Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கே.எஸ்.சிவகுமாரன் - ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம்

பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2022 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன்.
 
இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை. 'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது.
 
இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின் 'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.
 
Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக் கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்! கொழும்பில் நடைபெற்ற ஃபூக்கோ நினைவுக் கருத்தரங்கில், ஃபூக்கோவின் பார்வையில் George Buchner என்ற ஜெர்மானிய நாடகாசிரியர் எழுதிய WoyZeck என்ற துன்பியல் நாடகத்தை ஆராய்ந்து, அசோகா தி சொய்ஸா என்ற ஆங்கில விமர்சகர் செய்த ஆய்வுரையை கே.எஸ். சிவகுமாரன் தன் குறிப்பிலே எழுதுகிறார்.
 
இது தமிழ்ப் புலமையாளர்களில் எத்தனை பேருக்கு அர்த்தமாகும்? ஆங்கிலத்தில் Story of Western Science என்ற தலைப்பில் J.G.Bruton எனற அறிஞர் எழுதிய நூலினை ஆதாரமாகக் கொண்டு, 'மூன்று நூற்றாண்டின் முன்னேற்றச் சிந்தனைகள்' என்று, 24 பக்க அளவில் அந்நூலின் சாரத்தைத் தமிழுக்குக் கொணர்வது என்பது எத்தகைய உழைப்பை விழுங்கி இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இலக்கிய ஆய்வுப்பரப்பில் இந்த மனிதர் எவ்வளவு நுணுக்கமான அவதானத்தோடு செயற்பட்டு, அதனைத் தமிழில் தரப்பார்த்திருக்கிறார் என்பதை நோக்கும்போது அவர்மீது மிகுந்த மரியாதையே ஏற்படுகிறது. மாப்பஸான், அன்டன் செக்கோவ், நிக்கோலா மாக்கியவல்லி, முல்க் ராஜ் ஆனந்த், நியூ வோல்போல், கத்தரின் மன்ஸ்பீல்ட், ஏ. கோனனோவ் ஆகிய பிரெஞ்சு, ருஷ்ய, ஆங்கில எழுத்தாளர்களின் சிறுகதைகளை எளிமையாகத் தமிழ்ப்படுத்தி 'மித்திரன்' வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கே.எஸ். சிவகுமாரன். உயர்ரக செவ்வியல் இலக்கியங்களை எளிமைப்படுத்தி, திருப்பி எழுதி, சுருக்கமாகச் சிறுவர்களுக்கும், சாதாரண வாசகர்களுக்கும் எடுத்துச்செல்லும் பணியை மேல்நாட்டில் எவ்வளவு நுட்பமாகச் செய்கிறார்கள். சார்ள்ஸ் டிக்கன்ஸின் அனைத்து நாவல்களுக்குமே abridged version கிடைக்கிறது.
 
1960/61இல் இளங்கீரன் வெளியிட்ட ‘மரகதம்’ சஞ்சிகையில், கைலாசபதி அவர்களின் ஆலோசனையில் ஐரோப்பிய நாவலாசிரியர்கள் சிலரை கே.எஸ். சிவகுமாரன் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் தொடங்கிய பெரும் இலக்கியப் பணி அது. அந்தப் பணியைத் தளராது, கூர்மையாகத் தொடர்ந்து செய்துவரும் கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. 
 
கடந்த அறுபது ஆண்டுக்காலத்தில் ஈழத் தமிழிலக்கியத்தில் என்ன நடந்திருக்கிறது என்று அறிய விரும்புபவர்கள் கே.எஸ்.சிவகுமாரனின் நூல்களைத்தான் தேடிப்போக வேண்டும். அத்தகைய மதிப்புவாய்ந்த பதிவு அது. நூற்றுக்கும் அதிகமான ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை அவர் விமர்சனத்திற்குட் படுத்தியிருக்கிறார். ஈழத்தில் வேறெந்த விமர்சகரும் இவ்வளவு பரந்த தளத்தில் விமர்சனத்தை மேற்கொண்டதில்லை. வஸீம் அக்ரம் எழுதுகிறார்: 'சிங்கள இலக்கியப் பகைப்புலத்திலிருந்து புது வரவாக மலரும், அனுராதபுரம் போன்ற பின்தங்கிய இலக்கியப் பிரதேசமொன்றிலிருந்து இலக்கிய இதழ்களுடன் மிக மூத்த படைப்பாளிகளில் ஒருவரான கே.எஸ். சிவகுமாரன் போன்ற ஒருவர் இலக்கிய உறவு வைத்திருப்பது தனிப்பெருமை தரும் செய்தியாகும்' 'கிண்ணியாவில் எழுத்துலகைப் பொறுத்தமட்டில் மூன்று அலிகள் இருக்கிறார்கள். ஏ.எம்.எம். அலி, எம்.வை.எம். அலி, ஏ.ஏ. அமீர் அலி. அதேபோல அன்று கிண்ணியா என்றதும் ஞாபகத்திற்கு வந்தவர் ‘அண்ணல்' என்று எழுதுகிறார் கே.எஸ். சிவகுமாரன். எத்தகைய நுட்பமான அவதானக்குறிப்பு!
 
ஈழத்தமிழ் வாசகப்பரப்பிற்கு அவர் அள்ளிக்குவித்திருக்கும் அரிய நூல்களின் வியாப்தி மிகப்பெரிது.
 
ஆங்கிலம், தமிழ், மேற்கத்தைய செவ்வியல் கலாசாரம் (Western Classical Culture) என்ற மூன்று பாடங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவராகப் பயின்று, தான் தேடித்தெரிந்து கற்றதைத் தமிழில் வெளிப்படுத்தும் ஆவலின் முகிழ்வுதான் 'பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்' என்ற கே.எஸ். சிவகுமாரனின் நூல்.
 
லண்டனிலிருந்து வெளியான A.J: The Rooted Cosmopolitan என்ற நூலை வாசித்த மறுகணத்திலேயே அதனைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதை நாங்கள் மனங்குளிர்ந்து வரவேற்ற பொழுதுகள் உண்டு. இதை யார் செய்வர்?
 
புது டில்லியிலிருந்து 1974இல் வெளியான 'சுடர்மலர்' என்ற ஏட்டில் பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய 'ஈழத்தில் இலக்கியத் திறனாய்வு' என்ற கட்டுரையை அறிமுகம் செய்கிறார் கே.எஸ். சிவகுமாரன். எனக்கு இது உண்மையில் புதிய செய்தி.
 
ஜி. சுந்தரமூர்த்தியின் 'பண்டைத் தமிழ் இலக்கியக் கொள்கைகள்' என்று ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூலின் சாரத்தை கே.எஸ். சிவகுமாரன் தரும்போது, இந்தநூல் எங்கே கிடைக்கும் என்று ஓர் இலக்கிய மாணவனுக்கு ஆவல் ஏற்படுவது இயல்பு.
 
'மேலை நாட்டு மெய்ப்பொருள் - சோக்கிரட்டீஸ் முதல் சார்த்தர் வரை' என்று பேராசிரியர் க. நாராயணன் புதுச்சேரியிலிருந்து எழுதிய நூலை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். Bridging Connection என்ற தலைப்பில் இந்தியாவின் நேஷனல் புக் ட்ரஸ்ட் அமைப்பிற்காக ரஜிவ விஜேசிங்க தொகுத்த நூலில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றிருக்கும் தகவலை நமக்குக் கொண்டுவருகிறார். அல்லாதுபோனால், இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளே நமக்கு என்றென்றும் தெரியவராமலே போயிருக்கும். தெ. மதுசூதனனும் கந்தையா சண்முகலிங்கமும் இணைந்து வெளியிட்ட 'சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள்' என்ற நூலாகட்டும், '3ஆவது கண்' என்று சமகால விவகாரங்களில் பெண்ணியலாளர்களின் கண்ணோட்டத்தில் வெளியான நூலாகட்டும், சி. மெளனகுருவின் 'பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்' என்ற நூலாகட்டும் வாசகனின் கவனத்திற்கு இட்டுச்செல்லும் பணியை கே.எஸ். சிவகுமாரன் அயராது செய்திருக்கிறார். பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் வெளியான 'இந்து கலைக்களஞ்சியம்' என்ற அரிய நூலினை எல்லாம் சின்னச் சின்னக் குறிப்புகளுடன் நம் கவனத்திற்குக் கொண்டுசேர்க்கிறார்.
 
'ஆழமான விமர்சனக் கண்ணோட்டம் ஒன்றும் இல்லாது மதிப்புரைகளையும் இலக்கியப்பத்திகளையும் எழுத முடியாது' என்று கே.எஸ். சிவகுமாரனின் விமர்சனப் பாங்கினைப் பாராட்டுகிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
 
'கே.எஸ். சிவகுமாரன் தமிழ் இலக்கியப் பரப்பை வெறுமனே விபரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. பல இடங்களில் அவ்விலக்கியக் கூறுகளை உருவாக்குவதில் செயற்படும் காரணிகளை இனங்கண்டு, அவற்றை விளங்கவும் விளக்கவும் முயல்கிறார். அண்மைக்காலத்தில் பிரவகித்தோடும் இலக்கிய வெளிப்பாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்திய அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்துவதில் அவர் பெருமளவில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்' என்று மதிப்பிடுகிறார் பேராசிரியர் க. கைலாசபதி.
 
'கே.எஸ். சிவகுமாரன் தமிழ்க் கலாசாரத்தில் மட்டுமே தோய்ந்தவர் என்றில்லை; சகல சீரிய விமர்சனங்களினதும் அவசிய அடிப்படைகளாக அமையவல்ல பரந்த அறமும் அழகியலும் சார்ந்த விழுமியங்களிலும் அவர் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார்' என்று புகழ்மிக்க ஆங்கிலப் பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கூறுகிறார். 'கே.எஸ். சிவகுமாரன் The Island பத்திரிகையில் பொறுப்பேற்றுச் செய்த Cultural Pages என்ற பகுதியே வாசகர்களால் முதன்மையாக விரும்பி வாசிக்கப்பட்ட பகுதியாக இருந்தது என்பது நாங்கள் நடத்திய வாசகர் விருப்பத் தேர்வு மதிப்பீட்டிலிருந்து தெரியவந்தது' என்கிறார் உப்பாலி நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜேம்ஸ் எச். லெனரோல்.
 
'இலங்கையில் இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புக்களுள் பெரும்பாலானவற்றை விமர்சித்திருப்பவர் கே.எஸ். சிவகுமாரன் ஒருவரே. இதனால் சிறந்த தமிழ் இலக்கியப்பரப்பில் சிறந்த கலை இலக்கிய விமர்சகராக மதிக்கப்படுபவர்' என்று புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் கணிக்கிறார்.
 
Encyclopaedia of 20th Century World Literature என்ற அரும்பெரும் களஞ்சியத் தொகுதிக்கு, ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையை எழுத, பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்களை விடுத்து, கே.எஸ். சிவகுமாரனை நாடி, சர்வதேச அளவில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதவல்லவராகத் தன்னை நிலைநிறுத்துகிறார் அவர்.
 
ஆங்கிலத்தில் அவர் எழுதிய Tamil Writing in Sri Lanka என்ற நூல் 1974இல் வெளியாகி, இன்று 46 ஆண்டுகள் கழிந்துவிட்டன. கொழும்பில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவிற்கு நான் சென்றிருக்கிறேன். இந்த 46 ஆண்டுகால எல்லையில் கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதிய எழுத்துகளைத் தொகுத்தால் கனதியான மிகப்பெரும் களஞ்சியம் நம் கைவசமாகும்.
 
Tamil Writing in Sri Lanka என்ற ஆங்கில நூலில் 'சிங்கள - தமிழ் சமூகங்களின் புரிதலை நோக்கி...' என்ற முதல் அத்தியாயத்தில், சிங்கள இலக்கிய உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள இளைய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பிரக்ஞைபூர்வமாக முயற்சிகள் செய்யும்போது, சிங்கள வாசகர்கள் தமிழ் இலக்கிய உலகைப் புரிந்துகொள்ள அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனரா? என்று கேள்வியை எழுப்புகிறார் கே.எஸ். சிவகுமாரன்.
 
'இலக்கிய வரலாறு' என்று 15 பக்கங்களில் அவர் செய்திருக்கும் பதிவு முக்கிய இலக்கிய நிகழ்வுகளை அறிக்கையிடுகிறது. மாத்தறையை அண்டிய திக்வல்லை எனும் சிங்களச் சூழலில் 3,500 குடும்பங்களையே கொண்டு வாழும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து, திக்வல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பூ' என்ற இலக்கிய வெளியீட்டிற்கு தனது ஆங்கில நூலில் முக்கியம் தந்து பேசுகிறார். 'சிங்கள இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு' குறித்து கட்டுரை எழுதியுள்ள மர்ஹூம் எம்.எச்.எம். சம்ஸ் அவர்களிலிருந்து ஹம்சா முஹம்மது, எம்.ஏ. இனாயத்துல்லா, திக்குவல்லை கமால் என்று கவனத்தில்கொள்ள வேண்டிய ஆளுமைகளைப் பட்டியலிடுகிறார்.
 
அத்துடன் 'மலையக எழுத்துகள்' என்ற தலைப்பின் கீழ் 1960-70 காலப்பகுதியில் மலையகத்திலிருந்து எழுந்த 35 எழுத்தாளர்களை அடையாளம் காண்கிறார். சி.வி, கே. கணேஷ், பி. கிருஷ்ணசாமி, டி.எம். பீர்முகம்மது, பி.ஆர். பெரியசாமி, இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, கார்மேகம், மு. சிவலிங்கம், சாரல்நாடன் என்று மலையக எழுத்தின் வளத்தை விவரிக்கிறார்.
 
கவிதைப் பிரிவில் எலிக்கூடு, அக்கினிப்பூக்கள், ஹோ-சி-மின் கவிதைகள், வீடும் வெளியும், குறும்பா, காணிக்கை ஆகிய தொகுப்புகளைக் கணக்கில்கொள்ளும் கே.எஸ். சிவகுமாரன் மஹாகவியை நம் காலத்தின் Robert Frost என்று மகுடம்சூட்ட விழைகிறார். பாக்குநீரிணைக்கு அப்பாலிருந்து எழுதுகின்ற கவிஞர்களைவிட மஹாகவி மகத்தான கவி என்று முத்தாய்ப்பு வைக்கிறார். 
 
ஈழத்தின் மூலைமுடுக்கிலெல்லாம் துளிர்க்கும் இளம் எழுத்தாளர்களை எல்லாம் அவரின் எழுத்து அணைத்திருக்கிறது. பிராந்திய எல்லைகளை மேவி, சமய வேறுபாடுகளைக் களைந்து, இனங்களின் செளசன்யத்தை இசைத்து, மொழி வரம்புகளை விரித்துப்போட்டு இலக்கிய யாத்திரை நடத்திய யோகி இவர்.
 
கே.எஸ். சிவகுமாரனின் தேர்ந்த சில விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து, க்ரியா வெளியீடாக அவரின் ஒரு நூலைக் கொண்டுவரும் நோக்கில், நான் அவருக்குக் கொழும்பு முகவரிக்குக் கடிதம் எழுதியபோது, அவர் வெளிநாடொன்றில் இருந்திருக்கிறார். அது பின்னர் சாத்தியப்படாமலே போய்விட்டது.
 
'வளரிளம் பருவத்தில் அல்லது முதிரா இளைஞனாக இருந்த காலத்தில்', அறுபதுகளின் முற்பகுதியில் சிறுகதைத்துறையில் கால்பதித்து, பதினைந்திற்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கும் கே.எஸ்.சிவகுமாரன் பின்னாளில் விமர்சகராகவே பிரகாசித்திருக்கிறார்.
 
'இலங்கையின் நவீன புதுக்கவிதையின் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்திருக்கிறார் என்பதையும் இங்கு பதிவுசெய்வது பொருந்தும். பரீட்சார்த்தமாக கவிதையிலும், புனைகதையிலும் சிவகுமாரன் செயற்பட்ட ஆரம்பகால முயற்சிகள் இவையாகும்'.
 
இவரின் எழுத்துக்களின் வாசகர்களாக அல்லது பயனாளர்களாகக் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது எழுத்தாளர்களுக்கு அப்பால், வாசகப்பரப்பின் எல்லையை விஸ்தரித்திருக்கிறது. கே.எஸ். சிவகுமாரனின் எழுத்திற்கு ஒருவித புலமை அந்தஸ்து வந்துசேர்ந்திருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இது அவரே நிராகரித்துவிட்டிருந்த ஒன்றாக இருந்தது என்பது ஒரு முரண்நகை.
 
கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துப்பணியைப் பாராட்டி, அவரது படத்தை அட்டையில் வெளியிட்டு மல்லிகை தனது 215ஆவது இதழில் (செப் 1988) கெளரவம் செய்திருக்கிறது. 'ஜீவநதி' கே.எஸ். சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழை ஐப்பசி 2011இல் கனதிமிக்கதாக வெளியிட்டு, அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. 
 
சிவகுமாரன் இலங்கையின் அனைத்துத் தினசரிகளிலும், வாராந்த இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறார். சில நாளேடுகளில் பத்திரிகாசிரியராகவும் இருந்திருக்கிறார். இவர் தனது எழுத்திற்கு பத்தி எழுத்தினையே முக்கிய வடிவமாகக் கொண்டிருக்கிறார். 'ஒரு பத்தி எழுத்தாளனாக, எந்த விடயம் பற்றி எழுதுவது என்பதை நானே தேர்வு செய்துகொள்ளவும், எனது சொந்தப் பகுப்பாய்வை மேற்கொள்ளவும், நான் எதைச் சொல்லவேண்டுமோ அதைச் சொல்லவும், அதை எனக்காக்கிக்கொள்ளவும் முடிகிறது. இதற்கெல்லாம் அப்பால், எனது சொந்தக் குரலில் என்னால் எழுத முடிகிறது' என்கிறார் பிரபல அமெரிக்கப் பத்தி எழுத்தாளர் அலன் ஸ்லோன்.
 
சிவகுமாரன் எழுத்து, சரஸ்வதி போன்ற சீரிய சிற்றிதழ்களிலிருந்து, வீரகேசரி வெளியீடான 'மித்திரன்' மாலை ஏடு வரை எல்லா ஏடுகளையும் தனது எழுத்திற்கு களமாகப் பாவித்திருக்கிறார். 'தனக்குக் கிடைத்த சொற்ப பிரசுரதளத்தைக்கூட, அவர் கடந்தகாலங்களில் வெகு செம்மையாகப் பயன்படுத்திவந்துள்ளார்' என்கிறார் மேமன் கவி. இலங்கையில் வெளியாகும் அனைத்து வார மஞ்சரிகளும் ஓர் இலக்கியக் கட்டுரை இத்தனை சொற்களுக்குள் அமைய வேண்டும் என வரையறை வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டின் நாளேடுகளும் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. நீண்ட இலக்கியக் கட்டுரைகளை சாதாரண வாசகர்கள் விரும்புவதில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
 
தான் கண்ட, கேட்ட, வாசித்த, ரசித்த விடயங்கள் பற்றி எழுதுவதற்கு பத்தி எழுத்து வசதியானதாக, உகந்ததாக இருப்பது கண்டு, அந்த வடிவத்தையே அவர் பெரிதும் தேர்ந்திருக்கிறார். அடிக்குறிப்புகள் போட்டு, உசாத்துணை நூல்கள் காட்டி பக்கம்பக்கமாக, ஆழமாக அல்லது அகலமாக கட்டுரை தயாரிக்கும் அவஸ்தை கே.எஸ். சிவகுமாரனுக்கு இல்லை.
 
'இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத் தவிர்ப்பு, (விமர்சனம் என்றால் கன்னாபின்னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல) திட்டவட்டமான முடிவுகளை வழங்காமை, பொருளைச் சுருக்கமாகத் தொகுத்துக்கூறல், கவர்ச்சித்தலைப்பு, இடம், பொருள், ஏவலுக்கேற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி எழுத்துகளுக்கும் பொதுவான அடிப்படை அம்சங்கள்' என்று ஒரு சந்தர்ப்பத்தில் சிவகுமாரன் எழுதுகிறார்.
 
இலங்கையில் வெளியான பல பத்திரிகைகளில் அக்கரைச்சீமையிலே, சருகுகள், மனத்திரை, சித்திரதர்சினி, கனபரிமாணம், நாற்சாரம், சொன்னாற்போல, எண்திசைக்கோலங்கள், நமக்கிடையே, சாளரக் காட்சிகள் ஆகிய தலைப்புகளில் அவர் தொடர்ச்சியாக பத்தி எழுத்துக்களைத் தந்துள்ளார். ஆங்கிலத்திலும் Gleanings, As I like it ஆகிய தலைப்புகளில் பத்தி எழுத்துக்களை எழுதியுள்ளார். வானொலி நிகழ்ச்சிகளிலும் இதே வடிவத்தைக் கையாண்டுள்ளார். இந்த எழுத்துகளில்தான் ஈழத்து இலக்கியத்தின் ஒரு அறுபது ஆண்டுகால வளர்ச்சி பதிவாகியிருக்கிறது. நமது கலை, இலக்கிய ஆளுமைகள் இந்தப் பதிவுகளிலேதான் உலா வந்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்களின் விதப்புரை காரணமாக பழைய சமாச்சாரங்களை தேடித் தன்னிடம் வருவதாகத் தெரிவிப்பது அவருடைய பதிவின் சரித்திர முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
 
இலக்கியம் மட்டுமன்றி, நாடகம், ஓவியம், இசை பற்றிய இவரின் குறிப்புகளும் ஆய்வாளர்களுக்கு அரிய ஆவணங்களாக அமையவல்லன. கொழும்பில் குறித்த ஒரு ஆண்டில் இலங்கை நாடகப் போட்டிக்காக மேடையேறிய நாடகங்கள் எவை, அந்த நாடகங்களின் மையப்பொருள் எது, பங்குகொண்ட நடிகர்கள், நெறியாளர் போன்ற விபரங்களை ரத்தினச் சுருக்கமாக ஒரு பக்கத்தில் Lanka Guardian இதழில் எழுதியிருந்தார். இந்த விபரங்களை வேறு எங்கும் நீங்கள் தேடிப்பிடிக்க முடியாது. இந்தக் கட்டுரை ஒரு archival materialதான்.
 
பரந்த வாசிப்பும், ஆழ்ந்த பார்வையும் தெளிவான எழுத்தாற்றலும் அயராத எழுத்துழைப்பும் கொண்ட ஓர் எழுத்தாளன்மீது எத்துணை சேறடிப்பு நம் இலக்கிய வரலாற்றில் நடந்தேறியுள்ளது என்பதையும் இங்கே நோக்குவது பொருந்தும்.
 
நுனிப்புல் விமர்சகர், மேலோட்டமான எழுத்தாளர் என்று கண்மூடித்தனமான வக்கிரத் தாக்குதல்கள் இவர்மீது நிகழ்த்தப்பட்டன.
 
'மேலோட்டமான குறிப்புத்தெரிவித்தலே உள்ளது, சரியான- நேர்மையான விமர்சனங்களை வைத்தல் செய்யப்படுவதில்லை, அவர் ஒருவகை 'தப்பி ஓடுதல்', 'பொதுமைப்படுத்தல்' போன்ற வாய்பாடுகளுள் அடங்கிவிடுகிறார், இத்தகைய 'நுனிப்புல் மேய்தல்' விமர்சனங்களிலும் பார்க்க ஆங்கிலத்தில் எழுதாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று சொல்லத் தோன்றுகிறது, மற்றைய எல்லா 'மேதாவிகளும்' இத்தகைய போலிகளைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு சும்மா இருக்கையில் தனக்கு சின்ன கோபம் வந்துவிட்டது' என்று மாரீசத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இந்த மனிதர்கள் போலி முகங்களோடு திரிபவர்கள்.
 
'சரிநிகர்' பத்திரிகையில் கே.எஸ். சிவகுமாரனின் 'திறனாய்வுப் பார்வைகள்' என்ற நூலுக்கு மாலின் என்ற பெயரில் ஒரு நபர் மதிப்புரை எழுதியுள்ளார்.
 
'இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் ஆழமான விமர்சன நோக்குடையவை அல்ல. அதனை மேற்கொள்வதையும் தனது பணியாக கே.எஸ். புரிந்துகொள்ளவில்லை. ஆனால், தமிழில் பல்வேறு நூல்கள், எழுத்தாளர்கள், கட்டுரைகள் என்பனவற்றை வாசகர்களுக்கு அறிமுகம்செய்துவரும் பணியை நாம் குறைத்து மதிப்பிடவும் முடியாது' என்று ஒரேயடியாக, மேதாவித்தனத்துடன் எனது நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை (முழுமையாக வாசித்திருப்பாரோ என்று எனக்குச் சந்தேகம். நக்கலாக எழுதுவது 'விமர்சனம்' என்று சிலர் நினைக்கிறார்கள்போலும்) மதிப்புரைக் குறிப்பு எழுதியவர் மட்டந்தட்டியிருக்கிறார். நெஞ்சில் ஒரு முள்ளாக இது குத்தியது' என்று திடீர் விமர்சகர் மாலின் எழுதிய குறிப்பு பற்றி கே.எஸ். சிவகுமாரன் விசனிக்கிறார்.
 
சிவகுமாரனின் இந்தத் 'திறனாய்வுப் பார்வைகள்' என்ற நூலில்தான் விபுலானந்தரின் திறனாய்வு குறித்து 33 பக்கங்களில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பாரதியின் புனைகதைகள் பற்றிய கட்டுரை புதியது. மெளனி, அ.ஸ.அப்துல் ஸமது, தெணியான் போன்றோர் பற்றிய பதிவுகள் முக்கியமானவை. எஸ்.பொ.வின் 'தீ' நாவலுக்கு கே.எஸ். எழுதிய விமர்சன வரிகளில் ஒன்றைத்தானும் சொந்தமாக எழுத இயலாதவர்கள் பொய்ப் பெயர்களில் ஆழமில்லை என்று லேசாகத் தீர்ப்பளித்துவிடுகிறார்கள். எத்தனை inch ஆழம் என்று கொஞ்சம் சரியாகச் சொன்னால் வசதியாக இருந்திருக்கும். 
 
மாலின் மாதிரிப் பேர்வழிகளை சிவகுமாரன்' தற்காலிக அல்லது திடீர் விமர்சகர்' என்று குறிக்கிறார். தங்களின் பெயரைப் போட்டு எழுதத் திராணியற்றவர்கள் இம்மாதிரி மறைந்துநின்று எழுதுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. Fake ID வகையறாக்கள்.
 
'கே.எஸ். சிவகுமாரன் ஈழத்துக் கலை, இலக்கிய உலகில் தூக்கி எறியப்பட முடியாத ஒருவராக நிலைகொண்டுள்ளார்' என்று பேராசிரியர் சி. மௌனகுரு இலக்கிய உலகில் அவரின் இடநிர்ணயத்தை எடைபோடும் வரிகள் அர்த்தம்மிக்கவை.
 
கே.எஸ். சிவகுமாரன்மீது எவரும் கைவைக்க முடியாத, கைவைத்திராத ஒரு துறை சினிமாசார்ந்த அவரது எழுத்துகள்தான். ஈழத்தில் சீரிய கலாபூர்வமான சினிமா ரசனையை உருவாக்கி வளர்த்துச்சென்ற முன்னோடி என்ற பெருமை அவரைச் சாரும். சினிமாக் கோட்பாடுகள் பற்றி தன் நூல்களில் சிவகுமாரன் நிறையவே பேசியிருக்கிறார். அவரின் திரைப்பட விமர்சனங்கள் அவரின் நுட்பமான ரசனையை வெளிப்படுத்துவன. 
 
நீண்ட இந்த எழுத்தாக்க முயற்சிகளுக்கப்பால், எங்கேயும் எவரிடத்தும் காணாத தன்னடக்கமும், எந்த எழுத்தாளனையும் பாரபட்சமின்றி மரியாதை செய்யும் பக்குவமும் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் தெளிவும் கே.எஸ் .சிவகுமாரனிடத்தில் நாம் காணும் உயர் பண்புகள். 
 
மு.நித்தியானநாதன் 
 
(From Social Media))

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2042>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai