தம்பி வினோதனின் `போர் விமானங்கள் தாங்கிய ஆகாய விமானம்` என்னையும் கவர்ந்து, சிந்திக்க வைத்த பட்டம். கப்பலில் பணி புரியும் இரண்டாம் நிலை அதிகாரிக்கு குறித்த காணொளியை இன்று காட்டினேன். குண்டுகள் விழுவதை பார்த்துவிட்டு `இஸ்ரேலின் புதிய தயாரிப்பா` என்றார். `எங்கள் ஊரில் நேற்று நடைபெற்ற பட்டப்போட்டியில் முதலிடம் பெற்ற பட்டம்` என்றேன். சில நொடிகள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். மெய் சிலிர்த்து விட்டேன் - இத்தனை புதுமை இந்தப் பட்டத்துக்குள் என்று.
பெளதிகவியலுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருந்தது - விண்ணில் - பட்டத்தில் `மேலாக` எழுந்த பட்டங்களும், அதிலிருந்து `கீழாக` விழுந்த குண்டுகளும்.
பட்டம் வெறும் ஒரே ஒரு நூலில் ஏற்றப்பட்டது என்பது இன்னுமோர் விடயம்.
ஏற்கனவே முக்கால்வாசிக்கு அதிகமானோர் புலம் பெயர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களில் கனடா விசிட் விசா, லண்டன் Work permit என இளைஞர்கள் பலர் பறக்க, இம்முறை பட்டப் போட்டியில் பட்டங்கள் பெரிதாக இருக்காது........போட்டி ஜொலிக்காது என்று இருக்க.......
13 வருடங்கள் முன்பு ஆரம்பித்த பட்டப் போட்டிக்கு, ஆரம்பித்தில் வெற்றிவடிவேல் ரகு உயிர் கொடுக்க, மறைந்த தம்பி `குட்டி` தாஜ்மகாலை வானில் பறக்கவிட்டு, பட்டப் போட்டியை வடமராட்சியில் இருந்து யாழின் ஏனைய பகுதிகளுக்குள் பறக்கவிட, மகேந்திரன் அண்ணாவும் அவர் மகன் பிரசாந்தும் போட்டியை தென்னிலங்கைக்கு பரப்ப, இம்முறை எல்லாவற்றுக்கும் ஒரு படி மேல் சென்று தம்பி வினோதன் இலங்கைக்கு அப்பாலும் திறமையை கொண்டு சென்றுள்ளார்.
`யார் இந்த வினோதன்` என்று ஊரவர்கள் எல்லோராலும் கேட்கும் அளவுக்கு சென்றுள்ளது. ஏனெனில் கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தை பெற்று, பட்டப்போட்டியின் அசைக்கமுடியாத ஜாம்பவான்களை அசைத்ததே காரணம்.
(புலம்பெயர்ந்தவர்களுக்கு - தம்பி வினோதன் ஊரணி தேனீர் கடை மோகன் அண்ணாவின் கடைசி மகன்).
`கடந்த வருடமே விருப்பப்பட்டது, ஆனால் கடந்த வருடம் கப்பலில் நின்றதால் பட்டம் ஏற்ற முடியவில்லை அண்ணா` என்று இன்று வாழ்த்து தெரிவித்த போது கூறினார்.
10 மில்லியன் Followers கொண்டுள்ள Behindwoods ம் குறித்த பட்டத்தின் காணொளியை தமது பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளது.
10 வருடங்கள் முன்பு இருபரிமானங்களை அகற்றி, முப்பரிமானங்களுக்குள் நுழைந்து - இந்த முறை முப்பரிமானாங்களுக்கும் அப்பால் சென்று தமது அசாத்திய திறமைகளை பட்டக் கலைஞர்கள் வானில் - வல்வையில் - காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு பட்டதின் பின்னாலும் கடும் உழைப்புக்கள் உண்டு. குறித்த இப்பட்டங்களை கட்டுவதை விட, அவற்றை வானில் ஏற்ற வைப்பதே சவாலான பணி. அதுவும் மணிக்கு வெறும் 6-8 கடல் மைல்கள் வேகத்தில் மட்டும் வீசும் குறைவான வேகக் காற்றில்.
ஞானம் ஏற்றிய VAT பட்டம் - பட்டங்களுக்கு அப்பால் - போட்டிகளுக்கு அப்பால் - இன்றைய வாழ்க்கைச் சுமையை - வலியை எடுத்தியம்பும் மிகச் சிறந்த சிந்தனையின் வடிவம்.
பட்டக் கலைஞர்கள் ஒரு புறம் இருக்க, தொடர்ந்து இப்போட்டியை திறம்பட நடத்திவரும் உதயசூரியனின் பணியும் மகத்தானது.
`ஒரே நாட்டுக்குள், இன்னொரு மூலையில் தமிழ் சகோதரர்களிடம் இவ்வளவு திறமை உள்ளது என்பது எவ்வாறு இதுவரை தனக்கும் தன் போன்றவர்களுக்கும் தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாகவுள்ளது என கடந்த முறை இடம்பெற்ற பட்டப் போட்டி ஒன்றின் காணொளியின் கீழ் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அடுத்தவருடம் இடம்பெறப் போகும் பட்டப்போட்டிக்கு, நேற்றய போட்டியாளர்கள் மேலும் பிரமாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
(பிறகுறிப்பு - வெற்றியாளர்களே பேசப்படுவார்கள், தோற்றவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற ஒரு வாசகம் உண்டு. நேற்றைய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து தம்பிமாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், பட்டப்போட்டியின் வெற்றி - தூண்களாகிய நீங்கள் அனைவரும் தான்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.