ஆங்கிலத்தில் ஒரு சொற்தொடர் உண்டு. “Readers are Leaders”. Leaders என்று சொல்லும்போது அரசியல் தலைவர்களை மாத்திரம் சொல்லவில்லை. குடும்பத்தலைமை உட்பட வேலை பார்க்கும் இடங்களிலும் சமூக வாழ்க்கையிலும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு புத்தக வாசித்தல் என்பது பெரிய முக்கிய பங்காற்றுகிறது. படங்கள், TV, Videos பார்ப்பதும் ஓரளவிற்கு உதவினாலும் புத்தகங்கள் வாசிப்பது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது. எம்மை அதிகம் சிந்திக்கவிடாமல் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. நின்று நிதானித்து ஆறுதலாக வாசிக்கலாம். விளங்காத இடத்திலோ அல்லது சிந்தனையைத் தூண்டிவிடும் இடத்திலோ திரும்பவும் வாசித்து அசைபோட்டு நன்றாக ஜீரணித்து எமது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். புத்தகத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எமக்குச் சரியெனப்படும் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாவிடில் எமது செய்கைகள் எமது அனுபவத்திலேயே தங்கியிருக்கும். ஆனால் பல புத்தகங்களை வாசிக்கும்போது பல அறிஞர்களுடைய அனுபவங்களையும், சிந்தனைகளையும், ஒரு விடயத்தை எடுத்துச் சொல்லுகின்ற திறமையையும் எமதாக்கிக் கொள்ளலாம். எமது எழுதாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. எமது நிலைப்பாட்டை பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் திறமையான முறையில் எடுத்துக்கூறும் ஆற்றல் தொழில் ரீதியாகவும் சிறந்த பலனைத்தரும்.
ஆனால் இப்போது இந்தப் பழக்கம் எமது சமூகத்தில் மிகவும் குறைந்து வருகிறது. முக்கியமாக மாணவர்கள் , இளையர்கள் மத்தியில் துப்பரவாக இல்லாமல் போய்விட்டது.
வல்வை மாணவர்கள், இளையர்கள் மத்தியில் புத்தக வாசித்தலில் ஆர்வத்தைக் கூட்டுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. “வல்வை புத்தகப் பூச்சிகள்” “ Valvai Book Worms” என்கின்ற வாசிப்பு மையம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதிலே அங்கத்தவர்களாகச் சேரும் முதல் 50 பேருக்கு தலா ரூபா 200/= கொடுக்கப்படும்.
நீங்கள் வாசிக்கும் புத்தகத்தின் சாராம்சத்தையும், உங்கள் கருத்துக்களையும் ஒரு பக்கத்திற்குக் குறையாமல் எழுதி எனது மின்னஞ்சலுக்கு (asrajendran@hotmail.com) அனுப்பினால் ரூபா 500/= முதல் 2000/= வரை கொடுக்கப்படும். இந்தத் தொகை கட்டுரையின் தராதரத்தில் தங்கியில்லை. ஒவ்வொரு மாதமும் பங்குபற்றும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது.
அங்கத்தவர்களாக இல்லாதவர்களும் பங்கு பற்றலாம். இவர்களுக்கு முதல் புத்தக்ப் பரிசுடன் ரூபா 200/= அதிகமாகக் கொடுக்கப்படும். புதிய அங்கத்தவர்களாகச் சேர்க்கப்படுவார்கள்.
புத்தகங்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.
வல்வையில் ஏற்கனவே இயங்கிவரும் அமைப்பு ஏதாவது இந்த வாசிப்பு மையத்தைப் பொறுபேற்று நடத்த விரும்பினால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும். ஊக்கத்தொகையை நான் தருகிறேன்.
புத்தகம் வாசிப்பதற்கு உங்களுக்குத் தரப்படும் பணத்தை ஒரு ஊக்கத்தொகையாகக் கருதவேண்டுமேதவிர இது கூலியில்லை. நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மிகச்சிறிய குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது அவர் கோவிலுக்குப் போவதை ஊக்கப்படுத்துவதற்காக அவரது தந்தையார் அர்ச்சகர் மூலம் ஒவ்வொரு நாளும் வாழைப்பழம் கொடுப்பாராம். அதேமாதிரி உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் இந்த ஊக்கத்தொகை. புத்தகங்களை வாசிக்க வாசிக்க உங்களில் ஏற்படுகின்ற மாற்றம் ஊக்கத்தொகையின்றியே மேலும் பல புத்தகங்களை வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் என்று நம்புகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.