ஆதவன் பக்கம் (74) – யார் அடுத்த வல்வை நகரசபைத் தலைவர்?
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2025 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (74) – யார் அடுத்த வல்வை நகரசபைத் தலைவர்
தமிழ் தேசிய பேரவை (சைக்கிள்) – 7 (7+0), வாக்குகள் 1558
தமிழரசுக் கட்சி (வீடு) – 5 (3+2), வாக்குகள் 1299
தேசிய மக்கள் சக்தி (NPP – திசை காட்டி) – 3 (0+3)
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP – வீணை) – 1 (0+1)
மேல் உள்ளவை நடைபெற்று முடிந்த வல்வை நகரசபை முடிவுகள் - எந்தவொரு கட்சிக்கும் இடர் இன்றி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.
‘கூட்டு”த்தான் ஒரே வழி
அதிக ஆசனங்கள் பெற்றும் திரு. சிவாஜிலிங்கத்தை தலைமையாகக் கொண்ட சைக்கிளுக்கு தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.
வீடும், சைக்கிளும் தேர்தலின் பின்னர், அறிவிப்பு செய்தது போல் (அதாவது சபையில் யார் முதலாவது கட்சியோ, அவர்களுக்கு இரண்டாவது கட்சி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று) ஆட்சி அமைக்க வல்வையில் வாய்பில்லை, அல்லது மிகக் குறைவு
முடிவுகள் கீழ்வரும் மூன்றில் ஒன்றாக அமையப்போகின்றது
(A) - வீடு + சைக்கிள் கூட்டு = நான் அறிந்தவரை இதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு - காரணம் பரஸ்பர குற்றச் சாட்டுக்களால் பிரிவினை கூடிவிட்டது
(B) - வீடு + NPP = இதற்கான சாத்தியங்கள் தான் அதிகம் (தற்போதைய நிலவரப்படி)
(C) - வீடு + NPP = சைக்கிள் + EPDP = இறுதி நேரத்தில் இப்படியும் அமையலாம். அவ்வாறு அமைந்தால் – நாணய சுழற்சி முறை
மொத்தத்தில் EPDP யின் ஒரே ஒரு வாக்குத்தான் இறுதிநேரம் வரை இரண்டு கட்சிகளின் நிம்மதியை கலைத்து கொண்டிருக்கப்போகின்றது.
EPDPயினால் பரிந்துரைக்கப்பட்ட நகரசபை உறுப்பினர், வெளிப்படையாக ‘தான் எந்த கட்சிக்கு ஆதரவு” என்று பொது வெளியில் இதுவரை தெரிவிக்கவில்லை.
“தன்னையே முடிவு எடுக்கச் சொல்லி EPDP தலைமை கூறியுள்ளதாக” கதைக்கும் போது கூறினார்.
முடிவானது நிலை (B) யின் பிரகாரம் அமைந்தால் – அதாவது “வீடு + NPP” – இதிலும் ஒரு சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.
இறுதி வாக்கெடுப்பில் NPP உறுப்பினர்கள் மூவரும் சுயமாக முன்வந்து, வீட்டுக்கு வாக்களித்தால் பிரச்சனை குறைவு.
“நாங்கள் சிங்கள கட்சியான NPP யிடம் கேட்கவில்லை, அவர்களாக தாமாக முன்வந்து ஆதரவு அளித்தார்கள்” என்று கூறி தமிழரசு கட்சி தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் உத்தியோகபூர்வமாக சென்றால் (அதாவது டீல்), 5 + 3 என்ற ஆசன அடிப்படையில், NPP துணை தவிசாளர் பதவியை கேட்கக்கூடும். ஏன் என்றால் ஆசனங்கள் அடிப்படையில் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் – அப்படி கேட்டால், அது தமிழரசு கட்சியை ஒரு இக்கட்டான சூழலுக்குள் தள்ளிவிடும், ஏன் என்று கூறி தெரிய வேண்டியதில்லை. எதிர்வரும் தேர்தல்களில் இதன் தாக்கம் பிரதிபலிக்கக்கூடும்.
இது மட்டுமல்லாமல், வல்வையில் முதன் முதலாக பிரதி தவிசாளரை நிறுத்திய பெருமை NPP - சிங்கள கட்சிக்கு சேரும்.
இவ்வாறு இடம்பெற்றால், உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்த உடனே, "வல்வையில் தேசியம் வென்றது'' என்று அவசரப்பட்டு - இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் விதிகளை விளங்காமல் - செய்திகளை போட்டுத் தள்ளியவர்களுக்கு மூளை குழம்பிவிடும்.
தமிழரசு கட்சியின் தவிசாளர் தெரிவு திரு,மயூரன் தான் – தவிசாளர் பதவிக்கு பொருத்தமானவர். விளையாட்டு வீரர், ஆசிரியர், முன்னாள் நகரசபை உறுப்பினர், சட்டத்தரணி, அரசியல்வாதி.
நிலை (சி) யை எடுத்துக் கொண்டால் – அதாவது
வீடு + NPP = சைக்கிள் + EPDP
EPDP உறுப்பினர், கட்சியின் நலனின் அடிப்படியில் தான் ஆதரவு கொடுப்பார் – அதாவது ஒரு டீல் – தனக்கு துணை தவிசாளர் பதவி தேவை என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்று சைக்கிள் என்ன கூறிக் கொண்டிருந்தாலும், இறுதி நேரத்தில் EPDP உறுப்பினர் ஆதரவு தெரிவிக்க முன்வந்தால் – அதை வேண்டாம் என்று சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறு ஏற்று நாணய சுழற்சியில் வென்றால் – சைக்கிள் கட்சியானது ஆட்சி, தவிசாளர் பதவியை குறைந்த பட்சம் தக்கவைக்க முடியும்.
அப்படி EPDP யுடன் கூடு சேர்ந்தால், அது சைக்கிள் கட்சியையும் ஒரு இக்கட்டான சூழலுக்குள் தள்ளிவிடும். எதிர்வரும் தேர்தல்களிலும் இதன் தாக்கம் பிரதிபலிக்கக்கூடும். ஏன் என்றால் திரு.கஜேந்திரகுமார் “EPDP யுடன் கூட்டுச் சேரமாட்டோம்” என்று அண்மையில் கூட (அவசரப்பட்டு) கூறியுள்ளார். தமிழரசுக் கட்சியை விட அதிகம் தேசியம் கதைப்பதும் சைக்கிள் காரர்கள் தான்.
சைக்கிளில் தவிசாளர் தெரிவு திரு சிவாஜிலிங்கம் தான். அதற்கு தகுதியானவரும் அவர் தான் என்று கூறி தெரிய வேண்டியதில்லை. வல்வையில் பல அபிவிருத்திகளுக்கு வித்திட்டு விருட்சங்கள் ஆக்கியவர்..
ஆனால் திரு. சிவாஜிலிங்கத்தின் தவிசாளர் தெரிவிலும் ஒரு சிக்கல்.
சைக்கிள் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட 7 நகரசபை வேட்பாளர்களில் திரு சிவாஜிலிங்கம் இல்லை. ஏனெனில் அவர் வட்டாரத்தில் நேரடியாக போட்டியிட்டு இருக்கவில்லை. அதேநேரம் வல்வெட்டித்துறை நகரசபைக்கு, சைக்கிள் கட்சிக்கு எந்த விகிதாசார ஆசனங்களும் கிடைக்கவில்லை.
ஆகவே வெற்றி பெற்ற வட்டார வேட்பாளர்கள் 07 பேரில் ஒருவர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து, திரு.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக வந்தால் மாத்திரமே, அவர் தவிசாளராக முடியும்.
இதுவும் ஒரு நெருடலான விடயம் தான், அதாவது வெற்றி பெற்ற 7 பேரில் யார் முன்வந்து இராஜினாமா செய்வார்கள் என்பது. அவ்வாறு 7 பேரில் ஒருவரை இராஜினாமா செய்யச் சொல்லி கேட்கும் பட்சத்தில், அங்கு கீறல்களுக்கு சாத்தியம் ஏற்படலாம். மாற்றாக 7 பேரில் ஜூனியர் இருவரை தவிசாளராக்கி மற்றும் பிரதி தவிசாளராக்கி, திரு சிவாஜிலிங்கம் பின் நின்று அவர்களை வழி நடத்தலாம்.
கட்சிகள் தங்களின் உறுப்பினர்கள் விபரங்களை அறிவிக்கும் தினம் நேற்றுடன் (15) முடிவடைந்து விட்டது.
50 வீதத்துக்கு மேல் ஏதாவதொரு கட்சி ஆசனங்களைப் பெற்றிருந்தால் சிக்கல் இல்லை. அதாவது இங்கு சைக்கிள் 7 க்கு பதில் 8 ஆசனங்கள் பெற்றிருந்தால், இப்பத்தியை எழுதியிருக்கவே தேவையில்லை.
உறுப்பினர் விபரங்களை மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பும் போது தவிசாளர், உப தவிசாளர் விவரங்களை முன்கூட்டியே தெரிவு செய்து அனுப்ப, அவர்களே தவிசாளர் மற்றும் உபதவிசாளர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் – எதுவித வாக்கெடுப்புக்களும் இன்றி.
யாழில் மொத்தம் 33 சபைகள். உள்ளூராட்சி ஆணையாளரால் முதலில் யாழ் மாநகரசபை, நகரசபைகள் பின்னர் பிரதேசசபைகள் தெரிவுகள் இடம் பெறும். இன்னும் 2, 3 வாரங்களில் தெரிவுகள் இடம்பெறவுள்ளது.
தெரிவு கீழ்வருமாறு அமையும் (வல்வை நகரசபை)
அன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளரால், சகல கட்சிகளிடமும் தவிசாளரை அறிவிக்கும்படி கேட்கப்படும்.
தவிசாளர் பதவிக்கு ஒரே ஒருவர் முன்மொழியப்பட்டால் – அத்துடன் சுபம்.
ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை.
சைக்கிள், வீடு இருவருமே தங்கள் பக்கத்தில் இருந்து ஆளுக்கு ஒருவரை முன்மொழிவார்கள்.
அப்பொழுதும் சில நிமிடங்கள் கொடுக்கப்படும் – வாக்கெடுப்பு இன்றி ஒருவரை தெரிவு செய்ய.
தவறினால் தவிசாளர் தெரிவு வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இங்கும் ஒரு சிக்கல் - அதாவது பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்று.
இரகசிய வாக்கெடுப்புக்கு கேட்கப்பட்டால் – “பகிரங்க வாக்கெடுப்போ அல்லது இரகசிய வாக்கெடுப்போ” என்று ஒரு பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெறும். (குழப்பம் என்றால் மீண்டும் படிக்கவும்)
அதில் இரகசிய வாக்கெடுப்பு என்று வந்தால் – கட்சிகளின் முடிவுகளுக்கு மாறாக உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். (அதாவது அரசியல் கழுத்தறுப்புக்கள்) – முடிவுகள் எதிர்பாராத விதமாக அமையும்.
((சாராயம், 5000 கொடுத்தார்கள் என்ற பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எவருமே தவிர்ப்பது நல்லது. தமிழ் நாடு போல் இங்கும் இவ்வாறு செல்வதை தவிர்க்க முடியாவிட்டாலும், தடுக்க முனைய வேண்டும்.
சில பல வருடங்கள் முன்பு – நகரசபை பட்ஜெட் வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற Protest ஒன்றுக்கு "தன்னை வருமாறு கூறி தனக்கு சாராயப் போத்தல் தரப்பட்டதாக" ஒரு தொழிலாளி என்னிடம் கூறினார் (அவ்வாறு தனக்கு சாராயம் கொடுத்த ''பெருந்தகை'" யின் விவரத்தையும் கூறினார்). என்னால் இன்றும் இதை ஜீரணிக்க முடியவில்லை. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட கலாச்சாரம், இப்போது மெல்ல மெல்ல பரவுகின்றது)).
ஆக மொத்தத்தில் வல்வை நகரசபையில் 'கூட்டு ஆட்சிதான்" என்பது தெளிவு.
குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில், அவ்வாறு கூட்டாட்சி அமைக்கப்போகின்ற கட்சிகள் - முற்று முழுதாக வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள். எதிரிகளாக செயற்படுபவர்கள்.
இவர்களுக்குள் ஆரம்பத்தில் தேன்நிலவு, ஒரு சில மாதங்கள் பின்னர் இல்லறம், அதன் பின்னர் சண்டை, ஏன் விவாகரத்துக்கும் சாத்தியம். வருடந்தோறும் இடம்பெறும் வரவு செல்வு திட்ட வாக்கெடுப்பில் அணிகள் மாறி கழுத்தறுப்புக்கள் கண்டிப்பாக இடம்பெறும்.
கடந்த வல்வை நகரசபைத் தேர்தலிலும் இவ்வாறான முடிவுகள், இவ்வாறான கூட்டு, பிரிவு, சண்டைகள் தான் அதிகம் மிஞ்சியிருந்தன.
அவ்வாறு அமையாமல், 4 வருடங்களும் குறைந்த பட்சம் இல்லறமாக சென்றாலும் – மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தான் இருக்க முடியும்.
ஏன் என்றால், 7 வருடங்கள் முன்பு ''நகரசபை தவிசாளருக்கு 101 கோரிக்கைகள் என நான் எழுதிய விடயங்கள் இன்னூம் Pending இல் தான் உள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: May 18, 2025 at 21:13
ஊரின் வளர்ச்சி மக்களின் வளர்ச்சி
எதிர்கால இளைஞர்களின் சீரழிந்துகொண்டிருக்கும் மன நிலை ஊரில் சரிசெய்யப்படவேண்டிய
என்பவற்றை கருத்தில் கொண்டு
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தவிர்த்து ஒற்றுமையாக செயல்படுவதே சிறப்பாகவும் மக்களுக்கான உண்மையான நேர்மையான சேவையாகவும் இருக்கும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.