அக்கரையில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்ணுக்கும் இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2017 (சனிக்கிழமை)
யாழ் தொண்டைமானாறு அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றவேண்டாம். சிறுவர் பூங்காவாக மாற்ற வேண்டும் எனக்கோரி அக்கரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மேற்படி போராட்டத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் பெண் இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருடைய பிறந்த நாள் பலாலியில் கொண்டாடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை வடமாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது தொண்டைமானாறு - அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டாம் எனக் கோரி மக்கள் போராட்டம் நடாத்தி வருவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ் .சுகிர்தன் விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். அது தொடர்பான விவாதத்திலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன் போது மேலும் அவர் கூறுகையில் அக்கரை கடற்கரைப் பகுதியை சுற்றுலா தளமாக மாற்றவேண்டாம் எனக் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வரும் பெண் இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். மேலும் அவருடைய பிறந்த நாள் கூட பலாலியில் கொண்டாடப்பட்டுள்ளது. அதனாலேயே போராட்டம் நடாத்தப்படும் இடத்தில் பல புலனாய்வாளர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ. பரஞ்சோதி, அக்கரை கிராமத்தில் வாழும் பல மக்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் போராட்டத்திற்கு வராத மக்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், அக்கரை கடற்கரையை சிறுவர் பூங்காவாக மாற்றுவது உடனடியாக சாத்தியப்படக் கூடிய விடயம் அல்ல. அதில் பல நிர்வாக சிக்கல் உள்ளன. எனவே உடனடியாக செய்ய முடியாத விடயத்திற்கு சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவது பொருத்தமற்ற விடயம் எனக் கூறியதுடன், போராட்டம் நடைபெறும் இடத்தில் அளவுக்கு அதிகமான புலனாய்வாளர்கள் நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கூறுகையில் மேற்படி அக்கரை கடற்கரையில் பல கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் மேற்படி விடயம் முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.(தினக்குரல்-29-09-2019)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.