தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில், வல்வை விக்னேஸ்வரா சனசமூகத்தினரினால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று மாபெரும் பட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.
Posted Date: 14/01/2013
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில், வல்வை விக்னேஸ்வரா சனசமூகத்தினரினால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று மாபெரும் பட்டப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.
வல்வை உதயசூரியன் கடற்கரையில் சுமார் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போட்டி 6.30 மணிவரை நீடித்தது. கண்ணைக் கவரும், கலைத்திறன்மிக்க, மிகவும் அதிநுட்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்திருந்தன.
போட்டியினைப் பார்ப்பதற்காக உள்ளுரிலிருந்தும், பிற பிரதேசங்களிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். உதயசூரியன் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலையென காணப்பட்டது.இவர்களில் சிலர் எமது இணையதளமான www.valvettithurai.org இல் பல நாட்களாக வெளியாகியிருந்த அறிவிப்பின் காரணமாக வந்திருந்தததாக அறிய முடிகின்றது.
இலங்கையில் பட்டங்கள் எல்லா இடங்களில் ஏற்றப்பட்டாலும், வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களிலேயே மரபு முறையான பட்டங்கள் மிகச்சிறந்த முறையிலும், அதிக பொருட்செலவிலும் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
பங்கெடுத்திருந்த பட்டங்களில் அனைத்தும் மிகச்சிறந்தாக இருந்த போதிலும் நடுவர்களின் தீர்ப்பிற்கமைய பத்து பட்டங்கள் பரிசை தட்டி சென்றன. இதைவிட பன்னிரண்டு பட்டங்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டன.
பட்டங்களின் பரிசில்களுக்குரிய தெரிவானது ஆக்கம் , பட்டம் பறக்கும் உயரம் , கலைத்திறன், அழகு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடுவர்களால் புள்ளி தீர்மானிக்கப்பட்டிருந்தது. பரிசில் பெற்ற பட்டங்களுக்கு பெறுமதி வாய்ந்த தகுந்த பரிசில்கள் வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையத்தினரால் வழங்கப்பட்டது.
இந்த பட்டப்போட்டியில் பல்வேறு விநோதமான பட்டங்கள் ஏற்றப்பட்டன. பட்டங்களின் பெயர் விபரம் வருமாறு: சூரியன், பாராத்தை, கட்டுக்கொடி, ஏழு நட்சத்திரம் , ராகன், ரொக்கட் , பறவை மீன் , சனிக்கிரகம் , ஒட்டிப்பிறந்த வட்டக்கொடி, வெளவால் , நட்சத்திரக்கூடு , சற்லைட், ஆகாய விமானம், பாம்பு, புறா, தும்பி, ஒன்பது நட்சத்திரம், காக்கா, வெளவால், கொக்கு, பஞ்சவர்ணகிளி , பொட்டிப்பட்டம், பறக்கும் தட்டு, கும்பம், இரட்டைராஜன், இரட்டை கொக்கு, பிரமிட் போன்ற பலவிதமான பட்டங்கள் வானில் பறந்தன .
இது இவ்வண்ணம் இருக்க, இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட பட்டங்களில் அதிக உயரமான 35 அடி உயரம் கொண்ட பட்டம், வல்வெட்டித்துறை வேவில் பகுதியில் ஏற்றப்பட்டது. ஆனாலும் போதுமான காற்றின்மையால் உரிய இலக்கிற்கு பட்டத்தை கொண்டு சென்று பறக்கவிட்டுக் கொண்டிருக்க முடியவில்லை என அறியப்படுகிறது.
காணோளியைப் பார்ப்பதற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்
முதல் பத்து இடம் பெற்ற பட்டங்கள் வருமாறு, சனிக்கிரகம், தும்பி, ராகன், பறக்கும் தட்டு, பறவை மீன், சற்லைட், நட்சத்திரக்கூடு , வெளவால், சூரியன், ஒட்டிப்பிறந்த வட்டக்கொடி போன்றவற்றிற்கும் . மற்றும் ஆறுதல் பரிசில்களாக பாராத்தை இரண்டு, ரொக்கட், ஆகாய விமானம் இரண்டு, பாம்பு, புறா, ஒன்பது நட்சத்திரம், காக்கா வெளவால், பொட்டிப்பட்டம் , கொக்கு, பிரமிட் போன்ற பட்டங்களுக்கு வழங்கப்பட்டது.