ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதையால் வல்வை வளம்பெறும்
பலரிடம் சில வருடங்கள் முன்பு ‘மயிலிட்டி ஹார்பர் விடுபடும்’ என்று கூறியிருந்தேன். ‘கனவு’ என்றார்கள். விடப்பட்டது. மயிலிட்டியை சேர்ந்த ஒரு உறவினர் கூட, ‘இது ஜென்மத்திலும் நடக்காது, தமது காணியும் விடப்படாது’ என்றார். இன்றும் அதுவும் நடந்துள்ளது.
தமிழ் தேசியம் பேசும் பலர் ‘பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் கூடாது’ என்றார்கள். ‘மயிலிட்டியைத் தக்க வைக்க அரசு செய்யும் தந்திரம்’ என்றார்கள். ‘ஆய்வின் அடிப்படையில் அமைந்ததுதான் பருத்தித்துறை ஹார்பர்’ என்றேன் நான். எனது Face book பக்கத்தில் விவரமாக பதிவையும் இட்டேன்.
இவற்றை நான் ஒன்றும் உளவு பார்த்து எழுதவில்லை, இதை அறிந்து கொள்ள எவரின் அருவருடியுமாக இருக்க வேண்டும் என்றில்லை. தற்போதைய அரச நிர்வாகம், மற்றும் இலங்கை மீதான உலக நாடுகளின் பார்வை போன்றவற்றை அவதானித்து ஊகித்துக் கொண்டது அவ்வளவுதான்.
(மயிலிட்டி விடுவிப்புக்குள் தமிழ் எம்.பி மாரை இழுக்காதீங்கோ, ‘குருவி இருக்க பனம் பழம் விழுந்த கதைதான்’ இவர்களைப் பொறுத்தவரை)
வல்வெட்டித்துறை ‘வல்வை’ என்று அழைக்கப்படுவதுபோல், மயிலிட்டித்துறையும் ‘மயிலிட்டி’ என அழைக்கப்படுகின்றது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பார்த்த போது, இப்படி ஒரு கட்டுமானம் எமது பகுதியில் இருந்துள்ளதா என்ற வியப்பு.
மிகச் சிறுவயதில், நான் மேலே குறிப்பிட்டுள்ள உறவினர் வீட்டுக்கு, ஒரு தடவை மரணச் சடங்கிற்காக மயிலிட்டி சென்ற ஞாபகம் நன்றாக உள்ளது.
மிகவும் அழகான பிரதேசம். மயிலிட்டி நகரப்பகுதியில் மட்டும் மிகவும் நெருக்கமான வீடுகள், எமது உறவினர் வீடு உட்பட. அதாவது அம்மன் மற்றும் முருகன் பிரதான கோயில்களுக்கு கிழக்காக.
கடந்த வருடம் மயிலிட்டி விடப்பட்டபின்னர், இரண்டு முறை அங்கு (கீரிமலை, காங்கேசன்துறை உட்பட) சென்றேன். பல விவரங்களை ஆவணப்படுத்தினேன். நகரப் பகுதியானது நூறு வீதம் அழிவடைந்து, அழகான தோட்டம் போல் காட்சியளிக்கின்றது. (காணொளியில் காட்டப்பட்டுள்ளது)
குறித்த பகுதியைச் சேர்ந்த பிரமுகர், சமூக சேவையாளர் திரு இளங்குமரன் (தற்போதைய தேர்தலில் போட்டியிட்டவர்) - எனது ஆவணப்படுத்தலுக்கு இரண்டு முறையும் பெரிதும் உதவினார்.
நான் இதுவரை பார்த்ததில் முழுமையான இடப்பெயர்வு மற்றும் முழுமையான அழிவு என்றால் அது மயிலிட்டி - காங்கேசன்துறை பகுதிகள்தான். மயிலிட்டி சந்ததியில் (சந்ததியில்) மிகப் பெரிய தாக்கத்தை – இழப்பை நிரந்தரமாக இந்த நிகழ்வு ஏற்படுத்திவிட்டது. எந்தளவிற்கு விரைவில் மீண்டும் மயிலிட்டி உயிர்ப்பெறும் என்பது இலகுவாகக் கூறக்கூடிய விடயம் அல்ல. ஏனெனில் கிட்டத்தட்ட இரண்டு தலை முறை மயிலிட்டி மக்கள் மயிலிட்டியைப் பார்த்ததில்லை.
பாதை விடுவிப்பு – வல்வை வளம்பெற வாய்ப்புக்கள்
மயிலிட்டிக்கான நேரடிப் பாதை விடப்பட்டுள்ளதால், பருத்தித்துறையிலிருந்து பொன்னாலை வரை இப்பொழுது நேரடியாக நாம் பயணிக்க முடியும். மேலும் பருத்தித்துறை – காங்கேசன்துறை – கீரிமலை போக்குவரத்து இலகுவடையும். மயிலிட்டி – பருத்தித்துறை பண்டமாற்று விரிவடையும். குறிப்பாக கடற்றொழில்.
புகையிரத சேவையைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி வடமராட்சி மக்களுக்கு ஏற்படும். கொழும்புக்கு பஸ்ஸில் பிரயாணிப்பதை விட புகையிரத்ததில் பிரயாணிப்பது செலவும் குறைவு, நேரமும் மிச்சம். இதைவிட முக்கியம் புகையிரதப்பயணம் பாதுகாப்பானது. 35 வருடங்கள் முன்பு வல்வையிலிருந்து அனேகமானோர் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு புகையிரத சேவையையே பயன்படுத்தினர்.
மேற்குறித்த காரணங்களால் வல்வையூடான 763 பஸ் சேவை அதிகரிக்கப்படலாம். பலருக்கு இதனால் போக்குவரத்துச் செலவு மிச்சம் ஆகும். யாழின் இரண்டாவது நகரமான பருத்தித்துறைக்கு போய் வருவதும், தொண்டைமானாறு, கீரிமலை போன்ற பகுதிகளுக்கும் போய் வருவதும் இலகுவடையும்.
பஸ் சேவையை அதிகரிக்கக்கோரி நாங்களும் அழுத்தம் கொடுக்கவேண்டும். அத்துடன் பஸ் சேவையை முடிந்தளவு பாவிக்கவேண்டும்.
யாழில் இதுவரை அகலபடுத்தப்படாத பிரதான வீதிகளில் ஒன்று பருத்தித்துறை – பொன்னாலை வீதி. இதை அகலப்படுத்தவும் நாம் பொதுமக்கள் என்ற ரீதியில் வேண்டுகோள்களை முன்வைக்கவேண்டும்.
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் நாளாந்த இயக்கம் போன்றவை சிறந்த போக்குவரத்திலும் பிரதானமாக தங்கியுள்ளது.
சாம்பலில் இருந்து உயிர் பெறவுள்ள மயிலிட்டி மற்றும் அதன் மக்களின் வளர்ச்சியில், நாமும் எம்மால் முடிந்தவரை கரம் கொடுக்கவேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.