இந்தப் பக்கத்தை ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களுடன் நேரடியாக பணிபுரிவதை அடிப்படையாக வைத்தும், ரஷ்யா மற்றும் உக்ரைனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு கப்பல்கள் மூலம் சென்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளேன்.
உக்ரைன் (Ukraine, யுக்ரேன்) - 1991 ஆம் ஆண்டு, அகன்ற சோவியத் யூனியனில் (Soviet Union) இல் இருந்து பிரிந்த ஒரு நாடு தான். இலங்கையின் பரப்பளவை விட கிட்டத்தட்ட 9 மடங்கு பெரியது.
1991 ஆம் ஆண்டு வரை சோவியத்தின் கீழ் இருந்ததால், யுக்ரேனில் உள்ள பல மக்கள் ரஷ்யா மொழி பேசுபவர்களாகவும், பல ரஷ்ய பூர்வீக குடிகளும் உக்ரேனில் – குறிப்பாக Donetsk மற்றும் Luhansk போன்ற - யுக்ரேனின் கிழக்குப் மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் வசித்து வருகின்றார்கள்.
2014 இல் ரஷிய ஆதரவு அரசு அகற்றப்பட்டு, ரஷிய மொழி பேசுவதற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்வரை, ரஷிய மொழியானது, உக்ரனில் பேசும்படும் அளவுக்கு ரஷியாவின் தாக்கம் உக்ரேனில் இருந்து வருகின்றது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) நேற்று ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் நோக்கம், ரஷிய மொழி பேசும் உக்ரேனியர்களை குறிப்பாக Donetsk and Luhansk பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனின் மீது ள்ள அமெரிக்காவின் தாக்கம் தான் காரணம் என்கிறார்கள் சர்வதேச ஆய்வாளார்கள்.
சில உக்ரேனியர்கள் மற்றும் ரஷியர்கள் என்னுடன் நீண்ட காலமாகவே பணிபுரிகிறார்கள். ஆகவே அவ்வப்போது அவர்களின் நாட்டுப் பிரச்சனை பற்றி அவர்களுடன் விவாதிப்பது வழக்கம்.
அவ்வாறு தற்பொழுது கூட என்னுடன் பணிபுரியும் உக்ரேனியர்கள் கூறுவது – ரஷியாவின் நோக்கம் உக்ரேனின் கேந்திர மற்றும் பொருளாதார இலக்குகளை – குறிப்பாக உக்ரேனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Odessa, Ilyichevsk (Black sea), Berdyansk மற்றும் Mariupol (Sea of Aoov) போன்ற துறைமுக நகர்களை பகுதிகளைக் கைப்பற்றுவதுதான்.
உக்ரேனின் தலைநகர் கீவின் (Kyiv) மீது கூட ரஷியர்களுக்கு பெரிதாக நாட்டமில்லையாம், ஆனாலும் தலைநகர் என்ற பெயருக்காக தாக்கக்கூடும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே (அதாவது நேற்று தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக பல மாதங்கள் முன்பாக) உக்ரேனின் சில பகுதிகளை துண்டிக்கும் வண்ணம் ரஷிய படைகள் கைப்பற்றியிருந்ததாக இவர்கள் கூறுகின்றார்கள். (எவ்வாறு என்றால் ஆனையிறவு மற்றும் முகமாலை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்க, இவற்றுக்கு இடையில் இயக்கச்சியில் இயக்கம் பிடித்து இருந்ததைப் போல்)
ஆனாலும் மேற்குறித்த விடயம் உலக அளவில் பேசப்படவில்லை. உக்ரேனியர்களுடன் பணி புரியாது விட்டிருந்தால் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னுடன் பணி புரிபவர்கள் கூறியதைப் போலவே தாக்குதலின் முதல் நாளே ரஷிய படைகள் உக்ரேனின் பிரதான துறைமுகமான Odessa வில் இறங்கி விட்டார்கள்.
ரஷியாவுக்கு இவ்வாறு உக்ரேனின் துறைமுக நகர்களை கைப்பற்ற வேண்டியதான் அவசியம் ஏன்.
கீழே படத்தைப் பாருங்கள். அகன்ற ரஷியா.
அகன்ற ரஷியாவின் பிரதான துறைமுகங்கள் 3 தான். ஒன்று கிழக்குப் பகுதியில் ஜப்பானுக்கு வட மேற்காக உள்ள Vladivostok என்னும் துறைமுகம். இன்னும் ஒன்று மேற்குப் பகுதியில் கருங்கடலில் (Black sea) அமைந்துள்ள Novorossiysk என்னும் துறைமுகம். மற்றயது பால்டிக் கடலில் (Baltic sea) அமைந்துள்ள St.Petersburg (Ex Stalin grad) ஆகும்.
இந்த இரண்டில் பெரியது Novorossiysk தான். இந்த துறைமுகம் தான் ரஷியாவின் குறிப்பிட்டுக் கூறக் கூடிய துறைமுகம். இதுதான் ரஷியாவின் பிரதான கொள்கலன் துறை முகமும் கூட. .அடுத்தது St.Petersburg - இது எண்ணை, கொள்கலன் மற்றும் சரக்கு (Bulk) என்பவற்றை கையாளக்கூடியது..
இதே கருங்கடலில் Novorossiysk வட மேற்காக தான் உக்ரேனின் பிரதான Odessa, Ilyichevsk துறை முகங்கள் உள்ளன. நான் மேற்குறித்த 3 துறைமுகங்களுக்கும் சென்ற அனுபவம் உண்டு.
குறிப்பிட்டுக்கூடிய விடயம் என்ன வென்றால், ஆசியாவிலிருந்து கருங்கடலுக்கு சேவையில் ஈடுபடும் கொள்கலன் கப்பல்கள் பெரும்பாலும் உக்ரேனின் துறைமுகங்களுக்கே செல்கின்றன. குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில கப்பல்களே ரஷியாவின் Novorossiysk துறைமுகத்துக்கு செல்கின்றன.
இதேவேளை கிழக்குப் பகுதியில், ஆசியாவுக்கு வடக்காக அமைந்துள்ள உள்ள Vladivostok துறைமுகம் எண்ணை ஏற்றுமதியை மட்டுமே அடிபடையாகக் கொண்டது.
எண்ணை, இயற்கை வாயு என்பன உலகப் பொருளாதாரத்தில் மிகவும் இன்றியமையாதவை என்றாலும், இன்று உலகப் பொருளாதாரம் அளவிடப்படுவது கொள்கலன் வர்த்தகத்தினால் தான். அதனால் தான் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து தேங்கிக் கிடக்கும் கொள்கலங்களுக்கு டொலர் செலுத்தி எடுக்க முடியவில்லை என்ற செய்தி தினசரி பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் உள்ளது.
உலகைச் சுற்றிய பின்னர் என்னை ஆச்சரியப்படுத்திய விடயங்களில் இரண்டு ரஷியா மற்றும் இந்தியாவின் துறைமுக வசதிகள்.
அகன்ற ரஷியாவில் ஏற்கனவே கூறியது போன்று பிரதானமாக துறைமுகமாக Novorossiysk என்னும் கொள்கலன் துறைமுகம் ஒன்று மட்டும் தான். இந்தியாவில் சுமார் 10 கொள்கலன் துறைமுகங்கள் உண்டு.
இந்தியா மற்றும் ரஷியா உலகின் வல்லரசுகளாம். ஆனால் இவற்றின் மேற்குறித்த துறைமுக வசதிகள் சீனாவில் உள்ள அல்லது கிழக்கு ஆசியாவில் உள்ள கொள்கலன் துறைமுகங்கள் எதனுடனும் ஒப்பிட முடியாதளவுக்கு மிகக் குறைந்தளவு கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளவையாகும். ஏன் இலங்கையின் கொழும்பு கொள்கலன் துறைமுகத்துடன் கூட எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதவை.
அந்தளவுக்கு ரஷியா மற்றும் இந்திய துறைமுகங்களின் அளவு மிகவும் சிறியவை வலிமை அற்றவை.
இவற்றை நோக்கும் போது, சக உக்ரேனிய மாலுமிகள் கூறுவதைப் போல் ரஷியா ஏன் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது புலனாகும்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் தாக்குதலின் நோக்கம், ரஷிய மொழி பேசும் உக்ரேனியர்களை பாதுகாப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ளது – ஒரு Bluffing என்பது உண்மை.
ரஷ்யாவின் சாத்தியமிகு தாக்குதல் பற்றி அமெரிக்கா திரும்பத் திரும்ப பல வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை விடுத்து வந்தது. அதாவது இது திடீர் எடுக்கப்பட ஒரு முடிவும் அல்ல.
போர் தலிபான் – ஐநா – ஆப்கானிஸ்தான் என்று வகையில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் ரஷியா – உக்ரேன் ஆயுத மற்றும் படைகள் பலம் கிட்டத்தட்ட 10 : 1 என்ற வீதம்.
Baltic போல்டிக் பகுதியில் உள்ள லாத்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா, போலந்து மற்றும் Black sea இல் ரூமேனியா உட்பட ரஷ்யாவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்றும் கூறுகின்றார்கள்.
பொருளாதார மற்றும் கேந்திர நிலைகளுக்கு அப்பால் ரஷியா உக்ரேன் மீது போர் தொடுக்க இன்னொன்று காரணம் உக்ரைன் தன்னை ஒரு ஐரோப்ப நாடாக காட்ட முனைந்ததும் தான். அதாவது நேட்டோவோடு இணைய முற்பட்டதும் தான்.
இதுதான் பிரதான காரணம் என அரசியல் வித்தகர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நான் சந்தித்த உக்ரேனியர்கள் பொருளாதார மற்றும் கேந்திர நிலை ஆகிய இரண்டையுமே முன் நிறுத்துகிறார்கள்.
ரஷியாவின் பிரதான உற்பத்தி எண்ணையும் இயற்கை வாயுவும் தான். ஒருநாளைக்கு 10 மில்லியன் பரல் எண்ணையை ரஷியா உற்பத்தி செய்கின்றது. உலகின் 10 வீதமான எண்ணை தேவையை அதிலும் குறிப்பாக ஐரோப்பாவின் எண்ணைத் தேவையின் கணிசமான பங்கை ரஷியா வழங்கி வருகின்றது. இதைவிட ஐரோப்பாவின் உணவு இறக்குமதியில் குறிப்பிடக்கூடிய பங்கை ரஷியா வகிக்கிறது.
முன்னாள் நடிகரும் உக்ரேனின் தற்போதைய அதிபருமான Volodymyr Oleksandrovych Zelenskyy துருக்கியானது, ரஷியாவுக்கான கடல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு துருக்கி உடன்படுவதற்கு நெஞ்சு உரம் இருப்பதாக தெரியவில்லை.
அதாவது சண்டை இடம்பெறும் 'Black Sea' மற்றும் 'Sea of Azov' என்பன வெளி உலகுடன் துருக்கியின் மிக மிக ஒடுங்களான இஸ்தான்புல் நீரணையால் (Istanbul Strait) தான் தொடுக்கப்பட்டுள்ளன..
ஒருவேளை இஸ்தான்புல் நீரணையால் ரஷியா (Black sea) துண்டிக்கப்பட்டால் உலகப் பொருளாதாரம் குறிப்பாக ஐரோப்பிய பொருளாதாராம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
இதை ஊகிப்பதுப் போல் தான், எதிர்க் கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ரஷியா உக்ரேன் மீது போர் தொடுத்தால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று வேறு கூறியுள்ளார்.
மேலும் சில குறிப்பிடக் கூடிய விடயங்கள்
* என்னுடன் பணி புரிந்த உக்ரேனியர்களில் சிலர் ரஷிய மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் ரஷியாவின் வருகையை விரும்புவது தெரிகின்றது.
* ரஷியர்களும் உக்ரேனியர்களும் கப்பலில் தங்களுக்குள் பழகும் போது அண்ணன் தம்பி போல் பழகுகின்றார்கள் .
* கடந்த வருடம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் உக்ரேனும் ஒன்று.
* இலங்கையர்கள் பலர் உக்ரேனியில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார்கள்.
உலக மகா யுத்த 3 இன் ஆரம்பம் இதுவோ என்றுமே பலரும் அலப்பரிக்கிறார்கள்.
ஆனாலும் பலரும் இத் தருணத்தில் மறந்த அல்லது கூறத்தயங்கும் ஒரு விடயம் - ரஷியாவுக்கு தென்கிழக்கு பகுதியில், இன்று ஒரு 'ரஷியாவுக்கு ஒரு உக்ரேன்' போல் - என்றோ ஒரு நாள் இதே பாணியில் - இதையொத்த இன்னொரு சம்பவம் இடம்பெற்றாலும் ஆச்சரியப்பாடுவதற்கில்லை.
நான் இந்தப் பக்கத்தை எழுத முனைந்ததன் நோக்கமே மேற்குறித்த கடைசிப்பந்தி தான்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.