வல்வை நகரசபை தனது புதிய கட்டடத்தில், கடந்த பங்குனி மாதம் 18ஆம் திகதியிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. 1990 இல் நிறைவேற்றப்பட்ட வல்வை நகர நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளித்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.m .k .சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது.
இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய மேன்மை தாங்கிய ஜனாதிபதி திரு.R . பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர நிர்மாணத் திட்டத்தின் கீழேயே நகரசபைத் திட்டத்தை விட, 1987 இல் சேதமடைந்த வல்வைச் சந்தி பொது கட்டடத்தின் புணருத்தாரண வேலைகள், வல்வை மீன் சந்தை, வல்வைப் பொது நூலகமும் பஸ் தரிப்பிடமும், மற்றும் கலாச்சார மண்டபம் போன்றன அமைப்பதற்கான வரைபடமும், திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றில் 1987 இல் சேதமடைந்த வல்வைச் சந்தி பொது கட்டடத்தின் புணருத்தாரண வேலைகள், வல்வை மீன் சந்தை, வல்வைப் பொது நூலகத்துடன் கூடிய பஸ் தரிப்பிடம் ஆகியவற்றின் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
கலாச்சார மண்டப வேலைகள் இடமின்மையால் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், ஆஸ்திரேலியாவிலுள்ள நலன் விரும்பிகளால் கொடுக்கப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபாய்கள் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளன. கலாச்சார மண்டபம் ஆனது, வாடி ஒழுங்கைக்கும் ஆலடிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் (பழைய விறகு டிப்போ) அமைக்க முயற்சிக்கப்பட்டது.
ஒரு சில வருடங்கள் தடைப்பட்டிருந்த நகரசபைக் கட்டடத்தின் கட்டுமான வேலைகள், கடந்த இரு வருடங்களாக 'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்' கீழ் உள்ள "என்றிப்" [Emergency Northern Recovery Project (ENReP)] திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வல்வை நகரசபைக்கான புதிய கட்டடத் தொகுதியின் திறப்பு விழா, கடந்த பங்குனி மாதம் 1 ஆம் திகதி தற்போதைய நகரசபைத் தவிசாளர் திரு நடராசா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்தது. இவ் விழாவில் வடக்கு மாகான ஆளுநர் திரு. சந்தரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய வல்வெட்டித்துறை நகரசபையானது, காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியில், வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து மேற்காக சுமார் 500m தொலைவில், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.