ஊரிக்காடு இராணுவ முகாமிலிருந்து காட்டுப்புலம் வரையான சுமார் 2 கிலோமீட்டர் நீளமான கடற்கரையோரப் பகுதியானது, மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமானது.
இந்த நீளமான கடற்கரைக்கு செல்வதற்கென்று சரியான பாதை என்று எதுவும் இல்லை. அதேபோல் இந்தக் கடற்கரை ஓரமாக ஊரிக்காட்டிலிருந்து காட்டுப்புலம் வரை நடந்து செல்லக்கூடிய வகையிலும் பாதை இல்லை.
இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் காணிகள் வல்வை நகரப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தம். சுமார் 50 வருடங்கள் முன்பு வல்வை நகரப்பகுதியில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக இவை கட்டப்பட்டவை. அதிலும் பெரும்பாலான பங்களா போன்ற வீடுகள் முன்னர் ‘கடத்தல்’ தொழிலில் ஈடுபட்டவர்களால் கட்டப்பட்டவை, அதுவும் கடத்தல் தொழிலுக்கு வசதியாக. கடந்த அசம்பாவிதங்களில் இவற்றில் பல வீடுகள் முற்றாக அழிவடைந்து விட்டன.
இப்பகுதிகளிலிலுள்ள காணிகள் ரோட்டிலிருந்து கடற்கரை வழி தனி ஒரு காணியாக நீளுகின்றது - கடத்தற்தொழில் ‘ஓகோ; என்று ஓடிய காலத்தில் பளை, இயக்கச்சி, முல்லைத்தீவு என பல இடங்களில் ‘இன்வெஸ்ட்மென்ட்’ ஆக காணிகள் வாங்கியது போல் இங்கும் பல காணிகள் வாங்கிவிடப்பட்டுள்ளன.
இந்த வகையிலேயே, கடத்தல் தொழிலின் போது, போலீசார் கடற்கரைக்கு இலகுவாக வர முடியாத வண்ணம் குறித்த வீடுகள் மற்றும் காணிகள் கடற்கரைக்குப் பாதையில்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன எனக்கருத இடமுண்டு.
அத்துடன் வீடுகளுக்குப் பின்னால் உள்ள கடற்கரைப் பகுதிகளும், பலரால் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் ‘பட்டா’ (Deed of declaration) போட்டோ போடாமலோ நீட்டப்பட்டுள்ளது. இயக்கம் இருந்த காலத்தில் இவ்வாறான நீட்டல்கள் பெரிதாக இடம்பெற்றிருக்கவில்லை.
குறித்த வீடுகளுக்குப் பின்னால் உள்ள நீண்ட கடற்கரைப் பகுதி அரசுக்குச் சொந்தமானவை. இவை ‘State land’ அல்லது ‘Semi State land என அழைக்கப்படுகின்றன.
வட மாகாணசபை இயங்குவதால், வல்வை நகரசபை எல்லைக்குள் இவை வருவதால், இந்தக் கடற்கரைப்பகுதி ‘Semi State land’ எனும் வரையறைக்குள் அடங்கி, வல்வை நகரசபை அதிகாரத்தின் கீழ் வருகின்றது.
ஆனாலும் சுனாமியின் பின்னர், கடற்கரையில் இருந்து 100 மீட்டர் நிலப்பகுதிக்குள், மத்திய அரசால் புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் குறித்த பகுதி ‘State land’ ஆகவும் விளங்குகின்றது.
50 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால், அந்தக் காலத்தில் எமது பிரதான வீதியிலேயே வீதியைப் பிடித்து எவ்வாறு வீடுகளைக் கட்டியுள்ளார்கள் என்பது தெளிவு. அத்துடன் வல்வையில் அமைந்துள்ள ஏராளமான குச்சு ஒழுங்கைகளும் சாட்சி. ஒரு ஒழுங்கை இவ்வளவு அடி அகலம் குறைந்தது இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே சட்டத்தில் உள்ளது.
60 களில் அரசியல் பிரச்சனை, பின்னர் 80 களில் இராணுவப் பிரச்சனை என்று தொடர, மத்திய அரச நிர்வாகமும், உள்ளூர் அரச நிர்வாகமும் இவற்றில் அக்கறை காட்டமுடியவில்லை. இது பலருக்கு வாய்ப்பாகப்போய்விட்டது.
பிரதான வீதியின் நிலையையே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தபோது, பாதையே இல்லாத மேலே கூறப்பட்ட கடற்கரையின் கதியோ மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது.
குண்டு அடிகளும், பின்னர் சுனாமியும் இப்பகுதிகளை ஒரு கை பார்க்கத்தவறவில்லை.
குறித்த கடற்கரைப் பகுதி இரண்டு பாரிய தொடர் அழிவுகளை தற்பொழுது எதிர்நோக்கிவருகின்றது.
முதலாவதான செயற்கை அழிவு
குறித்த கடற்பகுதி எதிர்கொள்ளும் முதலாவது பிரச்சினை இயற்கையாக ஏற்படும் ‘கடல் அரிப்பு’ (Sea erosion) ஆகும். முருகைக் கற்பாறைகள் உள்ளதால் கடல் அரிப்பு ஓரளவு தடுக்கப்பட்டாலும், வட கீழ் பருவப் பெயர்ச்சி காலநிலையின் போது அரிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. சில இடங்களில் அரிப்பு மிக மோசம். இங்கு கடல் அரிப்பினை எதிர்கொள்ள இதுவரை எவராலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி ஒன்று ஏற்பட்டுள்ளது, தொடர்கின்றது என்பது இதுவரை எவராலும் ஆராயப்பட்டு அறிக்கையாக்கப்பட்டதாக எனக்குத்தெரியவில்லை.
குறித்த ‘கடல் அரிப்பு’ நான் மேலே குறிப்பிட்டுள்ள கடற்பகுதியில் மட்டும் நிகழவில்லை. யாழ் குடாநாட்டின் பல கரையோரங்களில் நிகழ்ந்துவருகின்றது.
10, 20 வருடங்கள் பின்பு வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் நம்மவர்கள் மீனாட்சி அம்மன் கோயில் கடற்கரையைப் பார்த்தவுடன் கூறுவது, ‘எப்படி கடற்கரை சுருங்கி விட்டது’ என்று தான்.
ஊரிக்காட்டிலிருந்து பொலிகண்டி வரையான பகுதியை எடுத்துக்கொண்டால், கடல் அரிப்பு இங்கும் உண்டு. ஆனாலும் இப்பகுதியில் பொதுமக்கள் செறிந்து வாழ்வதால், பொது மக்கள் அவ்வப்போது அறிந்தோ அறியாமலோ எடுத்த, எடுத்துவரும் நடவடிக்கைகள் ஓரளவு அரிப்பின் வேகத்தை கட்டுப்படுத்திவருகின்றது.
அண்மையில் தென்னிலங்கையின் தங்காலையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான வேலைத் திட்டம் ஒன்றில் அமைச்சர் திலிப் வெட்டாராச்சி (Fisheries and aquatics resources development state minister) சாரத்தை கட்டிக் கொண் கொண்டு நேரடியாகக் கடலுக்குள் இறங்கினார். அந்தளவிற்கு அங்கு இதற்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
இரண்டாவதான செயற்கை அழிவு
நான் மேலே குறிப்பிட்டுள்ள ஊரிக்காடு தொடக்கம் காட்டுப்புலம் வரையான குறித்த கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று பார்த்தல் வயிறு பற்றி எரியும்.
பலர் தத்தம் வீடுகளுக்கு பிற்பகுதியில் உள்ள அரச காணிக்குச் சொந்தமான (State land) பொதுக் கடற்கரையில், தமது வசதிக்கேற்ப சிறு கட்டடங்கள், வீட்டுக்கு நேரே நேர் அணைகள், குறுக்கு அணைகள், கடற்கரை மண்ணை ஆழமாகத் தோண்டி வீடுகளுக்கு உள்ளும் வீடை அண்டிய சுவரோடும் உயர்த்தி கடல் மண்ணின் சமநிலையை மாற்றல், முருகைக் கற்களை உடைத்து தனி நபர்களுக்கான “வான்” கள், நிலம் நீட்டுதல், முழுக் கழிவுகளையும் கடற்கரையில் கொட்டுதல் என.................... மிக மிக நீண்ட மீறல்களைச் செய்து வருகின்றார்கள்.
இது இப்பொழுதும் புதிதாக சில இடங்களில் ஆரம்பித்துத் தொடர்கின்றது. இப்பொழுது பெரிய ஸ்கேலில் இதைத் தொடர்பவர்களில் சிலர் இலங்கை குடியுரிமை இல்லாதவர்கள் என்பது வேடிக்கையானதொன்று. தமக்கு ஏற்ப, தான் தோன்றித்தனமாக நடந்துகொள்கின்றார்கள்.
தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள், மற்றும் இப்பகுதியில் உள்ள ஒரு சில பொதுமக்கள், இங்கு இடம்பெறும் அத்து மீறல்கள் பற்றி செய்திகள் பரிமாறினாலும், இதுவரை முறைப்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
அவசியமானது எனக்கருதப்படும் கடற்கரை அணைக்கட்டு உதயசூரியன் கடற்கரையில் கட்டப்பட்டபோது ஏகப்பட்ட புகார்கள், சைனிங்ஸ் கடற்கரையில் கட்ட ஆரம்பித்தபோது அதிகாரிகள் ஆஜர். பொது மக்களுக்காக கடல் நீச்சல் தடாகம் ரேவடியில் அமைக்க ஆரம்பிக்கப்பட்ட போது புகாரின் மேல் புகார். இரண்டும் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஆனால் நான் மேலே குறிப்பிட்ட அத்து மீறல்களுக்கு எதிராக, அணைக்கட்டுக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள், ஒரு புகார்களும் கொடுக்கவில்லை.
பலர் மத்தியில் இதைக்கதைத்தபொழுது, சிலர் உனக்கேன் தேவையில்லாத வேலை என்கிறார்கள்.
யாழ் கச்சேரியில் உள்ள இதற்குப் பொறுப்பான கடலோர பாதுகாப்பு மேல் அதிகாரியிடம் கடந்த 3 மாதம் முன்பு நேரில் சென்று முறையிட்டேன். இதுவரை எவரும் இது சம்பந்தமாக ஒரு புகாரும் கொடுக்கவில்லை என்றார்.
மிகவும் தெளிவாக இங்குள்ள அத்துமீறல்கள், கடல் அரிப்புக்கள், நில அமைப்புக்கள் பற்றி எடுத்துக்கூறினேன். குறித்த அத்துமீறல்கள் தொடர்வது தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ‘கொழும்பில் முறையிடுவேன்’ என்றும் கூறினேன்.
யாழ் குடாநாட்டில் இதுபோன்று கரையோரப் பகுதிகள் சந்தித்துவரும் அழிவுகள் பற்றி அவரும் விளக்கினார். இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்தி நிறுத்த, யாழ் போலிஸ் உயர் அதிகாரி தலைமையில், தாங்கள் 2 வாரத்தில் ஒரு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்போது கூறினார்.
அவர் கூறியது போல் 2 வாரத்தின் பின்னர், குறித்த கடற்கரைப் பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு அத்துமீறல்களை நிறுத்தியுள்ளார்கள்.
ஆனால் இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், போதைப்பொருட்களே கடற்கரைகள் வழியாக கடத்தபடுகின்றது என்றால், இவை போன்ற அத்துமீறல்களை - யாழின் சில அதிகாரிகளால் எவ்வாறு தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதை நிரந்தரமாக நிறுத்தக் கூடிய வல்லமை உள்ளூர் மக்களினதும் உள்ளூர் நிர்வாகங்களினதும் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
கீழே படங்களில் (4 வருடங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டவை), முதலாவது படத்தொகுதியில் குறித்த கடற்கரையோரத்தின் மரங்கள், மணல், பாறைகள், முருகைக்கற்கள், அழிவடைந்த கட்டடங்கள், முன்னர் கட்டப்பட்ட பல்வேறு வகையிலமைந்த கட்டுமானங்கள் என்பனவும், சாரத்தை கட்டிக் கொண்டு தங்காலையில் கடல் அரிப்பைத் தடுக்கு இறங்கியுள்ள அமைச்சரையும் காணலாம். இரண்டாவது படத்தில் காட்டப்புலம் பகுதியில் ‘பலத்த அரிப்புக்கு ஆளாகியுள்ள கடற்கரையின் ஒரு பகுதியினைக் காணலாம்.
இவை போன்ற பிரச்சனைகள் பற்றித் தெரிந்து கொள்ளாமல், இவை பற்றிக் கதைக்காமல், இவற்றை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் - நகரசபைத் தேர்தலில் எப்படி நான் உங்களிடம் வாக்குக்கேட்க முடியும். இந்த பிரச்சனைகளுக்குள் கால் வைக்காமல், நகரசபைத் தேர்தலில் நான் வென்று, இங்குள்ள வேலையில்லாப் பிரச்சனையையா தீர்க்கப்போகின்றேன்?
வல்வைக்கு வந்த கடற் தொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பட்டங்களை காட்டியதோடு குறித்த கடற்கரையையும் காட்டி சில வாக்குறுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விட்டு விட்டோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.