சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2024 (புதன்கிழமை)
கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS- ஐஎஸ்எஸ்) இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் ஆளே இல்லாமல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியது என நாசா தெரிவித்தது.
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் ஜூன் 5-ஆம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின்படி, இருவரும் எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் இருக்கப் போகிறார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் தங்களுக்கு விருப்பமான உணவை உண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் உணவு பல வழிகளில் வேறுபட்டதாக இருக்கும்.
விண்வெளி வீரர்களின் விருப்பமான உணவுகளைத் தவிர்த்து, அவர்களின் தினசரி உணவில் பால், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் குளிர்ந்த காபி ஆகியவை அடங்கும். விண்வெளி நிலையத்தில், பல்வேறு நாடுகளின் சிறப்பு உணவுகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் தங்கள் உணவுத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள்? அவர்களின் உணவு எவ்வாறு தயாரிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் உண்ணும் உணவுகள் பூமியில் தயாரிக்கப்பட்டவை தான். அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் (Menu) இருந்து தங்களுக்குப் பிடித்த உணவுகளை தேர்வு செய்து கொள்கிறார்கள்.
காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைக்கான மெனுவையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். உணவைத் தவிர, சிற்றுண்டிகளும் அளிக்கப்படுகின்றன. அதற்கும் மெனு உள்ளது.
விண்வெளியில் உடலின் தினசரி தேவைக்கேற்ப விண்வெளி வீரர்களுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும் வகையில் முழு மெனுவும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த உணவு ஆரோக்கியமானதாகவும், பேக் (Pack) செய்வதற்கு எளிதாகவும் மற்றும் நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாதவாறும் இருக்கும்.
உணவு முறையாக ஆய்வு செய்யப்பட்டு, சோதனைகளுக்குப் பிறகே ஐஎஸ்எஸ் அல்லது பிற விண்வெளிப் பணிகளுக்காக அனுப்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் ஸ்பேஸ் சென்டரின் ‘ஸ்பேஸ் ஃபுட் சிஸ்டம்ஸ்’ ஆய்வகத்தில் உணவு விஞ்ஞானிகள், உணவியல் நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த உணவுகளை ஆய்வு செய்வார்கள். உணவின் ஊட்டச்சத்து, கெட்டுப் போகாத தன்மை மற்றும் பேக்கேஜிங் குறித்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் இந்த ஆய்வகத்தில் செய்யப்படுகின்றன.
நான்கு வகையான உணவுகள் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. ரீஹைட்ரேட்டபிள் (Rehydratable) என்பது உலர்ந்த உணவைக் குறிக்கிறது. இதில் தண்ணீரைச் சேர்த்து உண்ணவேண்டும். உதாரணமாக காய்கறிகள் அல்லது சாலட் (Salad).
மற்றொரு வகை தெர்மோஸ்டேபிலைஸ்ட் (Thermostabilized) உணவுகள். அதாவது ஏற்கனவே சமைக்கப்பட்டு, பின்னர் சூடுபடுத்தி உண்ணக் கூடிய உணவுகள்.
மூன்றாவது வகை கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட உணவு. இவ்வாறு செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் சிறு உயிரினங்கள் நீக்கப்பட்டு, உணவு நீண்ட நேரத்திற்கு கெடாத வகையில் இருக்கும். இதில் கேன்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை அடங்கும்.
நான்காவது வகை இயற்கை உணவு, அதாவது கோதுமை அல்லது சோளத்திலிருந்து செய்யப்படும் ரொட்டி மற்றும் சோளக் காம்புகள் (Corn cobs) போன்றவை. இத்தகைய உணவுகள் எளிதில் கெட்டுப் போகாதவாறும், விண்வெளி வீரர்களால் நீண்ட நேரம் சாப்பிடக்கூடிய வகையிலும் பிரத்யேகமாக பேக் செய்யப்பட்டிருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் போது, விண்வெளி வீரர்களுக்கான மெனு எட்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. சில சமயங்களில் புதிய உணவுகள் மெனுவில் சேர்க்கப்படும், சில சமயங்களில் ஒரு உணவு வகை தவிர்க்கப்படும். ஊழியர்களுக்கான மெனுவில் அமெரிக்கன் மற்றும் ரஷ்யன் உணவுகள் சரிசமமாக இருக்கும். மற்ற நாடுகளின் உணவுகளும் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
விண்வெளிக்கு அனுப்பப்படும் உணவுகள் பிரத்யேகமாக பேக் செய்யப்படுகின்றன. நாசாவின் ‘விண்வெளி உணவு அமைப்புகள் ஆய்வகத்தில்’ இவை தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த உணவுகள் இந்த ஆய்வகத்தில் சமைக்கப்பட்டு பேக் செய்யப்படுகின்றன. குளிர்பானப் பொடிகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களும் இங்கு பேக் செய்யப்படுகின்றன.
பேக்கேஜைப் பிரித்து, உடனடியாக சாப்பிடும் வகையில் சில சாஸ்கள் அல்லது குழம்புகள் வழங்கப்படும். தண்ணீர் சேர்த்த பிறகு உண்ண வேண்டிய உலர்ந்த உணவுகளில், அதன் பாக்கெட்டுகளின் மேல்பகுதியில் ஒரு குழாய் இருக்கும். அதன் மூலம் வெதுவெதுப்பான நீர் உள்ளே ஊற்றப்படுகிறது.
விண்வெளியில் பாத்திரங்களை கழுவ முடியாது என்பதால், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய கொள்கலன்களில் உணவுகள் பேக் செய்யப்படும். விண்வெளி வீரர்கள் தங்களுக்கான உணவைச் சமைத்துக் கொள்ளலாம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வரும் விண்வெளி வீரர்களுக்கு பிரத்யேக தட்டுகள் இருக்காது, அவர்களுக்கு கத்தரிக்கோல் மற்றும் ஒரு ஸ்பூன் மட்டும் வழங்கப்படுகிறது.
உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், விண்வெளிக்குச் செல்வதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு தங்கள் மெனுவைத் தீர்மானிக்க வேண்டும்.
மெனுவைத் தீர்மானித்த பிறகு, அதில் தேவையான ஊட்டச்சத்து உள்ளதா என்று சோதிக்கப்படுகிறது. தேவையான ஊட்டச்சத்து இல்லை என்றால் திருத்தம் செய்யப்படுகிறது.
இறுதி மெனுவைப் பற்றி விண்வெளி வீரர்களின் கருத்தைப் பெற ஒரு சிறப்பு பயிற்சி அமர்வு நடத்தப்படுகிறது. இந்த அமர்வு ரஷ்யாவில் நடைபெறுகிறது. அவர்களின் கருத்துகளுக்குப் பிறகு மெனு இறுதி செய்யப்படுகிறது.
பின்னர் அமெரிக்காவின் ஹூஸ்டனின் உணவு ஒப்பந்ததாரரிடம் இறுதி மெனுவிற்கு ஏற்றவாறு உணவைத் தயார் செய்யுமாறு கூறப்படும். வீரர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன், உணவு ஒப்பந்ததாரருக்கு மெனு வழங்கப்படுகிறது.
விண்கலம் புறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, தயாரிக்கப்பட்ட உணவுகள் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு உணவு டிரே (Tray) லாக்கர்களில் சேமிக்கப்படுகிறது.
பிறகு இந்த உணவு டிரே லாக்கர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு, விண்கலபம் புறப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அனுப்பப்படும். இங்கே அது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது. விண்ணில் ஏவப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் உணவு டிரேக்கள் விண்வெளி ஓடத்தில் வைக்கப்படும்.
விண்வெளி வீரர்களுக்கான கூடுதல் உணவுகள்
உணவு டிரேக்களுடன், விண்வெளி வீரர்களுக்கான உணவைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் உணவு லாக்கரும் விண்கலத்திற்குள் வைக்கப்படும். இந்த உணவு லாக்கருக்கு உள்ளே ரொட்டிகள், ரோல்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை இருக்கும். விண்கலம் ஏவப்படுவதற்கு 24 முதல் 36 மணி நேரத்திற்கு முன்பு இந்த உணவு லாக்கர்கள் வைக்கப்படும்.
கூடுதல் உணவு டிரேக்களும் விண்கலத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விண்வெளி வீரருக்குமான கூடுதல் உணவு டிரேவில், ஒரு நாளைக்கான மூன்று வேளை உணவு இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு விண்கலத்திலும் கூடுதல் உணவு வைக்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவைச் சேமிப்பதற்கான பிரத்யேக குளிர்சாதன வசதிகள் இல்லை.
விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என்ற வரிசையில் உணவுகள் பிரித்து வைக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியில் இருந்து உணவுகளை எடுத்துக் கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி ஓடம் பறக்கிறது.
கழிவுகள், ஆளில்லா சரக்கு விண்கலமான 'புரோகிரஸ் விண்கலத்தில்' டெபாசிட் செய்யப்படுகிறது. பின்னர் இந்த புரோகிரஸ் விண்கலம், பூமியை நோக்கி அனுப்பப்படும். பூமியின் வளிமண்டலத்தில் இந்த விண்கலம் நுழையும் போது கழிவுகள் விடுவிக்கப்படும். வளிமண்டல வெப்பம் அவற்றை முழுமையாக எரித்துவிடும். (பிரதி-ஒரு தகவல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.