10 ஆம் ஆண்டு மாணவர் பாடப்புத்தகத்தில் நவீன கடல் தொழில், ஆனால் எமக்குத் தடை - பாதிக்கப்பட்ட மீனவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2014 (புதன்கிழமை)
10 ஆம் ஆண்டு மாணவர்களிற்குரிய பாடப்புத்தகத்தில் நவீன கடற்தொழில் பற்றி கூறப்பட்டுள்ள போதிலும் எமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதென இழுவைப்படகு தொழில் மறுக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிதுள்ளனர். இது குறித்து குறித்த மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு,
எங்கள் குடும்பங்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். 1974 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நோர்வே நாட்டு சீனோர் நிறுவனமே, அந்த இழுவைப்படகு தொழில் முறையை அறிமுகப்படுத்தி இருந்தது.
அன்று தொட்டு இன்று வரை நாம் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். 1983 ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்த காரணத்தால் கடற்தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தோடு பாஸ் நடைமுறையும் அமுல் செய்யப்பட்டிருந்தது.
2002ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பான கச்சேரி முன்றலில் கடற்தொழிலாளர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 10 நாட்கள் நடைபெற்றது. இப் போராட்டத்தின் மூலம் பல கடற்தொழில் தடைகள் தளர்த்தப்பட்டன.
ஆனாலும் கடற்தொழிலை நம்பி இருக்கும் நாங்கள் பல கஷ்டங்களின் மத்தியில் இருந்த வண்ணம் உள்ளோம். இப்படி இருக்கும் வேளையில் இழுவைப்படகு தடை தடை செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி, எமது தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத வண்ணம் எமக்கு பல வழிகளிலும் இடையூறு விளைவித்து வருகின்றனர்.
அதாவது 2010ம் ஆண்டு வர்த்தமானியில் தடை விதித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், வர்த்த மானியில் இயந்திர நுட்ப இழுவைப் படகு மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாம் எமது வலுவை மட்டுமே பிரயோகித்து இலுவைப்படகுத் தொழிலை செய்து வருகின்றோம்.
இத் தொழில் தடைசெய்ப்பட்டதல்ல. இது இப்படி இருக்கும் பட்சத்தில் இலங்கையில் பலவகையான மீன்பிடித்தொழில்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி தடைசெய்யப்பட்டுள்ள கடல் தொழிலைத் தடுக்க நடவடிக்கைகள் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை.
ஆனால், தடைவிதிக்கப்படாத எங்கள் தொழிலை மாத்திரமே குறிவைத்து இடையூறு விளைவிப்பவர்கள் கடற்படையைக் கொண்டு எமது இலுவைப்படகுகளை பிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் எமது குடும்பங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல், நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பசி, பட்டினி படிக்கும் மாணவர்களின் படிப்பு அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளோம்.
அத்தோடு தென்னிலங்கையிலும் மன்னாரிலும் இழுவைப்படகுத் தொழில் செய்வதற்கு அனுமதித்துள்ளனர். இன்றுவரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதிக் கடலில் ஊடுருவி கடல் அட்டை பிடித்தல் மற்றும் சட்ட விரோதமான கடற் தொழில்கள் அனைத்தும் செய்துவருகின்றனர்.
கொக்கிளாய் மற்றும் நாயாறு ஆகிய பகுதிகளில் 170 தென்னிலங்கை கடற் தொழிலாளர்களிற்கு இடங்கள் (பாடுகள்) உள்ளன. ஆனால் 400 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் சட்ட விரோதமாகத் தங்கி, தடை செய்த தொழில்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
வடபகுதி கடலில் மனிதவலுவினால் இயக்கப்படும் இழுவைப் படகுகளினால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை.
வேண்டுமென்றால் நாரா, நெட்டா போன்ற கடற்தொழில் ஆராச்சி அமைப்புக்களைக் கொண்டு வடமாகாண சபை ஆய்வுசெய்து பார்க்க நடவடிக்கை எடுத்தால் இழுவைப்படகு தொழிலாளர்களாகிய நாம் ஆய்வுக்கு எமது படகுகளை இலவசமாக கொடுத்து உதவுவதுடன் முழு ஓத்துழப்பையும் தரத் தயாராகவுள்ளோம்.
இழுவைப்படகுகளால் சிறு தொழிழ்களைச் செய்யும் கடல் தொழிலாளர்களிற்கு இடையூறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதிலும் உண்மையில்லை. நாம் 6 மாதங்களிற்கு மட்டுமே இழுவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.
மேலும் சிறு தொழலாளர்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக இரவு நேரங்களில் இழுவைத் தொழிலில் ஈடுபடுவது இல்லை. அதாவது காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரையுமே (பகலில்) தொழில் ஈடுபட்டு வந்தோம்.
இந்தியாவில் கடல் வளத்தை பாதுகாக்க மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் 45 நாட்கள் கடல் தொழில் செய்ய தடைவிதிக்கப்ப்ட்டுள்ளது. இங்கு அவ்வாறான நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை.
10 ஆம் ஆண்டு மாணவர்களிற்கான பாடப்புத்தகத்தில் நவீன கடல் தொழில் முறைகள் என்ற தலைப்பில் இழுவைப்படகுத் தொழில் படத்துடன் குறிக்கப்பட்டுள்ளது.
குறித்த இழுவைப் படகுத் தொழிலுக்கு உள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எமது தொழிலையும் சுதந்திரமாக எம்மை செய்ய அனுமதிக்குமாறும் கோரி நேற்று முன்தினம் (06.10.2014) காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் உள்ள ஞான வைரவர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரத்ப் போராட்டம் ஒன்றை எமது குடும்பங்கள் சகிதம் நாம் மேற்கொண்டோம்.
மேலும் இம்மாதம் 9 ஆம் திகதி அதாவது நாளை கைதடியில் உள்ள மாகாணசபை முன்றலில் காலை 8 மணி தொடக்கம் ஆர்பாட்டம் ஒன்றையும் நடத்த தீர்மானித்துள்ளோம்.
அப்பிரச்ச்னைக்கு தீர்வுகாண வட மாகாண முதலமைச்சர், வட மாகாண மீன் பிடி அமைச்சர், வட மாகாண சபை உறுப்பின்றாகள், கடற் தொழில் திணைக்கள உதவிப் பனிப்பாளார் உடபட்ட அனைத்து தரப்பினராதும் ஒத்துழப்பினை வேண்டி நிற்கின்றோம்.
வல்வெட்டித்துறை கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.