இளைப்பாறிய பாடசாலை அதிபரும் நாடகக் கலைஞருமான 'தென்மோடித் திலகம்' திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வையின் கல்வித் துறையிலும் நாடகத் துறையிலும் பெரும் பங்காற்றியிருந்த திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள் மறைவு கடந்த 6 ஆம் திகதி கனடாவில் காலமானார்.
திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை பற்றி, அன்னாரின் மறைவையொட்டி அவரின் உறவினர்களாலும், நண்பர்களாலும் வெளியிடப்பட்ட அன்னாரின் வாழ்க்கை வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இளைப்பாறிய பாடசாலை அதிபர்
'தென்மோடித் திலகம்'
திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள்
இளவாலை போயிட்டி என்ற இடத்தில் 1.9.1926ம் ஆண்டு பிறந்த திரு. அந்தோனிப்பிள்ளை (திரவியம்) அவர்களின்; தந்தையார் பெயர் சூசைமுத்து, தாயார் பெயர் மரியம்மா. இவருடன் பிறந்தவர்கள் செல்வரத்தினம், வில்வீனம்மா ஆகிய இரு சகோதரிகள்.
இவருக்கு நான்கு பெண்பிள்ளைகளும், மூன்று ஆண்மக்களும் உள்ளனர். கல்வியில் அவர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வளர்த்தார். அதன்பலனாக அவரது மூத்த மகளை வைத்தியராகவும், அவரது இரு பிள்ளைகளை தனது வழியில் ஆசிரியப் பணியிலும் ஈடுபடவைத்தார்;. நல்ல மருமக்களைப் பெற்றார். பதினான்கு பேரப் பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந்தார்.
பால்குடி மறவாத நிலையில் தன் பெற்றோரை இழந்த திரவியம் அவர்கள் பலத்த சிரமங்களின் மத்தியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். எட்டாம் வகுப்புப் பரீட்சையை பாடசாலைக்குப் போகாமலே படித்து, பரீட்சை மட்டும் எடுத்து திறமைச் சித்தி பெற்றார். அப்பொழுது குருமடத் தலைவராக இருந்த தியோகுப்பிள்ளை ஆண்டகையின் ஊக்குவிப்பில் தனது கல்வியை இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் தொடர்ந்து, கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியை முடித்து, களுத்துறை, முருங்கன், வவுனியா, வல்வெட்டித்துறை, செம்பியன்பற்று, குடத்தனை, புலோலி முதலிய இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் சேவை செய்து இளைப்பாறியவர்.
ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் விடைகொடு தாயே, யார் குற்றவாளி, கவரி வீசிய காவலன், காதலா கடமையா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். அந்தோனிப்பிள்ளை அவர்கள் நெறியாள்கை செய்த கூத்துகளில் சங்கிலியன், விஐய மனோகரன், கற்பலங்காரன், மரியதாசன்; போன்றவற்றைக் குறிப்பிடலாம். முப்பதுக்கு மேற்பட்ட நாடகப் போட்டிகளில் கலாநிதி சிவத்தம்பி, கலையரசு சொர்ணலிங்கம், கலைப்புலவர் நவரத்தினம்; முதலியவர்களுடன் நடுவராக பல தடவைகள் பணியாற்றியிருந்தார். அகில இலங்கை ரீதியிலாக நாடகப்போட்டிகளில் பல தடவைகள் அவரது நாடகங்கள் வெற்றி பெற்று பாடசாலைகளுக்குப் பெருமை சேர்த்தார்.
இவர் ஆசிரியத் தொழில் செய்த இடங்களிலும், பாடசாலைகளிலும் நாடக, கூத்துக் கலைக்கு தன்னாலான பணிகளைப் புரிந்துள்ளார். இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, பேருவல பாடசாலைகளில் கற்பித்த காலங்களில் இஸ்லாமிய மாணவர்களுக்கு சமய போதனை ஆசிரியர்; இல்லாத நிலையில் தானே திருக்குர்ஆனைக் கற்று, இஸ்லாமிய பாடத்தைக் கற்பித்தார். நளீம் ஹாஜியார் என்ற பெருந்தகை இவரைப்பாராட்டி அவ்வேளை கௌரவமளித்திருந்தார்.
மன்னார் மாவட்டத்தில் முருங்கன் கிறீஸ்துராசா பாடசாலையில் கற்பித்த காலத்தில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியிருந்தார். அவரது ஆசிரிய நண்பர்; திரு. குழந்தை அவர்களுடன் மன்னார்; மாதோட்டப்பங்கு நாடகங்களில் நேரடியாகப் பங்குபற்றியுள்ளார். மட்டக்களப்பு ஆசிரிய நண்பர்களால் இருமோடி மரபுக் கூத்துக்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். யாழ் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, செம்பியன்பற்று, குடத்தனை, மணற்காடு, புலோலி மகாவித்தியாலயங்களில் கற்பித்த காலங்களில்; அங்கு பல நாடகங்களையும், நாட்டுக்கூத்துக்களையும் மேடையேற்றி மாணவர்களதும், ஊர் மக்களதும் பேராதரவையும் மதிப்பையும் பெற்றார்.
ஈழத்தில் 02.04.1977ல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தினகரன் அண்ணாவியார் மாநாட்டில் திரு.அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கு 'தினகரன் கௌரவ விருது' வழங்கப்பட்டது. இவர் சங்கிலியன் நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றியபோது வண.றெஐp ராஜேஸ்வரன் அடிகளாரால் 'நவரசத் திலகம்' என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். கனடா- ஒன்ராறியோவில் மூன்று தடவைகள் 'குன்றில் எழுந்த குரல்' நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றினார். 6.5.2000ல் கியுபெக்-மொன்றியால் நகர் முத்தமிழ் மன்றத்தினரால் நடத்தப்பட்ட 'யாழ் அரசன்' நாட்டுக் கூத்துக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு 'கூத்துக்கலைவேந்தன்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2001ல் தமிழ்க்கலை தொழில் நுட்பக் கல்லூரி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரி மாணவர்களுக்காக 'வேங்கை நாட்டு வேந்தன்' என்ற நாட்டுக்கூத்தை எழுதி மேடையேற்றி பலரதும் பாராட்டைப் பெற்றார். ரோறன்ரோவில் ஆறு தடவைகள் மேடையேறிய அவரது மருமகன் அன்ரன்பீலிக்ஸ் ஒளவையாராக நடித்த இசை நாடக வெற்றிக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்.
கூத்துக்கலை பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருந்த புகழ்பெற்ற கலைஆசான் ஈழத்துப் பூராடனார்; அவர்;கள் திரு.அந்தோனிப்பிள்ளை அவர்களைச் சந்தித்து அவரைப்பற்றி அறிந்து 'கூத்துக்கலை திரவியம்' என்ற நூலை 2000ம் ஆண்டு ஆக்கியிருந்தார். அந்நூலில் அந்தோனிப்பிள்ளை அவர்களது கலைப்பயணம் பற்றியும் அவரெழுதிய முழுமையான இரு நாட்டுக் கூத்துக்களும் பாடல்களோடு நாட்டுக் கூத்தினைத் தெரிந்த எவருமே பாடி நடிக்கக் கூடிய வகையில் சேர்த்துள்ளார். 2005ல் இவரது 'சுயசரிதையும் கூத்துக் கலையும்' என்ற நூலும், அவரது கூத்துப்பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் ரொறன்ரோவில் வெளியிடப்பட்டது.
வாழும் போதே கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதற்கமைய ரொறன்ரோவில் உள்ள கீதவாணி வானொலி நிலையம் முதன்முறையாக அவரை செவ்வி கண்டு கௌரவித்திருந்தது. கனடிய நாடகக் கலையரங்கை அமைத்து, கலைப்பணி ஆற்றிவரும் கணபதிரவீந்திரன,; திரு எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்களை தனது நாடகப் பெருவிழா மேடையில் கௌரவித்திருந்தார்.
உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் தனி இடத்தைப் பெற்றுள்ள 'காலம்' சஞ்சிகையிலும், 'தூறல்' சஞ்சிகையிலும் திரு.செல்வம் அவர்கள் கூத்தர் திரவியம் என்ற கட்டுரையை எழுதி திரு எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்களைச் சிறப்பித்திருந்தார். 2013ம் ஆண்டு மே மாதம், தாய்வீடு பத்திரிகையில் ஆழத்துமுத்துக்கள் என்ற பகுதியில் ஆர்.எல்.சேவியர் அவர்கள் தென்மோடித்திலகம் திரு எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்களைப் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார்.
'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பதற்கமைய வாழ்ந்த திரவியம் மாஸ்ரர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்களை உலகெங்கும் உள்ள அவரது மாணவர்;கள், ஆசிரிய நண்பர்கள், நாடக நாட்டுக்கூத்துக் கலைஞர்கள், குறிப்பாக கனடாவாழ் வல்வைமக்கள் - மாணவர்கள், கலைஉலக உறவுகள், அவரை செவ்வி கண்ட ஊடகத்துறையினர், குடும்பத்தார், உறவினர் அனைவரும் இத்தருணம் நினைவு கூர்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.