மட்டக்களப்பு முன்னாள் போராளி குடும்பத்திற்கு ரொன்ரோ புளுஸ் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2016 (சனிக்கிழமை)
போரினால் பாதிக்கப்பட்டு மறு வாழ்வளிக்கப்பட்ட மட்டக்களப்பு வாழ் சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் (Canada Toronto blues foundation) பசு மாடும் பத்தாயிரம் ரூபா பணமும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் எரி கடந்து மோட்டார் சைக்கிள், பேருந்து, படகு என்று பல்வேறு பயணங்களை மேற்கொண்டு இந்த உதவியை எடுத்தச் சென்றனர், ரியூப்தமிழ் இளைஞர்கள்.
மட்டக்களப்பில் இருந்து சுமார் 22 மைல் தொலைவில் உள்ள மாவடிச்சேனை என்ற இடத்தில் இருந்து தொலைவில் உள்ள கரடியனாறு என்ற இடத்தில் மிகமிக பாதிக்கப்பட்ட நிலையில், உதவிகள் கனவிலும் சென்றடைய முடியாத தொலைவில் உள்ள முன்னாள் போராளி குடும்பத்திற்கு இந்த உதவி எட்டித்தொட்டது இன்றைய நிலையில் மிகப்பெரிய விடயமாகும்.
கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிக் கொண்டிருக்கும் மகத்தான உதவிகளின் நாலாவது நம்பிக்கை விளக்காக இந்த பசுமாடு வழங்கும் வைபவம் நடைபெற்றது.
கொட்டும் மழையில் நீர் ஏரிகளால் வாகனத்தை ஏற்றி, மாட்டை ஏற்றி மிகப்பெரும் சவாலுக்கிடையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
உதவி வழங்குவதைவிட ஆயிரம் மடங்கு கடினமான பணி அதை உரிய இடத்திற்கு மழை, வெள்ளம், ஏரி பாதைகளற்ற பகுதியால் எடுத்துச் சென்று உரியவர்களிடம் ஒப்படைப்பதாகும், அதைத் திறம்பட செய்தனர் ரியூப்தமிழ் இளைஞர்கள்.
மட்டக்களப்பில் வாழும் முன்னாள் போராளியான சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது, போரினால் தேகம் முழுதும் விழுப்புண்கள் ஏற்று போராளியான கணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காடுகள் நிறைந்த பகுதியில் பிள்ளைகளுடன் ஒரு ஜீவமரணப் போராட்டம் போல இவர்கள் வாழ்வு தடுமாறிக்கொண்டிருந்தது.
தற்போதைய நிலையில் ஏழ்மையை வென்று வாழ்வை காப்பாற்றி பிள்ளைகளை வளர்ப்பதே பெரும் வாழ்வாதாரப் போராட்டமாக இருக்கிறது.
உதவி வழங்கச் சென்ற போது இவருடைய கணவனை சந்திக்க முடியவில்லை புற்றுநோய் உபாதையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிள்ளைகள் இப்படியொரு அரிய உதவி வழங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள், வழங்கப்பட்ட பசுமாடு அவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
தம்மைப் போல மேலும் பலர் உதவிகள் எதுவும் அற்ற நிலையில் அன்றாட வாழ்வே போராட்டமாக வாழ்ந்து வருவதாகக் கூறிய சிவமலர் அவர்கள் மற்றவர்களுக்கும் இது போல உதவிகளை வழங்கி வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று அன்போடு புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி கோரிக்கை முன் வைத்தார்.
இந்த உதவியை மனமுவந்து வழங்கிய கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனும் அதை செயற்படுத்திய ரியூப் தமிழும் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்களாகும்.
இதைத் தொடர்ந்து மற்றைய நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கங்கள், வல்வை ஒன்றியங்கள், வல்வை புளுஸ் என்பன தமது கவனத்தையும் இந்தத் திசையில் திருப்புவதற்குரிய தடகள சூழல் காணப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ram (London)
Posted Date: January 01, 2017 at 17:38
மிகச்சிறந்த முன்னுதாரண செயல்திட்டம். செயல் வீரர்களுக்கு எங்களின் பாராட்டுக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.