வல்வையில் பாவிக்கப்பட்ட முதலாவது வானொலிப் பெட்டி.
First Radio of Valvettithurai
Posted Date: 20/12/2012
வல்வையில் சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கபட்ட வானொலிப் பெட்டியைப் படங்களில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்ட வானொலிப் பெட்டி பற்றிய விபரங்கள் வல்வெட்டித்துறை.org ற்காக, இவ்வானொலிப் பெட்டியின் உரிமையாளரின் உறவினரால் தரப்பட்டுள்ளது. தரப்பட்ட கட்டுரையில் எதுவித மாற்றமும் செய்யாமல் பிரசுரிக்கபடுகின்றது.
எமது ஊரில் இருந்து கொண்டே சில நொடிகளில் உலகில் எந்த பகுதியில் இருப்பவர்களுடன் இணையதள வசதியின் மூலமாக ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூடிய மாதிரியாக தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கின்ற காலகட்டமாகும் இது.
இங்கே இருக்கின்ற பெட்டியை பார்த்தால் ஏதோ பழைய பெட்டகம்மாதிரி தெரியும். ஆனால் 72 ஆண்டுகளுக்கு முன் வல்வை மக்களும், பக்கத்து ஊரில் இருக்கின்ற மக்களுக்கும் சிறந்த சேவையை செய்து உள்ளது . வல்வெட்டித்துறைக்கு முதன் முதலாக வந்த வானொலிப்பெட்டி இதுவே ஆகும். இது சுமார் 4.5 அடி உயரம் உள்ளது. அப்போது வல்வையில் மிகவும் பிரபலமாக இருந்த செல்லத்துரை அம்மான் என்பவரினால் வாங்கப்பட்டு ஊருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அம்மான் செல்லத்துரை யார் அவர் ஊருக்கு என்ன செய்தார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம் .
நாளுக்கு நாள் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டிருப்பதால் 'Skype' மூலம் பேசுவது என்பது சாதாரண விடயமாக இப்போது இருக்கலாம் .ஆனால் 72 ஆண்டுகளுக்கு முன் 10 மைல்களுக்கு அப்பால் நடப்பது கூட அன்றே தெரிந்து கொள்ள முடியாத காலம். இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் உலகிலே என்ன நடக்கிறது என்பதை வல்வையில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நேரம் . வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீதியில் தீருவில் ஒழுங்கைக்குள் உள் நுழையும் போது தெற்கு பக்கத்தில் இருந்த பழைய கால வீட்டில் அந்த நேரத்தில் அம்மான் செல்லத்துரை அவர்கள் இருந்த வீடு.(89களில் நடந்த வல்வைப் படுகொலையின் பொது எரிக்கப்பட்டு தற்போது வெற்று காணியாக உள்ளது ).. அந்த வீட்டில் இருந்து கொண்டு அந்த கால கட்டத்தில் பொழுது போக்குகள் எதுவும் இல்லாத நிலையில் வல்வை மக்களுக்கு பல உதவிகளை செய்தார்.
உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் ஜப்பான் இராணுவம் திருகோணமலை துறைமுகத்தில் குண்டு வீசியபோது இலங்கையில் மக்கள் பரபரப்பாக திகிலுடன் இருந்த காலம் எந்த நேரத்திலும் எங்காவது குண்டு விழுமோ என்று, உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள முடியாத காலம் எமது ஊர் மக்களுக்கு அப்போது அவசியம் தேவைப்பட்ட இந்த வானொலிப்பெட்டி. தற்போது அழிந்துள்ள நிலையில் இருக்கும் வீட்டில் வைத்துதான் பயன்படுத்தப்பட்டது. அப்போது புதுமையாக இருந்தது மட்டுமல்ல அன்றைய காலகட்டத்தில் எங்கே,என்ன நடக்கிறது என்பதை அறிய உதவியாகவும் இருந்தது.
மக்கள் ஆவலுடன் வந்து செய்திகளையும் அறிய வந்தனர். கோயில் திருவிழா போல் அக்கம் பக்கத்து ஊரில் இருந்தும் ஏராளமாக மக்கள் வந்து கொண்டிருந்த நேரம். இந்த வானொலிப் பெட்டியை வெளியே வைத்து அப்போது போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காலம் அந்த ரோட்டின் தெற்கு வடக்காக மக்கள் கூட்டம் . இந்த வானொலிப்பெட்டியை இயக்கியது இருவர் . ஒருவர் பாக்யா என்பவர் இவர் பற்றிய மேலதிக விபரம் தெரியவில்லை. மற்றவர் அரிசிக்கடை கதிகாமலிங்கம் இவர் பிள்ளைகள் சிலர் தற்போது ஊரில் கூட உள்ளார். அந்த கால கட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அந்த வானொலிப்பெட்டி இன்று அதனுள் இருக்கக்கூடிய சகல பாகங்களையும் இழந்து வெளிக்கூடு மட்டும் அம்மான் செல்லத்துரையின் வாரிசு ஒருவரால் ஞாபக பொருளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.