நேற்று காலமான தமிழக முதல்வர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா இறுதி நல்லடக்கம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.
2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" என இவரது ஆதரவாளர்கள் இவரை அழைப்பது வழமை.
தமிழக மற்றும் இந்திய அரசியலில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர். தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படுவர். தமிழகத்தில் பெருமளவு தொண்டர்களையும் ஆதரவையும் கொண்டவர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். பல நிருபர்களையும் அரசியல் எதிரிகளையும் பலமுறை திக்குமுக்காட வைத்தவர். 'மனைவிக்கு ஒன்று', 'துணைவிக்கு ஒன்று' என கருணாநிதி பற்றி ஒரு முறை கருணாநிதிக்கு சாணக்கியமாகப் பதில் கொடுத்தவர்.
முன்னர் பி.ஜே.பி அரசுடன் கூட்டு வைத்திருந்த போது முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு ‘Seletive Amnesia’ உள்ளதாக குறிப்பிட்டு மீடியாவில் பெரிதாகப் பேசப்பட்டவர். எவருக்கும் மண்டியிடாதவர்.
தமிழகத்தில் அ.தி.மு.க அல்லாத கட்சியனர் கூட இவரின் நிர்வாகத்திறனை குறிப்பிடும் அளவிற்கு பேசப்பட்டவர்.
ஆனால் நேற்றிலிருந்து, ஜெயலலிதா ஒரு தமிழீழ ஆதரவாளர், விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் போன்ற செய்திகள் இலங்கைத் தமிழர் சார் தமிழர் அமைப்புக்கள், இணையதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்கள் தாராளமாகவே (லூசுத் தனமாக) கூறிக்கொண்டிருகின்றன. (கீழே உதாரணத்திற்கு ஒன்று)
ஜெயலலிதா அம்மையார் தனது அரசியல் வாழ்கை ஆரம்பம் முதல் விடுதலைப்புலிகளை எதிர்த்தவர். (பத்திரிக்கை செய்திகள் சான்று) தனது ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வந்திருந்தார். எதிர்க் கட்சியாக இருந்த போது கூட கருணாநிதி அரசின் மேல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டி வந்தவர்.
2003 இல் பிரபாகரனை கைது செய்து நாடு கடத்துமாறு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்.
வன்னி இறுதி யுத்தத்தின் போது ‘யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது’ என பகிரங்கமாகக் கூறியவர்.
இறுதி யுத்தத்தின் போது, ANI தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், 'விடுதலைப் புலிகளே மக்களைக் கேடயமாக பயன்படுத்துகின்றார்கள்' எனவும் குறிப்பிட்டிருந்தவர். (கீழேயுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)
அம்மையார் எந்தவொரு கட்டத்திலும் விடுதலைப் புலிகளை ஆதரிந்திருந்ததிலை. நடேசன் அவர்கள் அம்மையாருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றைப் போட்டு, எமக்கு நாமே "Same side Goal' அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?
2009 இல் மே மாத முற்பகுதியில், திரு.சிவாஜிலிங்கம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயற்பட்டிருந்தார். அப்பொழுது ஒரு நேர்காணலில் தான் தமிழகத் தமிழ்த் தலைவர்களை சந்தித்து வருவதாகவும், ஜெயலலிதா அம்மையாரையும் சந்திக்க முனைவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இது நடைபெற்றதாக தெரியவில்லை - விடுதலைப் புலிகளை மட்டுமின்றி இதர தமிழ் அமைப்புக்களையும் ஒரு தூரத்திலேயே அம்மையார் வைத்திருந்தார்.
பொடாச் சட்டத்தை மிகச் சிறப்பாக இந்தியாவில் அமுல்படுத்தியிருந்தார். நெடுமாறன், வைக்கோ போன்றோர்களை இதே சட்டத்தில் உள்ளே அனுப்பியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்ப்பட்டதற்காவும், தமிழீழத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தற்காக இவர்கள் உள்ளே அனுப்பபடவில்லை.
எந்தவொரு இந்தியத் தலைவர்களுக்கும் மண்டியிடாத அம்மையார் தீவிர விடுதலைப் புலிகள் எதிர்பாளர்களான சோ இராமசாமி மற்றும் சுப்ரமணியசாமி ஆகியோர்களை பகைத்திருக்கவிலை.
ஜெயலலிதா அம்மையாரை ஒரு சிறந்த தமிழ்த் தலைவர், தமிழ்ப் பெண்களுக்கு ஒரு அடையாளம்........ என நாம் குறிப்பிடலாம். ஆனால் எதற்காக இல்லாத ஒன்றை (அதாவது அம்மையார் விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் போராட்டத்திகும் உதவியதாக) உருவாக்க முயற்சிக்கின்றோம். ஏன் நாமே வரலாற்றை திரிபுபடுத்துகின்றோம்.
2009 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டின் போது சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ‘இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு’ என அறிவித்திருந்தார்.
இதனை ஜெயலலிதா அம்மையார் தானே எப்படி முற்றுப் புள்ளி வைத்தார் என்பதை, அம்மையார் 2009 மே 19 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் போராட்டம் பற்றி வெளியிட்டிருந்த அறிக்கையை தேடித் பிடித்துப் படித்துப்பாருங்கள், (BBC தமிழோசையிலும் ஒலிபரப்பட்டிருந்தது) இந்தக் கட்டுரையின் சாராம்சம் புரியவரும் - இதுவரை புரியவில்லை என்றால்.
அம்மையார் சொன்ன ‘Seletive Amnesia’ அத்வானிக்குப் பொருந்துகின்றதோ இல்லையோ, கட்டாயம் எங்களுக்கு பொருந்தும் என்பதும் விளங்கும்.
பிற்குறிப்பு,
இப்பத்தியின் நோக்கம் ஜெயலலிதா அம்மையார், தமிழீழம், இலங்கை மற்றும் இந்திய அரசியல் பற்றி விபரிப்பது அல்ல. மாறாக நாமே நம்மை ஒரு மாய வலைக்குள் வைத்து ஏமாற்ற - ஏமாறக் கூடாது என்பதற்காகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvai mani (Swiss)
Posted Date: December 08, 2016 at 04:08
உண்மையிலும் உண்மை ஜெயலலிதா இன்று வரை ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு எதை செய்தார் என்று தெரியவில்லை,ஆனால் நம் தமிழர்கள் எம்போராட்டத்திற்கு அம்மையார் உயிர்கொடுத்த உத்தமி போல் அனுதாபங்களும் அஞ்சலி கூட்டங்களும் நடத்துகிறார் ,இது தான் வேதணைக்குரியது,,,,,,
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.