தலையங்கத்தை இப்படி கேள்வியாகத் தொடங்கியதற்கு காரணமே அதனுள் அடங்கியிருக்கும் உண்மை பலருக்கு தெரிந்திருக்கும் என்பதே! 'அன்னபூரணி' கப்பலுக்கு இணையாக வேறு ஒரு கப்பலும் கட்டப்பட்டிருக்கவில்லை, எனவே இன்னுமொரு 'அன்னபூரணி' கப்பல் உள்ளதா? என்ற கேள்விக்கும் இங்கு இடம் இல்லை! அப்படியாயின் என்னதான் இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ளது?.
அன்னபூரணி கப்பலின் அமெரிக்க பயணத்தின் எழுபத்து ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை விமரிசையாகக் கொண்டாடும் இவ்வேளையில் வல்வையர்கள் நாங்கள் கட்டாயமாக இன்னமும் ஒன்றை நினைத்தே ஆக வேண்டும் ....
இங்கு வல்வையர்கள் நாங்கள் எனறு மேலே கூறியிருப்பது வேறு யாரும் அல்ல!
வாழ்க்கையை தொடங்கி திறம்பட வாழ நினைக்கும் வல்வை இளைஞர்கள்!
அன்னபூரணி பற்றி எழுதி, விழாக்கள் கொண்டாடி, வல்வை மக்களை சிந்திக்க வைக்கும், ஊக்கமூட்டும் புத்திஜீவிகள்!
சமூகக் குழுக்களும் அங்கத்தவர்களும்!
வல்வையை செல்வம் கொழிக்கும் ஊராக மாற்றத் துடிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள்!
நாட்டு நிலமையில் என்னசெய்வது என்று நடுநிலையில் நின்று பார்க்கும் பாமர மக்கள்!
இன்னமும் சந்தேகம் இருப்பவர்களுக்கும்; புரியாதிருப்பவர்களுக்கும் வெளிப்படையாகக் கூறுகின்றேன்! 'அன்னபுரணியைப் போல இன்னமும் ஒரு கப்பல் ஏன் வல்வையில் தோன்றவில்லை?' என்பதுதான் தலையங்கத்தில் உள்ளடங்கிய கேள்வி.
இன்னமும் ஒரு கேள்வி வாசகர்களிடையே தோன்றக்கூடும்!
யாரப்பா இந்தக் கட்டுரையை எழுதியது? கலங்கரைவிளக்கம்!
உங்கள் மனதைத் தொட்டு உண்மையைக் கூறுங்கள், இந்தக்கட்டுரை ஊருக்கு நன்மை பயக்கும் என்பது முக்கியமா? அல்லது யார் எழுதியது என்பது முக்கியமா? யார் ஆக்கினாலும் அரிசி அவிந்தால் சரி! அன்னதானம் கிடைக்கும்!!
யார் எழுதியிருந்தாலும் அது வல்வைக்கு நன்மையாக இருந்தால் வல்வையில் உள்ள அனைவரும் தொடர்ந்து வாசிப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. வாசிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தொடர்கிறேன் ...
இன்னுமொரு அன்னபூரணியா? என்பது பற்றிப் பார்க்க முன்னர் அன்னபூரணி கப்பல் போன்று பல கப்பல்கள் வல்வையில் கட்டப்பட்டதன் காரணங்களை நாங்கள் அறிதல் வேண்டும். அக்காரணங்களில் முக்கியமானவைகள்:
1. தேவை - இருந்தது!
கப்பல் கட்டினால் அதை விற்கவோ அல்லது அதைப் பாவித்து வியாபாரம் செய்யவோ
சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன, கப்பல்களின் தேவை இருந்தது. றங்கூன், அந்தமான் தீவுகள், இந்தியா, மலாயா என்று பல இடங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தன. இந்தியாவில் இருந்து எங்கள் ஊரில் கட்டப்பட்ட கப்பல்களை வாங்குவதற்கு செட்டிமார்கள் தயாராக இருந்தனர். வேலை வாய்ப்புக்கள் நிறைய ஏற்படுத்தப்பட்டன.
2. கப்பல் கட்டும் நிபுணர்கள் - படித்த கப்பல் கட்டும் நிபுணர்கள் இருக்கவில்லை!
அப்படியாயின், எப்படி பெரிய சமுத்திரங்களைக் கடக்கக் கூடிய உரமான கப்பல்களை அவர்களால் கட்டமுடிந்தது? அவர்களின் அனுபவத்தினால் தான் பெரிய கப்பல்களைக் கட்டினார்கள்! படிப்பால் அல்ல!!
3. முயற்சி - நிறைய இருந்தது!
வல்வை மக்களின் இரத்தத்திலே முயற்சி என்பது இயல்பாகவே ஊறியுள்ளது. கப்பல் கட்டும் அக்காலத்தில் அவர்களின் முயற்சி உலப்புகழ் பெற்றிருந்தது என்றால் மிகையாகாது.
4. கூட்டுறவு - நிறைய இருந்தது!
கப்பல் கட்டுவது மற்றும் கப்பல் வணிகம் செய்வது என்றாலே கூட்டுறவைக் காட்டும். வல்வை மக்கள் கூட்டுறவின் நன்மையை, அதன் தன்மையை நன்றாக உணர்ந்திருந்தனர். அதனால் தான் இலங்கையிலேயே புள்ளிபோன்று இருக்கும் சிறிய ஊர் மக்களால் மலைபோலப் பெரிய சாதனைகளைச் சாதிக்க முடிந்தது.
5. மூலப் பொருட்கள் - இல்லை!
வல்வையில் கப்பல் கட்டுவதற்கு முக்கியமான மூலப் பொருளாகிய மரம் இருக்கவில்லை! அனேகமாக கப்பல் கட்டுவதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வேறு இடங்களில் இருந்து முக்கியமாக இந்தியா றங்கூன் ஆகிய இடங்களில் இருந்துதான் தருவிக்கப்பட்டது.
6. கல்வி - இல்லை! அனுபவக் கல்வி நிறைய இருந்தது!
அனுபவக் கல்விதான் அன்றைய வல்வை கப்பல் கட்டும் மேஸ்திரியார்களையும், மாலுமிகளையும் மிகவும் உன்னத இடத்தில் வைத்திருந்தது. பரம்பரை பரம்பரையாக கப்பல் கட்டும் கலை கப்பல் செலுத்தும் கலைகளை அனுபவரீதியாகப் பெற்றிருந்தார்கள்.
7. அரசாங்க உதவி - இல்லை!
அரசாங்க உதவி பெரிதாக ஒன்றுமே இருந்திருக்கவில்லை!
8. பணவசதி - இல்லை!
வல்வையில் கப்பல் வணிகத்தினால் பணம் படைத்தோர் பலர் உருவாக்கபட்டனர் என்பது உண்மை. கப்பல் வணிகம் ஊரில் தோன்ற முன்னர் ஒரு சிலர் பணம் படைத்தவர்களாக இருந்திருக்கலாம்.
9. மனவலிமை அல்லது பலம் - நிறைய இருந்தது!
வல்வை என்றாலே மனவலிமை பலம் பொருந்தியவர்கள் பிறந்த இடமெனலாம். அதற்கு மேலதிக விளக்கங்கள் தேவையில்லை.
சரி! அன்னபூரணி உருவாகிய காரணங்களைப் போல தற்காலத்திற்கு ஏற்ப கப்பல் கட்டக் கூடிய காரணங்களை அதே உபதலையங்களில் பார்ப்போம்.
1. தேவை – கப்பல் கட்டுவதற்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சற்று விபரமாக ஆராய்தல் வேண்டும்! அது பற்றி பின்னர் விபரமாக ஆராய்வோம்.
2. கப்பல் கட்டும் நிபுணர்கள் - படித்த கப்பல் கட்டும் நிபுணர்கள் இப்பொழுதும் இல்லை! அதில் மாற்றம் இல்லை!
3. முயற்சி - நிறைய இருக்கிறது! அதில் மாற்றம் இல்லை!
4. கூட்டுறவு - நிறைய இருக்கிறது! அதில் மாற்றம் இல்லை!
5. மூலப் பொருட்கள் - இல்லை! அதில் மாற்றம் இல்லை!
6. கல்வி - அனுபவக் கல்வி நிறைய இருக்கிறது! அதில் பெரிய மாற்றம் இல்லை!
அனுபவக் கல்வியுடன் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இன்றும் வல்வையில் உள்ளனர். அவர்களின் கப்பல் கட்டும் விதம் எழுத்து வடிவில் இல்லாவிடினும் வாய்பேச்சு மூலம் கப்பல் கட்டுதற்கான அடிப்படை அறிவு உள்ளவர்கள் பலர் இன்னமும் வல்வையில் உள்ளனர்.
7. அரசாங்க உதவி - இல்லை! அதில் பெரிய மாற்றம் கெடுபிடி வடிவில் வந்துள்ளது!
அரசாங்க உதவி ஒன்றுமே இல்லை! தற்பொழுது அரசாங்க கெடுபிடிகள் கூடியுள்ளன.
8. பணவசதி - இல்லை! அதில் மாற்றம் இல்லை!
ஆனால் வல்வையில் கப்பல் கட்டுதவற்கு ஏற்ப பணவசதி தனிப்பட்டவர்களிடம் சிறப்பாக இல்லாவிடினும் பரவலாக பணவலிமையில் முன்னேற்றம் கண்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் வல்வை மக்களின் உதவியுடன் ஊரில் திரும்பவும் கப்பல் கட்டும் தொழிலை ஏற்படுத்தி வல்வையை திரும்பவும் செல்வம் கொழிக்கும் ஊராகப் பார்க்க முடியும்.
9. மனவலிமை அல்லது பலம் - நிறைய இருக்கிறது! அதில் மாற்றம் இல்லை!
இங்கு நோக்கப்பட்ட காரணங்களில் முதலாவது காரணத்தில் (தேவை) குறிப்பிடப்படக் கூடிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஏழாவது (அரசாங்க உதவி) காரணத்தினால் வல்வைக் கப்பற்றுறை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க உதவி கிடைக்கவேண்டிய இடத்தில் அதன் கெடுபிடிகளினால் எம்மவர் தொழில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது (கல்வி) எட்டாவது (பணவசதி) காரணங்களிலும் சிறுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் சிரமமின்றி வென்றெடுக்கலாம்.
எனவே 'கப்பல் கட்டுவதற்கான தேவை' என்ற காரணத்திற்கும்; 'அரசாங்க உதவி' என்ற மற்றொரு கரணத்திற்கும் எங்களால் விடை காண முடியுமாக இருந்தால் கப்பல் கட்டும் துறையை திரும்பவும் வல்வையில் மிளிர வைக்க முடியும் என்று தோன்றுகிறது.
திரும்பவும் மேலே ஒப்பிட்டுப் பார்த்த காரணங்களை வாசித்து சற்று கடுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்!
இப்பொழுது நீங்களே கூறலாம், 'கப்பல் கட்டும் தேவை', 'அரசாங்க உதவி' இவை இரண்டும் இருந்தால் வல்வையை திரும்பவும் கப்பல் கட்டும் ஊராக எங்களால் மாற்ற முடியும்!!
இதுவரை நாங்கள் வல்வையர்கள், எங்கள் ஊரைத் திரும்பவும் கப்பல் கட்டும் ஊராக மாற்றக் கூடிய முக்கிய காரணங்கள் இரண்டைக் கண்டறிந்தோம்.
இவை பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் உங்கள் துணையுடன் ஆராயவுள்ளேன்!
1. கப்பல் கட்டும் தொழிலின் தேவையை எப்டிக் கண்டிறிவது? எப்படி கப்பல் கட்டுவது?
2. அரசாங்க உதவி எப்படிப் பெறுவது? அல்லது அரசாங்கத்தின் கெடுபிடிகளை இல்லாமல் செய்வது எப்படி?
வல்வை வாசகர்கள் அனைவரையுமே ஆராயுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்! எனது சிந்தனையை விட பெரிதாக சிந்திக்கக் கூடிய எத்தனையோ பலர் புத்திஜீவிகள் வல்வையிலும் வெளிநாடுகளிலும் உள்ளனர்.
உங்களின் சிந்தனைக்குத் தீனியாக சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்!
அன்னபூரணியின் தேவை அந்தக்காலம்! இன்னமும் அன்னபூரணி போன்று கப்பல்களின் தேவை உள்ளதா? அன்னபூரணி பல வருட அனுபவத்தின் பின்னர் கட்டப்பட்ட கப்பல்! அவர்கள் சிறிய படகுகள் கட்டித்தான் பெரிய கப்பல்கள் கட்டுவதில் வெற்றி கண்டார்கள். சிறிய படகுகள் கட்டத் தொடங்கினால் பெரிய கப்பல்கள் கட்ட முடியுமா? எப்படி?
அரசாங்கம் அன்றும் உதவி செய்யவில்லை! இப்போதைக்கு உதவி கிடைப்பது அரிது!
கெடுபிடிகள் இல்லாதிருந்தாலே போதுமானது. அரசாங்கத்தின் கெடுபிடிகள் இல்லாது இருக்க என்ன செய்யலாம்? ஒரு வேளை இலங்கையிலேயே படகுகளை மலிவாக விற்க முடிந்தால் அரசாங்க கெடுபிடிகளைத் தவிர்க்கலாமா? எமது இலக்கில் வெற்றி பெறுவதற்கு வளைந்து கொடுப்பது (flexibility) என்பது மிகவும் முக்கிமான அல்லது தேவையான ஒரு தகமை!
நீங்கள் சிந்தனை செய்யத் தொடங்கிவிட்டீர்கள்!
இங்கு நீங்கள் என்று மேலே கூறியிருப்பது வேறு யாரும் அல்ல!
வாழ்க்கையை தொடங்கி திறம்பட வாழ நினைக்கும் வல்வை இளைஞர்கள்!
அன்னபூரணி பற்றி எழுதி, விழாக்கள் கொண்டாடி, வல்வை மக்களை சிந்திக்க வைக்கும், ஊக்கமூட்டும் புத்திஜீவிகள்!
சமூகக் குழுக்களும் அங்கத்தவர்களும்!
வல்வையை செல்வம் கொழிக்கும் ஊராக மாற்றத் துடிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள்!
நாட்டு நிலமையில் என்னசெய்வது என்று நடுநிலையில் நின்று பார்க்கும் பாமர மக்கள்!
அனவைருமே ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கலாம்! உங்களின் சிந்தனையின் அடிப்படையில் சில வாரங்கள் கழித்து மறுபடி சந்திப்போம்.
கட்டுரையாளர் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், தனது பெயரைக்குறிப்பிடவில்லை. இது எமக்கு ஏற்புடையதன்று. ஆனாலும் கட்டுரையின் கருப்பொருளின் தன்மை கருதியும், கட்டுரையில் சச்சைக்குரிய விடயங்கள் இல்லை என்பதாலும் நாம் பிரசுரிக்கின்றோம்.
இவரின் கட்டுரைகள் தொடர்ந்து எமது இணையதளத்தில் பிரசுரமாகும்.