தேடிவந்த அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளாத சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)
வடமாகாண அமைச்சு பதவிகளில் ஒன்றைப் பெறுப்பேற்கக் கொள்ளுங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை தான் மறுத்திருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் அமைச்சர் பதவிக்காக முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவித்தார். சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக நேற்று முன்தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாக முதலமைச்சர் என்னிடம் கேட்டிருந்தார். நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அதற்கு மேல் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக இருந்தவர், மற்றும் எதனையும் செய்யக் கூடியவர் என்ற வகையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை எடுத்துக் கொள்ள இயலுமா என முதலமைச்சர் கேட்டதில் தவறு இல்லை ஆனால் அதனை நான் மறுத்திருக்கின்றேன் .
காரணம் அமைச்சர் பதவிக்காக முதலமைச்காருக்கு ஆதரவு வழங்கினேன் என்று யாரும் கூறக்கூடும் என்பதுடன், அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்டு விட்டு நாங்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஜெனிவாவிற்கு சென்று ஒன்று இரண்டு மாதங்கள் நிற்க இயலாது. அதேவேளை 1 ஆம் திகதிக்கு பின்னரும் முதலமைச்சர் என்னிடம் கேட்டிருந்தார். அப்போதும் நான் அதனை நிராகரித்தேன்.மேலும் நான் அமைச்சுப்பொறுப்புக்களை எடுப்பதால் மற்றவர்களுக்கு தடையாகவும் நான் இருக்கக் கூடாது இதே போல் தென்னிலங்கை ஊடகங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்கிறீர்களா என்று
கேட்கின்றார்கள். ஒரு வேலை அமைச்சு பதவியை நான் பொறுப்பேற்றுக் கொண்டால் அணைக்கு பலம் அதிகரித்து விடும் என அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை ஆனால் வடக்கில் உள்ளவர்களை விட தென்னிலங்கையில் உள்ளவர்கள் அதிகம் அக்கறைப் படுகின்றார்கள் . மேலும் மாகாண சபையை 5 வருடங்கள் வெற்றிகரமாக நடத்தி செல்வதற்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் எந்த எதிர்பாப்பும் இல்லாமல் ஆதரவை வழங்குவேன் என முதலமைச்சருக்கு நான் கூறியிருக்கிறேன் எனவும் சிவாஜி லிங்கம் மேலும் கூறினார். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.