மயிலிட்டித்துறைமுகம் உள்ளடங்கலாக அந்தப் பிரதேசத்தை பாதுகாப்புத் தரப்பினர் வெகு விரைவில் விடுவிப்பார்கள் என்று நேற்று நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மயிலிட்டித்துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் - அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் அது விடுவிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில்கூட மயிலிட்டித் துறைமுகத்தின் விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது, வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் உள்ளிட்ட குழுவினரையும் அவர் அழைத்துச் சென்றிருந்தார்.
மக்கள் வாழ்ந்த பகுதிகள் உள்ளிட்ட மயிலிட்டிப் பிரதேசத்தை, வடக்கு மாகாண ஆளுநருக்கு அவர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். இதன்போது மயிலிட்டித்துறைமுகத்தில் - மக்கள் பாவனைக்கு விடுவிக்காத பிரதேசத்தில், சிமெந்து இறக்குமதி நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் ஆளுநருக்கு புனர்வாழ்வுச் சங்கத்தினர் காண்பித்துள்ளனர்.
‘எங்களிடம் மயிலிட்டித்துறைமுகத்தை ஒப்படைக்கவில்லை. ஆனால் தனியார் வர்த்தகர் ஒருவர் இதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர்’ என்பதை ஆளுநருக்கு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பின்பு கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்தப் பகுதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர். விரைவில் முழுமையாக விடுவிக்கப்படும். ஆகக் கூடிய இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இங்கு மக்கள் மீள்குடியமர முடியும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பலாலி படைத் தலைமையகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இராணுவத் தளபதிக்கும் இடையேயான சந்திப்பின் போதும் மயிலிட்டி வெகு விரைவில் விடுவிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
மேற்கண்டவாறு உதயன் இணையதளப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.