நிதியுதவி மாத்திரமே வழங்கப்படுமென்கிறார் கல்வியமைச்சர்எதிர்வரும் காலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படமாட்டாது. அவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியுதவி மாத்திரமே பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை, நுகவெல மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவின் 132 ஆவது பிறந்தநாள் ஞாபகார்த்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துவதோடு, அவர்களின் சிறுபிராயத்தை பறித்தெடுக்கும் தாய்மார்களின் பரீட்சையாக மாறியுள்ளது. இந்த நிலைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும், ஒழிக்கப்படவும் வேண்டும்.
உலகம் இன்று மிக வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது. எமது சிறார்கள் ஒரே இடத்தில் தரித்து நிற்கமுடியாது. நாட்டிலுள்ள 10,161 பாடசாலைகளில் 7,000 பாடசாலைகளை "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற அடிப்படையில் அபிவிருத்தி செய்து கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளோம்.
பௌதீக வளங்களைப் போன்று மனித வளத்தையும் அபிவிருத்தி செய்வோம். ஆசிரியர், அதிபர்கள் உட்பட கல்வித்துறையில் அவசியமானவர்களுக்கு பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வோம்.
நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான அறிவூட்டலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இந்த நாட்டில் சுமார் 42 இலட்சம் மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்களின் எதிர்காலம் என்பது நாட்டின் குறுகிய எதிர்காலமல்ல என்றும்
கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். (வீர்கேசரி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.