வல்வை மக்களின் இதய அஞ்சலி ஆற்றல் மிக்க தமிழ் ஆசான் தங்கவடிவேல் - திரு.ந.அனந்தராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2014 (வியாழக்கிழமை)
தமிழ் கற்பித்தலில் உன்னதமான வகிபாகத்தை வகித்து எமது மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்படுத்தி வந்த தமிழ் ஆசான் க. தங்கவடிவேல் அவர்கள் மின்னாமல் முழங்காமல் மறைந்து விட்டார் என்ற செய்தி கல்வியை நேசிப்பவர்களை ஒரு கணம் நிலைகுலையச் செய்திருக்கும்.
சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் நலமடைந்து வருகின்றார் என்று ஆவலுடன் காத்திருந்த வேளையில் திடீரென அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்றதும் நம்பமுடியாது இருந்தது.
உடுப்பட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரியராக அரும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் வல்வெட்டித்துறை மாணவர்களுக்கு நல்ல ஒரு தமிழ் ஆசான் தேவை என்று எதிர்பார்த்துத் தேடித் திரிந்த வேளையில், அன்னார் முன்வந்து வல்வைக் கல்வி மன்றத்தினூடாக சுமார் எட்டு ஆண்டுகள் எமது பிள்ளைகளுக்குத் தமிழை இனிமையாகக் கற்பித்தார்.
தங்கவடிவேல் மாஸ்ரர் தமிழ் படிப்பிக்கின்றார் என்றால் அங்கே ஒரு கவர்ச்சியும், இனிமையும், சுயமான கிரகித்தலும் இருக்கும். அவர் எப்போதும் தமிழை வாசித்துக் காட்டிக் கற்பிப்பதில்லை. அங்கே அவரது கணீரென்ற பாடலினூடாகத் தமிழ் ஒலிக்கும், உணர்வு மிக்க ஓவியங்களினூடாக தமிழ் காட்சிப்படுத்தப்படும்.
அந்த அளவுக்கு நான் அறிந்த வகையில் தமிழை இசையுடன் கூடிய பாடல்களினூடாகவும், பொருத்தமான ஓவியங்களினூடாகவும், நடிபங்கினூடாகவூம் தமிழ் பாடத்தைச் சுவையாகக் கற்பிக்கும் ஒருவரை இன்று வரை சந்திக்கவில்லை. ஆவர் கணீரென்ற குரலில் தமிழைக் கற்பிக்கும் பொழுது மாணவர்கள் வைத்த கண் வாங்காது அவரது கற்பித்தலில் தம்மை மெய்ம் மறந்து இலயித்துப் போய் இருப்பார்கள்.
அதனால் தான் அவரிடம் தமிழைப் படித்த மாணவர்கள் எல்லோருமே அதி சிறப்புச் சித்திகளைப் பெற்று இன்று உலகளாவிய ரீதியில் உன்னதமான சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களை நாங்கள் தன்னலமற்ற ஒரு உன்னதமான ஆசிரியராகவே பார்த்திருக் கின்றோம். ஆனால் அவர் ஒரு பல்துறை ஆற்றல் மிக்க கலைஞராகவும், நடிகனாகவும், சிறந்த கரப்பந்தாட்ட விளையாட்டு வீரராகவும், இலக்கிய விமர்சகராகவும், வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் பல்சுவை நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கிய ஒரு விற்பன்னராகவும் வாழ்ந்து இளைய தலைமுறையினருக்கு ஒரு கலங்கரை விளக்காகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்தார் என்பது எங்களில் பலருக்குத் தெரியாது.
தங்கவடிவேல் மாஸ்ரர் அன்று முதல் இன்று வரை ஒரு உண்மையான முற்போக்கு சிந்தனையுள்ள “கம்யூ+னிஸ்ற்” ஆகவுமே வாழ்ந்து கம்யூ+னிசம் பேசுகின்றவர்களும் அவரைப் பின்பற்றும் ஒரு உண்மையான மாக்சிஸ்ற்றாகவே வாழ்ந்தார்.
அவரை இறுதி நாட்களில் கொழும்பு டேடன்ஸ் வைத்தியசாலையில் சென்று பார்த்தபோழுது, என்னையும் எனது மனைவியையும், இயலாத நிலையிலும் இனங்கண்ட தங்கவடிவேல் சேரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், என்னுடன் எதையோ பேசவாய் எடுத்தும், எதுவுமே சொல்வமுடியாத நிலையில் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இறுதி நாள் சந்திப்பு என்னை ஒருகணம் நிலை குலைய வைத்துவிட்டது……ஆனால் எமது இளைய சமுகத்தினருக்கு அவர் கூற வந்த அந்த இறுதிவார்த்தைகள் எனக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது….”.ஆம்!... எமது பிள்ளைகளை மனிதர்களாக வாழ வழிகாட்டுங்கள்….கல்வித் தரத்தினூடாகவும், பண்பான நடத்தைகளினூடாகவும், அவர்களை உன்னதமான வாழ்வுக்கு இட்டுச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருந்தது
அந்த மாமனிதனின் இலட்சியமும் அதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, அவரது அந்த இலக்கு நிறைவேற நாங்கள் சிரமேற்கொண்டு உழைப்போமாக.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவரால் இன்று உயர்ந்து நிற்கும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆத்மா சாந்த அடையப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
ஓம் சாந்தி…..ஓம் சாந்தி……ஓம் சாந்தி….
ந.அனந்தராஜ்,
முன்னாள் அதிபர், யா/உடுப்பிட்ட அமெரிக்கன் மிசன் கல்லூரி,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.