போதைப் பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் சீரழியும் இளம் சமூகம்..
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2022 (வெள்ளிக்கிழமை)
யுத்தம் காரணமாக சிதைவடைந்த இந்த சமூகத்தின் மீள் உருவாக்கத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய இளம் சந்ததியினரும் பாடசாலை மாணவர்களும், அண்மைக் காலமாக போதைப்பொருள் பாவனையில் சிக்கி வருகின்றமை மிகுந்த மன வேதனையான ஒரு சம்பவமாகும்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.
போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தது.
இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று போதைப்பொருள் பாவனை. பொழுதுபோக்கிற்காகவும், சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப்பொருட்கள் உடல் நலத்திற்கு கேடுவிளைவித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றன.
இன்றைய இளம் சமுதாயம் பரவலாக போதைப்பாவனைக்கு உட்பட்டு வருகின்றது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பழக்கம், நாளடைவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.
இளம் தலைமுறையாகக் கருதப்படுகின்ற மாணவர்கள் போதைப்பாவனைக்கு அடிமையாக மாறிவருவது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மாணவர்கள் போதைவஸ்துக்களுடன் கைது செய்யப்படுவதும், போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு மாட்டிக்கொள்வதும் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன.
மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதற்கான பிரதான காரணமாக அமைவது அவர்களின் வீட்டுச்சூழல். வீட்டில் வசிக்கும் யாராயினும் ஒருநபர் மதுபானம்,புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவோராக இருந்தால், அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனைப் பயன்படுத்த தூண்டப்படுவர்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். யார்யாருடன் நட்புக் கொள்கின்றார்கள் என கண்காணிக்க தவறி விடுகின்றார்கள். இதனால் போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் இளம்பராயத்தினரை இலக்கு வைத்து தமது வியாபாரத்தை மேற்கொள்ள இலகுவாக உள்ளது.
அத்தோடு போட்டிச்சூழலை எதிர்கொள்வதில் உள்ள பயம், தகாத நட்புக்கள், குடும்ப மற்றும் சமுதாய பிரச்சினைகள், அதீத பணப்பழக்கம் மற்றும் கவனிப்பாரற்ற நிலை ஆகியன இளம்பருவத்தினரை போதைப்பொருட்களை நோக்கி இழுத்துச் செல்கின்றன.
முன்னொரு காலத்தில் போதைப்பொருட்களை காணக்கிடைப்பதே அரிதாக காணப்பட்டது. ஆனால் தற்போது ஒவ்வொரு வீதிகளில் காணப்படும் சிறுகடைகள் தொடங்கி அனைத்துக் கடைகளிலும் மதுபானங்களும், சிகரட் புகையிலை போன்ற புகைத்தல் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனைத் தடுக்க கடுமையான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும் அதனைக் கட்டுப்படுத்துவதென்பது சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது.
பொது இடங்களில் மதுபானம் அருந்துவதோ, சிகரட் புகைப்பதோ கூடாது என்பது பரவலாக கடைப்பிடிக்கப்படும் விதிமுறை.
ஆனால் அதனை புறக்கணித்து சமூக அக்கறையற்று பொதுமக்கள் கூடும் இடங்களில் இத்தகைய தகாத நடவடிக்கைளில் ஈடுபடுவோரை காணலாம்.
இதற்கெல்லாம் முதற்காரணமான போதைப்பொருட்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்தினால் மாத்திரமே போதையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியம்.
சாதாரண மக்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது சினிமா. சிலர் சினிமா திரைப்படங்களில் வரும் குடிபோதைக் காட்சிகளை நாகரீகமாகக் கருதி போதைக்கு அடிமையாகின்றனர்.
திரைப்படங்களில் அவ்வாறான காட்சிகளை வைக்காது சமூக அக்கறையோடு நடந்து கொள்ளல் அவசியமாகும்.போதைப்பொருட்களின் அதிக வரியினை விதிப்பதும், சட்டதிட்டங்களை கடுமையாக்குவதும் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான வழியாகும்.
ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாராயின் அவர் நினைத்தால் அப்பழக்கத்திலிருந்து மீளெழுந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
பெற்றோர்கள் தம்பிள்ளைகள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என அறிந்து கொண்டால் அவர்களை குற்றம் சொல்வதோ, தண்டிப்பதோ கூடாது.
அவர்களை அரவணைத்து போதைபழக்கதால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்து கூறி அவர்களை அப்பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக வெளிக்கொணர வேண்டும்.
மறுவாழ்வு மையங்களுடாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமும் போதையிலிருந்து மீண்டுவர முடியும்.
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடுவிளைவிக்கும் போதைப்பொருட்களின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுதாக ஒழிக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்போரிற்கு சிறைத்தண்டனைகளை வழங்குவதோடு, பதினெட்டு வயதிற்கு குறைவானோருக்கு மதுபானம், சிகரட் போன்றனவற்றை விற்பனை செய்வோருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
நம் சமூகத்தின் நன்மை கருதி நம் சிறார்களின் எதிர்காலம் கருதி சுயநலமாக சிந்திக்காமல் மிகுந்த பொறுப்புடன் நாம் நடத்து இந்த இளைய சமூகத்தை இந்;த அழிவில் இருந்து பாதுகாக்க நாம் பங்களிப்பு வழங்குவேர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.