சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் தினமும் இன்று இடம்பெற்றது, கலையரங்கம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2014 (சனிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் மற்றும் நிறுவனர் தினமும் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.கி.இராசதுரை அவர்கள் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.சி.நந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தார்.
பிற்பகல் 0215 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சிதம்பராக் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சுந்தரப்பெருமாள் கோயிலில் இடம்பெற்ற வழிபாட்டினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் விருந்தினர்களான திரு.சி.நந்தகுமார், திருமதி யமுனா நந்தகுமார் (அதிபர், யாழ் பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலை), திரு.ஸ்ரீபதி (தலைவர், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்) மற்றும் திரு.குலநாயகம் ( முன்னாள் தலைவர், சிதம்பராக் கல்லூரிபழைய மாணவர் சங்கம்) பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
கலையரங்கம் மற்றும் ஆய்வு கூடங்கள் திறந்து வைப்பு
மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள கலையரங்கம் விழாவின் பிரதம விருந்தினர் திரு.நந்தகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள பெளதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வு கூடங்கள் திரு.நந்தகுமார், திருமதி யமுனா நந்தகுமார் மற்றும் திரு.ஸ்ரீபதி ஆகியோர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த ஆய்வுகூடங்களை கடந்த 2 வருடங்களாக CWN (Chithambara well wishers network) புணருத்தாரணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலையரங்கமும் கடந்த வருடம் CWN (Chithambara well wishers network) இனுடைய முயற்சியினால் புணருத்தாரணம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நிகழ்சிகள் சுமார் 0245 மணியளவில் ஆரம்பமாகியது. நிகழ்வுகளாக பாடசாலை மாணவ மாணவிகளின் நாடகம், நடனம் மற்றும் பாட்டு என்பன இடம்பெற்றன.
நாடகங்களாக 'சிரியுங்க பாஸ்' மற்றும் 'கல்வியை மறுக்காதே' என்னும் 2 நாடகங்கள் அரங்கேறியிருந்தன.
நிறுவனர் உரை
நிகழ்வின் ஒரு அங்கமாக நிறுவனர் உரை இடம்பெற்றிருந்தது. நிறுவனர் உரையை முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.குலநாயகம் அவர்கள் ஆற்றியிருந்தார்.
பரிசில்கள் மற்றும் பதக்கங்கள்
சுமார் 0430 மணியளவில் பரிசில்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
உரைகளைத் தொடர்ந்து நிகழ்வுகள் மாலை 7 மணியளவில் நிறைவுபெற்றன.
சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினம் கடந்த 11 ஆம் திகதி என்பதும், இதனை முன்னிட்டு பிரபல ஆங்கில நாளிதழான Sunday Times கல்லூரி பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை கடந்த 26 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.