 -06 -1967) பிரம்மஶ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் அவர்களினால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.
குடமுழுக்கு மலர் ஒன்று வெளியிட்டதோடு கோயில் வாசலையும், பருத்தித்துறை உடுப்பிட்டி வீதி திறக்கப்பட்டு அதற்கு சிவபுரவீதி எனவும் நாமம் சூட்டப்பட்டது. 1977ம் வருடம் மா.குமாரசாமி அவர்களால் உற்சவமூர்த்தி செய்விக்கப்பட்டு தைப்பூசத்தன்று பிரதிட்டை செய்யப்பட்டது. தேர் உற்சவத்தினை நடாத்தும் வல்வெட்டி அடியார்களினால் சோமாஸ்கந்த சுவாமிக்கு சித்திரத்தேர் ஒன்றும் செய்து முடிக்கப்பட்டது. வல்வைப் பெரியார் எஸ்.வைரமுத்து அவர்களினால் வெள்ளி இடபவாகனம் செய்துகொடுக்கப்பட்டது. திரு.வடிவேல் (கார்வண்ணசாமி) அவர்களினால் 1978ல் பஞ்ச லோகத்தினால் ஆன ஶ்ரீதேவி, பூதேவி சமேத மாகாவிஷ்ணு உற்சவமூர்த்தி செய்து பிரதிட்டை செய்யப்பட்டது. திரு.கு.இரத்தினசிங்கம் அவர்களினால் மூல மூர்த்திகளான சரஸ்வதி, அபிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியவை பிரதிஷ்டை செய்விக்கப்பட்டன.
85, 86, 87ம் வருடங்களில் இராணுவ முகாம்களிலிருந்து வந்த ஏவுகணைகளினால் 1893ம் வருடமளவில் சி.சந்திரசேகர் அவர்களினால் கட்டப்பட்ட மடம் (புட்டணிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில்), கோபுரத்திற்கு கிழக்கில் பொ.தங்கவேலாயுதம் அவர்களால் கட்டப்பட்ட தும் வேறு மடங்களும் அழிவுற்று திருத்தி அமைக்கப்பட்டன. ஆதிகோயிலடியைச் சேர்ந்த வல்லியப்பர் முருகுப்பிள்ளை அவர்கள் கந்தசஷ்டி உற்சவகால சூரனையும் வல்வை முத்து
மாரிஅம்மன் சூரனையும் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தவர். அவர்களின் வழித்தோன்றலான நடராசா வள்ளியம்மாள் அவர்கள் 12ம் உற்சவம் நடைபெறும் கல்யாண மண்டபத்தையும் அமைத்துக்கொடுத்தார்.
நாட்டில் ஏற்பட்டகுழப்பம் சீரானபின் கும்பாபிஷேகத்தை வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 07 -05 -2003ல் பாலஸ்தாபனம்செய்யப்பட்டது. அடியார்கள் பலரின் உதவியுடன் திருப்பணி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 04 -02 -2004 அன்று சுபவேளையில் வைத்தீஸ்வரப்பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சிவஶ்ரீ.ப.மனோகரக்குருக்கள் அவர்களினால் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.
திருமேனியார் வெஙகடாசலபிள்ளை (பெரியதம்பியார்) பரம்பரை ஆதீனகர்த்தாக்கள் இளையவர்கள் தற்போது எசமானர்களாக இருந்து செவ்வனே சிவன்பணியை தொடர்கிறார்கள். இருபது வருடங்களின் பின்பு 10 -02 -2025ல் நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் எம்பெருமானின் திருக்கருணை கிட்டுவதாக.
துணைநூல்கள்
";ஈழத்துச் சிவாலயங்கள்". - வைத்தீஸ்வரர்பற்றி மனோகரக் குருக்கள். வெளியீடு - திருக்கேதிஸ்வரம் தொண்டர்சபை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.