வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு மிக அருகில் உயர் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2017 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு மிக அண்மையில் உயர் தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் இன்று காலை 0830 மணியளவில் அகலாங்கு 6.5 DEG N நெட்டாங்கு 81.8 DEG E இல், ஹம்பாந்தோட்டை இலிருந்து சுமார் 55 கடல் மைல்கள் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த உயர் தாழமுக்கம் தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தற்பொழுது இலங்கை கரையைக் கடந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்து நகர்ந்து அதி உயர் தாழமுக்கம் (Deep Depression) ஆக மாறலாம் என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் (India meteorology department) மற்றும் சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் கணித்துள்ளன.
இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலை தொடர்பாக பின்வரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞையை வௌியிட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் குறிப்பாக மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் கனமழை, கடுங்காற்று வீசக்கூடும் எனபதுடன், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்பிராந்தியங்களில் வாழும் மக்களும் மீனவர்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கீழே படத்தில் உயர் தாழமுக்கம் நகரும் என எதிர்பார்க்கப்படும் பாதையைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.