சன்னிதியான் ஆச்சிரமம் நிறுவனர் மோகனதாஸ் சுவாமிகளுக்கு "அன்பே சிவம்" விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2026 (வெள்ளிக்கிழமை)
அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அறிவிக்கும் அன்பே சிவம் விருது இம்முறை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிற்கு வழங்கப்படுவதாக சைவ மகா சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சைவ மகா சபையின் செயலாளர் மருத்துவர் பரா.நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை.
கடந்த பல தசாப்தங்களாக ஈழமணித்திருநாட்டின் சிவபூமியின் நாற்புறங்களிலும் அல்லுறும் மக்களிற்கு மனிதநேய ஆன்மீகப் பணிகளை அளவிறந்த வகையில் ஆற்றி வருவதற்காக இந்த உயரிய விருது வழங்கப்படவுள்ளது
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆச்சிரம முதல்வராக செல்வச்சந்நிதி ஆலய சூழலில் 365 நாட்களும் பசிப்பணி தீர்க்கும் ஈழத்தின் நவயுக வள்ளலாராக சுவாமிகள் விளங்குகின்றார் என்றால் அது மிகையில்லை
மலையகத்தின் மண்சரிவு அனர்த்தங்களில் உதவ பத்தாண்டுகளிற்கு முன்பு ஆரம்பித்த பயணம் இன்று வரை பல ஏழை குழந்தைகளிற்கு தொடர் கல்வி உதவிகளாகவும், பாடசாலைகள் அறநெறிப்பாடசாலைகள் சிறுவர் இல்லங்களிற்கான பல பரிணாம உதவிகளாகவும் தொடர்கின்றன.
எம் தமிழ் சொந்தங்கள் தனித்து விடப்பட்ட இடங்களிலெல்லாம் சுவாமிகளின் அன்புக்கரம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கின்றது. அனுராதபுரம், பொலனறுவை அம்பாறையின் பல கிராமங்களில் சுவாமிகளின் உதவியினால் பல கல்விச்சாலைகள், ஆலயங்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன.
மாதாந்தம் சுவாமிகளின் ஆச்சிரமத்தில் பலருக்கு கல்வி மருத்துவ அறக்கொடைகள், வறிய சிறார்கள் பாடசாலை செல்ல சைக்கிள்கள் என பல மனிதநேய கைங்கரியங்கள் நடைபெற்று வருகின்றன.
சுவாமிகளின் வழிநடத்தலில் ஆன்மீக ஆற்றுப்படுத்தலிற்காக சந்நிதியான் ஆச்சிரமம் வாராந்தம் சைவச்சொற்பொழிவுகளையும் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை ஊடாக முன்னெடுப்பதோடு தொடர்ச்சியாக #ஞானச்சுடர் இதழையும் வெளியிட்டும் வருகின்றது.
யாழிலிருந்து கிழக்கிலங்கை ஊடான பக்தி வைராக்கியம்மிக்க ஆயிரக்கணக்கான அடியவர்கள் பங்குபெறும் கதிர்காம பாதயாத்திரையில் சுவாமிகளின் அருள் வழிகாட்டல் உபசரணைகள் வார்த்தைகளிற்கு அப்பாற்றப்பட்டது.
எத்தனையோ கௌரவிப்புகளை விருதுகளை கண்டுவிட்ட போதும் மிக எளிமையான சிவனடியாராக முருக பக்தராக எல்லாம் அவன் அள்ளி தருகின்றான் நான் வழங்குகின்றேன் என அடக்கமாக தெரிவிக்கும் சுவாமிகள் வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிகின்ற உன்னதமானவராக
திருமூலர் கூறும் சைவம் காட்டும் உயரிய மானிட நேயச்சிந்தையான அன்பே சிவதிற்கு உயிர்தந்த வள்ளலாக வாழ்ந்து வருவது கண்கூடாக நாம் அனைவரும் காணும் காட்சியாகும்.
இத்தகைய முன்னுதாரணமான ஆன்மீகப் பெரியவருக்கு, மனிதநேய வள்ளலுக்கு தம் உயரிய விருதான அன்பே சிவத்தை அகில இலங்கை சைவ மகா சபை இந்த சைவர்களின் அதி உன்னத விரத நாளாகிய இறை சிவனை நினைந்துருகும் மகா சிவாராத்தரி நாளில் அறிவிப்பதில் மீளவும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது. - அகில இலங்கை சைவ மகா சபை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.