தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2022 (திங்கட்கிழமை)
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி?
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுப்படகில் கஞ்சா கடத்திச் சென்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, விவசாய உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும், இதில் ஈடுபட கூடிய நபர்களை கைது செய்யவும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களது கண்காணிப்பையும் மீறி சமீபகாலமாக அதிக அளவு கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
மீனவர்கள் போர்வையில் கஞ்சா கடத்திய ஐவர்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து புத்தளம் மாவட்டம் கல்பிட்டி குதிரைமலை முனை மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவெண் இல்லாத தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று நின்று கொண்டிருந்ததைக் கண்ட கடற்படையினர் நாட்டுப் படகை நோக்கிச் சென்றனர். இதையறிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுப்படகு அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது இலங்கை கடற்படையினர் விரட்டிப் பிடித்து சுற்றி வளைத்தனர். பின்னர் கடற்படை வீரர்கள் நாட்டுப்படகை சோதனை செய்ததில் கஞ்சா மூட்டைகள் படகுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் படகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர், இலங்கை நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் பத்து பேரை விசாரணைக்காக கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து பத்து பேரையும் இலங்கை கடற்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பின் இலங்கை சிறையில் அடைத்தனர்.
மீனவர்களை கடத்தல்காரர்களாக மாற்றும் கும்பல்
கஞ்சா எவ்வாறு இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பிய நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் தொழில் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, பின்னர் விடுதலையாகி தற்போது போதைப் பொருள் கடத்தல் தொழிலை முற்றிலுமாக நிறுத்தி விட்டு மீன்பிடித் தொழில் செய்து வருகிறேன்."
"நான் ஒரு நாள் மாலை கடற்கரையில் மீன்பிடி வலைகளைச் சரி செய்து கொண்டிருந்த போது ஒருவர் வந்து 'மீன்பிடித் தொழில் எப்படிப் போகிறது' எனப் பேச ஆரம்பித்தார். சில நொடிகளில் 'குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம், அதற்கு நான் படகில் ஏற்றி விடும் பொருட்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகிற்கு கை மாற்றி விட்டால் மட்டும் போதும், செய்ய முடியுமா?' என்று என்னிடம் கேட்டார்.
முதலில் தயங்கிய நான் பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அதைச் செய்ய சம்மதித்தேன். உடனே அவர் 'நாளை இரவு உங்க நாட்டுப்படகை இந்த இடத்தில் நிறுத்தி விடுங்கள். நாங்கள் பொருட்களை ஏற்றியதும் தகவல் தருகிறோம்' எனத் தெரிவித்து விட்டுச் சென்றார்.
மறுநாள் இரவு அவர் சொன்ன இடத்தில் எனது நாட்டுப்படகைக் கொண்டு சென்று நிறுத்தினேன். சிலர் படகில் ஏறி கஞ்சா மூட்டைகளை படகின் அடிப்பகுதியில் வைத்து அதன் மீது மீன்பிடி வலைகளைப் போட்டு விட்டுச் சென்றனர். பிறகு எனது கைபேசி எண்ணிற்கு ஜிபிஎஸ் மார்க் எண் ஒன்று குறுஞ்செய்தியாக வந்தது. அப்போது குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் இந்த ஜிபிஎஸ் மார்க் எண்ணில் இலங்கை படகு ஒன்று நிற்கும் அல்லது அந்த இடத்தில் காத்திருந்தால் இலங்கை படகில் சிலர் வருவர். அங்கு வந்து இதைப் பெற்று செல்வார்கள் என்றார்.
இரவு படகில் புறப்பட்டு ஜிபிஎஸ் மார்க் குறிப்பட்ட இடத்திற்குச் சென்றவுடன் அவர் குறிப்பிட்டது போல் இலங்கை ஃபைபர் படகில் வந்த சிலர் கஞ்சா மூட்டைகளை நடுக்கடலில் வைத்து பெற்றுச் சென்றனர்.
அதேபோல் இரண்டு முறைக்கு மேல் செய்தேன். இலங்கை நபர்களுடன் ஏற்பட்ட நட்பால் கஞ்சா கடத்தலை நான் தனியாகச் செய்யத் திட்டமிட்டு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வந்தேன்," என்றார் பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர்.
சாலை மார்க்கமாகக் கொண்டு வரப்படும் கஞ்சா
தொடர்ந்து பேசிய அந்த நபர், "கேரள வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சா செடிகள், தேனி வழியாக சாலை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்குள் கொண்டு வரப்படும். அதேபோல் ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்படும் கஞ்சா, நாகை மாவட்டம் வேதாரண்யம், முத்துப்பேட்டை, ஆறுகாட்டுதுறை பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும்.
கஞ்சா மூட்டைகளில் உள்ள கஞ்சாவை இரண்டு கிலோ பாக்கெட்டுகளாக பொட்டலம் கட்டி தேவைகேற்ப மூட்டைகளில் அடைத்து வாகனங்களில் கடலோர பகுதிகளுக்கு எடுத்து வரப்படும்.
இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் எடுத்து வரப்படுகிறது. அதேபோல் கஞ்சாவை இலங்கைக்கு எடுத்துச் செல்ல திட்டமிடும் நாளன்று மட்டும் கஞ்சா பொட்டலங்களை வரவழைப்போம். அதற்கு முன் கொண்டு வந்து சேமித்து வைக்க மாட்டோம்," என்றார்.
நடுக்கடலில் உயிர் பயத்தைக் காட்டும் கடற்படை
மேற்கொண்டு பேசியவர், "சில நேரம் கடற்படை நடுக்கடலில் படகில் கஞ்சா இருப்பதை அறிந்து எங்களைப் பிடிக்க துரத்தும் போது முடிந்தளவு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயல்வோம். அது முடியவில்லையெனில் கஞ்சா மூட்டைகளைக் கடலில் வீசி விடுவோம்.
கடலில் வீசும் கஞ்சா பொட்டலங்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு கடல் நீரோட்டத்தில் கடற்கரைகளில் ஆங்காங்கே கரை ஒதுங்கும். சில நேரங்களில் கடற்படை துரத்தும் போது சில படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து படகில் செல்பவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும்.
இலங்கையில் இருந்து இவ்வளவு கிலோ கஞ்சா தேவை என்ற தகவல் முதலில் குறுஞ்செய்தியாக வரும். ஆனால் இப்போது வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் தகவல் தெரிய வருகிறது. வாட்ஸ்ஆப் அழைப்பை போலீசாரால் இடைமறித்துக் கேட்க முடியாது என்பதால் அதன் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
இலங்கைக்கு கடத்திச் செல்லும் கஞ்சாவுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக எங்களிடம் கொடுக்க மாட்டார்கள். கஞ்சாவுக்கு பணத்தை தமிழகத்தில் உள்ள சில நபர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்வார்கள். நாங்களும் அதே போல் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், ஓரிடத்திற்கு வரச் சொல்லி அங்கு வைத்து அந்தப் பணத்தை எங்களிடம் கொடுப்பார்கள்.