நான் பிறந்த வருடத்தைச் சரியாகக்கூற இங்கு அந்தளவு சீனியர்கள் ஒருவரும் உயிருடன் இல்லை. அம்மன் கோவில் முன்வீதியில் சற்று வலப்பக்கமாக - நான் பிறந்த பின்னர் கட்டப்பட்ட தேர்க் கொட்டகைக்கு முன்னால் தான் எனது வாசம்.
அம்பாள் வெளிவீதியுலாவிற்காக வெளியேவந்து தயாராகி, பின்னர் தெற்கு வீதி போகும்வரை உங்களில் பலருக்கு நான்தான் நிழல்தரும் பெருங்குடையாக இருந்தேன். இதைவிட விழாக்காலங்களில் யாவாரும் செய்யும் வயோதிபர்கள், இணல் என எனக்குக்கீழே நிறுத்தப்படும் வண்டிகள். உணவிற்கும், தங்குமிடத்திற்கும் என என்னை நாடிவந்த ஏராளமான பறவைகள் மேலே என்றால், கீழே இளைப்பாறும் கால்நடைகள் விழாக்கன் அற்ற காலங்களில்.
இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இந்துக் கோயிலுக்கு இருக்க வேண்டிய சிறப்பியல்புகளான மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்ற நான்கில், நான்கில் ஒன்றாக இருந்தேன், ஒரு விருட்சமாக.
சுமார் 25 வருடங்கள் முன்பு, தர்மகர்த்தாசபைக் கூட்டத்தைக் கூட்டினார்கள், பார்த்துக் கொண்டிருந்தேன். வழமைபோல் சத்தம் தான், சகித்துக் கொண்டிருந்தேன். திடீர் என்று ஒருவர் ‘இந்த அரச மரத்தை இப்படியேவிட்டால், வேர் ஓடி தேர் கொட்டகையில் வெடிப்பை ஏற்படுத்திவிடும்’ என்றார்.
‘என்ன செய்வது’ என்றார் ஒருவர். “வெட்டு’ என்றார்கள் எல்லோரும். ஏனைய எல்லாப் பிரச்சனைகளிலும் முரண்படும் இவர்கள் என்னை வெட்டுவதில் மட்டும் முரண்படாமல் தங்கள் ஒற்றுமையைக் காட்டினார்கள்.
வெட்டித் தள்ளினார்கள்.
‘மரம் போல் நிற்கின்றாய்’ என்பார்கள், அப்படியேதான் பேசாமல் நின்றேன் சாயும்வரை, வெட்டிச் சாய்க்கப்படும்வரை.
எனது போதாத காலம் என்னை சிவாஜிலிங்கம் வெட்டாதது. சிவாஜிலிங்கம் வெட்டியிருந்தால் மீண்டும் என்னை நாட்டி வளர்த்திருப்பார்கள், இப்பொழுது ஒரு 25 வயது பருவ மங்கையாக இருந்திருப்பேன்.
இன்று பலர் பகல் திருவிழாவுக்கு வருவது இல்லை. என்னவென்று கேட்டுப் பாருங்கள். ‘அப்பப்பா என்ன வெயில், இந்த வெயிலுக்குள் எப்படி வந்து வெளிவீதி சுற்றுவது’ என்கின்றீர்கள் எல்லோரும். ஆனால் என்னை மீண்டும் ஆளாக்க வேண்டும் என்பதை மட்டும் நினைகின்றீர்கள் இல்லை.
எனது பெயர் ஆல்
எனது அமைவிடத்தை உங்களுக்கு கூறமுடியாது, காரணம் சட்டச்சிக்கல். ஏன் என்றால் நான் பிறந்து வளர்ந்தது பொது இடத்தில் இல்லை. தனியார் பெருவளவு ஒன்றில்.
நான் பிறந்த வருடத்தைச் சரியாகக்கூறவும் சீனியர்கள் ஒருவரும் உயிருடன் இல்லை. ‘அரசு’க்கு அண்ணனாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கதைப்பதைப் பார்த்திருக்கின்றேன். நான் தனியார் வளவுக்குள் இருந்திருந்தாலும், நீங்கள் பலர்கூடும் ஒரு இடத்தில்தான் இருந்தேன், அதனால் இளவயதினர் தவிர்ந்த உங்கள் எல்லோருக்கும் என்னைத்தெரியும். ஆனாலும் என்னை ஞாபகம் வைத்திருக்கக் கூடிய பக்குவம் உங்களில் ஒருவருக்கும் இருக்கவாய்ப்பில்லை.
என்னை வெட்டிய கதை சுவாரசியமானது. ‘ஆள் (ல்) முன்னுக்கு நின்றால் நீ உய்யமாட்டாய், போட்டுத் தள்ளிவிடு’ என்று சாத்தரி ஒருவர் கூறினார் ஒரு சில நூறுகள் பெறுவதற்கு. போட்டுத் தள்ளிவிட்டார்கள். என்னைப் போட்டுத்தள்ள மிகவும் கஷ்டப்பட்டார்கள், அவ்வளவு ஸ்ட்ரோங் ஆக வளர்ந்திருந்தேன் நான்.
எனது பெயர் தென்னை
தனியார் வளவு ஒன்றுக்குள் பிறந்து வளர்ந்திருந்தாலும், எனது இடத்தைக் கூறுவதில் சிக்கல் இல்லை. காரணம் வெட்டியவர்கள் காணிக்காரர் அல்லர், பிறத்தியார் தான். நான் இருந்த இடம் சிவன் கோயிலுக்கு முன்னால் இடப்பக்கமாக, புட்டணி பிள்ளையார் கோயிலுக்கு வடக்காக இருந்த வெற்றுக் காணிக்குள். எனது குடும்பத்தினருடன் அமைதியாக ஒரு இடைஞ்சலும் செய்யாமல் நின்று கொண்டிருந்தேன்.
30, 35 வருடங்கள் முன்பு, நானும் எனது சகோதரங்களும் பருவம் எய்தி பூத்துகாய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்த நேரம். உங்களுந்த அம்மன் கோயில் பூங்காவனத்துக்கு முதல் நாள், கோயிலை வனம் ஆக்குகின்றோம் என்று கூறி, ஒருநாள் கூத்துக்காக வெட்டி இழுத்துவந்து, கோயிலின் ஒரு பக்கத்தில் நட்டார்கள் என்னை வெற்றுடலாக.
அழகாக இருக்கின்றேன் என்றோ அல்லது அசிங்கமாக இருக்கின்றேன் என்றோ கூட நீங்கள் எவரும் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பின்ன அப்ப ஏன் வெட்டிக்கொண்டு வந்து இங்கு நட்டீர்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.
ஒரு நாள் கூத்துக்காக என்னைப் போட்டுத் தள்ளியது போல் என்ர அக்கா, அண்ணா, தம்பி, தங்கச்சி என எங்களில் பலரை ஒவ்வொரு ஆண்டாக போட்டுத் தள்ளிவிட்டீர்கள். இதே காலத்தில் இறந்த உங்கள் சொந்தங்களையே மறைந்துள்ள உங்களில் பலருக்கு இப்ப எங்களையா ஞாபகம் இருக்கப் போகின்றது.
எங்கள் பெயர் சவுக்கும், மூங்கில்களும்
கொடுமை என்னவென்றால் எங்களை நீங்கள் பல ஊர்கள் தாண்டிவந்து வெட்டிச் சாய்ப்பது தான், கிட்டத்தட்ட பல தமிழ் படங்களில் வரும் சாய்க்கும் காட்சிகள் போல். நாங்களும் அதே ஒருநாள் கூத்துக்குத்தான்.
வித்தியாசம் - நாங்கள் இங்கு நாட்டப்படுவது வீதிகளில், மினுக்கி நிற்கும் விலைமாதர்கள் போல் வர்ணப்படுத்தப்பட்டு. நிகழ்வுகள் முடிந்து அடுத்த நாள் வந்து எங்கள் கதியைப் பாருங்கள்.
எங்களை குடும்பம் குடும்பமாகவல்லவோ அன்றிலிருந்து இன்றுவரை அழித்து வருகின்றீர்கள்.
மரங்களாகிய எங்களில் சிலரின் இருப்பையும், உங்களால் நேர்ந்த இறப்பையும் இந்த சரித்தத்தில் கூறியுள்ளோம். இவை ஒன்றிரண்டு உதாரணங்கள் தான். ஒவ்வொரு வீடு, வளவு, காணி, தோட்டம், கரையோரம் என எங்களில் இதுவரை வெட்டப்பட்டவர்கள் ஆயிரம் ஆயிரம். ரெயின்போ மைதானத்தில் சாதனையல்லோ செய்துள்ளீர்கள்.
எங்களின் அருமைபற்றி உங்கள் எல்லோருக்கும் கற்பிக்கின்றார்கள் தானே? உங்களின் அருமைபற்றி ஏதாவது பாடப் புத்தகத்தில் கண்டுள்ளீர்களா? அப்படி இருந்தும் ஏன் உங்களில் ஒருவருக்கும் நாங்கள் வெட்டப்படும் போது, வந்துதடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. அநியாயமாக வெட்டுபவர்களுக்கு எதிரான கருத்தைக்கூட உங்களால் முன்வைக்க முடியவில்லை.
இதை விட்டுவிட்டு, இப்ப புதிய டிரெண்ட்டாக ஒரு நாள் கூத்தாக மரம் நடுகை. நாங்கள் அடுத்த நாள் பிழைகின்றோமோ இல்லையோ, எங்களை வைத்து FB யில எங்களின் படத்தைக் போட்டு நீங்கள் பிழைக்க வழிதேடுகின்றீர்கள்.
இதைவிட எங்களுந்த பெயரால ‘பசுமைத் தாயகம்’, ‘பசுமை வளர்ப்பு’, ‘பசுமைப் புரட்சி’ போன்று நீங்கள் கூடி எங்களுந்த பெயரால் வைக்கும் பெயர்கள் உங்கள் சில நாள் கூத்தின் உச்சக்கட்டம். வெட்டுறதைத் தடுக்காமல் வளர்க்கிறம் என்று ‘குரூப்’ தொடங்கிறதிலேயல்லோ நிக்கிறியள்.
உங்களில் எல்லாரையும் குறைபடவில்லை, விரல்விட்டுக் எண்ணக்கூடிய ஒரு சிலர் எங்கள் இருப்புக்காக உழைத்து வருகின்றீர்கள். மிச்சம் மீதமுள்ள எங்கள் சந்ததிகளை ஓரளவாவது இவர்கள் காப்பாற்றுவார்கள் என்பது தான் எங்களுக்குள்ள இறுதி நம்பிக்கையும் அற்ப சந்தோசமும்.
கண்ணீரின் மத்தியில், அவ்வாறு எங்களின் சந்ததி ஒன்றை மீண்டும் வாழவைத்த ஒரு கதையைக்கூறி எனது இந்த சரிதத்தை முடிக்கின்றேன்.
எனது பெயர் கத்தோக்கு
அம்மன் கோவில் பின்வீதி தென்மேற்கு மூலையில் நின்றேன். சிறுவர்களுக்கும், இரைதேடிவரும் பறவைகளுக்கும் ஏராளமான பழங்களையும், திருவிழாவின் போது உங்களுக்கு ஒரு பெரிய நிழற்குடையாகவும் நின்றேன்.
உங்கள் தலைவர் தனது சிறு பிராயத்தில், கெற்றப்போல் சகிதம் குறிபார்த்துப் பழக ஆரம்பித்ததும் என்னில் தான்.
பின்னர் 90 களில் குண்டடியாலும், வயதாலும் நானாகவே பட்டுவிட்டேன். உங்களில் ஒரு கனவான் மீண்டும் எனது சந்ததியை அதே இடத்தில் நாட்டி வளர்த்து எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரவைத்து விட்டார்.
3 வருடங்களுக்கு முன்பு இளைய மகளை முன்பள்ளி வகுப்பிற்காக கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து பம்பலப்பிட்டிக்கு அழைத்து சென்றேன். அன்றைய தினம் சற்று மாறுதலுக்காக ஆட்டோவில் சென்றோம். ஆட்டோ மரைன் ட்ரைவ் வழியால் சென்றது. மகளை என் மடியில் வைத்திருந்தேன்.
ஓவியம் அமிழ்தினி
அப்பொழுது வீதியைப் அகலப் படுத்துவதற்காக வழியெங்கும் நின்ற மரங்களை (அதிகம் கத்தோக்கு மரங்கள்) வெட்டி அப்புறப் படுத்திக் கொண்டிருந்தார்கள். எனது மகள் இதைப் பார்த்து அழுதேவிட்டாள். ‘ஏன் ஐயா இவற்றை வெட்டுகிறார்கள்’ என்று கேட்டாள் அழுதுகொண்டே
எனது சோகசரிதத்தை சுருக்கமாகக் கூறிமுடித்துவிட்டேன், எங்களுந்த சந்ததியை கருணைகூர்ந்து வாழ வழிவிடுங்கள்.
நீங்கள் எங்களை வெட்டும்போது நாங்கள் வடிப்பது பால் அல்ல – அவை கண்ணீர் துளிகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.