புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2023 (சனிக்கிழமை)
யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர்.
கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெயர் ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார்.
இவரின் மற்றொரு புதிய முயற்சியாக மஞ்சளைப் பயிரிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். மஞ்சளை ஏற்றுமதி செய்வதன்மூலம் அதிகலாபம் கிடைக்கிறது என்கிறார் அவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் கிராக்கியுள்ள பயிரினங்களை பயிரிட்டு, தாயக விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இவரின் நோக்கம்.
வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான TomEJC எனும் மாம்பழங்களே இவரது தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் 500g, 600g வரையான எடையைக் கொண்டவை. மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தவகையான மாம்பழங்கள்தான்.
உள்ளூரில் இருக்கும் ஏனைய விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டுமுயற்சியாக ( Cluster Farming ) செயல்படுவது இவரின் இன்னொரு நோக்கம். அதன்படி இவரிடமிருந்து மாமரச் செடிகளையோ, மஞ்சளையோ நீங்கள் கொள்வனவு செய்து பயிரிடமுடியும். மேலும் வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த விவசாயப் பயிற்சிகளையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஏக்கர் காணிகள் கவனிப்பார் இல்லாமல் காடும்மேடுமாக காட்சியளிக்கின்றன. அதேவேளை ஜஸ்டின் குமார் போன்ற முதலீட்டாளர்கள் விவசாயத்துக்கு காணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரோடு தொடர்புகொண்டு உங்கள் காணிகளைக் குத்தகைக்கு விடமுடியும்.
நிலங்களையும் வைத்துக்கொண்டு, அதில் ஒரு முயற்சிகூட செய்யாமல், ‘நாங்கள் வறுமையில் வாடுகிறோம்’ என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமானது. புதிய புதிய சிந்தனைகளும் முயற்சியுமே எம்மை உயர்த்தும்.
Jaffna Horticulture Private Ltd எனும் பெயரில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் முதல்கட்ட வெற்றியும் கண்டிருக்கும் ஜஸ்டின் குமார் அவர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
“பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.