பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு முடிவுக்கு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2017 (வெள்ளிக்கிழமை)
பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.
கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.
சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.
ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.
இணையதள சேவை விரிவாக்கம்
மேலும் பிபிசி தமிழின் சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டாலும் பிபிசி தமிழின் இணையதள சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நேயர்கள் மாறிக் கொண்டிருக்கையில் அவர்களுடன் சேர்ந்து பிபிசி தமிழும் அந்த ஊடகங்களுக்கு மாறுகிறது.
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;
அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.
பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.
இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.