ரோஹிட் ஷர்மா 264 ஓட்டங்கள் விளாசி ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2014 (வியாழக்கிழமை)
இந்திய-இலங்கை அணிகளிடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித்தொடரின் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 173 பந்துகளில் 264 ஓட்டங்களை பெற்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்தவர் என்ற சாதனையையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வரலாற்றிலேயே இரு முறை இரட்டைச்சதம் என்ற சாதனையையும் படைத்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் 150வது வருட நிறைவை கொண்டாடும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி தமது அணி துடுப்பெடுத்தாடும் என்று அறிவித்தார். இந்திய அணியில் ஓய்வழிக்கபட்ட தவான், சகா, அஷ்வின், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முறையே ரோஹித் சர்மா, உத்தப்பா, கரன் ஷர்மா, பின்னி பங்கேற்றனர். இலங்கையணி சார்பாக ஓய்வழிக்கபட்ட சங்கக்காரா, பிரசாத் ஆகியோருக்கு பதில் சந்திமால், ஈரங்கவும் மேலும் சத்துரங்க டீ சில்வா, பிரியாஞ்சனுக்கு பதிலாக அஜந்த மெண்டிசும், திரிமானேயும் வாய்ப்பு பெற்றனர்.
முதலாவது பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாக இந்திய அணியின் இன்னிங்சை ஆரம்பித்தார் ரகானே மறுபுறம் இன்றைய நாயகன் ரோஹித் தனது கணக்கை மந்தமாகவே ஆரம்பித்து தான் எதிர்கொண்ட ஈரங்க வீசிய 16வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பந்தை அடிக்க முற்பட்டு துடுப்புமட்டை திரும்ப தேர்ட்மன் திசையில் நின்று கொண்டிருந்த திசார பெரேராவிடம் சென்றது, அவர் அந்த இலகுவான பிடியை நழுவவிட வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரோஹித் இந்திய அணித்தேர்வாளர்களுக்கு உலகக்கிண்ண தொடக்க ஆட்டக்காரருக்கான போட்டியில் நானும் உள்ளேன் என்று தனது ஆட்டம் மூலம் பதிலளித்தார்.
திசார பெரேரா அந்தப்பிடியை விடும்போது ரோஹித் இப்பிடியொரு ருத்திர தாண்டவம் ஆடி, இன்று இலங்கையணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தன் மீது மற்ற அனைவரும் ருத்திர தாண்டவம் ஆட போகிறார்கள் என்று நினைத்திருக்கமாட்டார். இதேவேளை ரோஹித் இரட்டை சதம் அடித்த பின்பும் 201 ஓட்டங்களை பெற்றபோது பிரசன்னாவும், 222 ஓட்டங்களை பெற்றபோது கிரிக்கெட்டில் நெல்சன் என்று சொல்லபடுகின்ற 2-2-2 என வந்தபோதும் திரிமானே பிடியை தவறவிட்டார். இத்தொடரில் ஏனைய சதம் பெற்ற வீரர்களான தவான், ரகானே கூட பிடி தவறவிட்டமையை தொடர்ந்தே சதம் பெற்றிருந்தனர்.
இந்திய அணியின் இன்னின்ஸிலிருந்து எங்கோ பயணித்துவிட்டோம் இருந்தாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது என நினைக்கிறேன். இந்திய அணி 40 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மத்தீயூசின் பந்துவீச்சில் 28 ஓட்டங்களை பெற்ற ரகானே LBW முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ராயுடுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை இந்திய அணியின் ஓட்டஎண்ணிக்கை 59 ஆக உயர்ந்தபோது 8 ஓட்டங்களுடன் ஈரங்கவினால் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த அணித்தலைவர் கோலியுடனேயே, ரோஹித் சிறந்த இணைப்பாட்டமாக 202 ஓட்டங்களை 25.2 ஓவர்களில் பெற்றனர். இதில் கோலியின் பங்களிப்பு 66 மட்டுமே, மிகுதி 132 ஓட்டங்களை பெற்று ரோகித்தே ஆதிக்கம் செலுத்தினார். முதல் 50 ஓட்டங்களை 72 பந்துகளிலும், அடுத்த 50 ஓட்டத்தை 28 பந்துகளிலும், அடுத்த 50 ஓட்டத்தை 25 பந்துகளிலும், அடுத்த 50 ஓட்டத்தை 26 பந்துகளிலும், இறுதி 50 ஓட்டத்தை 15 பந்துகளிலும் பெற்று களத்தில் நிற்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க சூப்பர் சொனிக் வேகத்தில் ரன்களை குவித்தார்.
கோலி 66 ரன்களில் இந்திய அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 261 ஆக இருக்கும்போது ரன்அவுட் ஆனபோது களம்புகுந்த உத்தபாவுடன், ரோஹித் சேர்ந்து தான் இறுதிப்பந்தில் ஆட்டமிழக்கும் வரை பெற்ற இணைப்பாட்டம் 128 ரன்கள். ஆனால் இதில் உத்தப்பா பெற்றது வெறும் 16 ஓட்டங்களே மிகுதி 109 ஓட்டங்களை ரோகித்தே பெற்று ஆதிக்கம் செலுத்தினார்.
இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 404 ஓட்டங்களை பெற்றது. தற்போது இப்பத்தி எழுதும் வரை பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 105 ரன்களை பெற்றுள்ளது. களத்தில் மத்தியுஸ் 44 ஓட்டங்களுடன், திரிமானே 15 ஓட்டங்களுடனும் ஆடி வருகின்றனர். வீழ்த்தப்பட்ட 4 விக்கெட்களில் உமேஷ் யாதவ், பின்னி தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.