யாழ் நூலாக எரிப்பு சம்பந்தமாக விக்கிபீடியாவில் உள்ள தகவல் பின்வருமாறு
பின்னணி
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள்1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[7][8]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 சூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது.[9] தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 இற்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.[1] மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.[10]
1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.[9][11] இதன்போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை.[11] புஞ்சிபண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு காவல்துறையினர் உயிரிழந்தனர்.[11] இவர்களில் கனகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.[9]
இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.[11] அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[11] பொதுமக்களும் தாக்கப்பட்டனர். தவிகூ கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.[11]
அன்றிரவே (மே 31) நாழ் நகரின் பிரபலமான பல வணிக நிறுவனங்கள், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேசுவரனின் இல்லம், பழைய சந்தைக் கட்டடம், மருந்துக் கடைகள் தீயிடப்பட்டன.[9][11]
யாழ்ப்பாண நகரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள சுன்னாகம் சந்தையிலும் தாக்குதல் நடத்தப்பட்டு சந்தை சேதமாக்கப்பட்டது.[9] சுன்னாகம் சந்தியில் இருந்த யாழ் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், 'கூல் பார்' என்ற கடை[9] உட்பட ஏழு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[11]நெல்லியடி சந்தையும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.[9] 15 மைல் தொலைவில் உள்ள காங்கேசன்துறையில் மூன்று கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன.[9] மொத்தம் ஏழு பொதுமக்கள் ஒரு வாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.[9][11]
அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.[1]
சூன் 1 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கா. பொ. இரத்தினம், மு. சிவசிதம்பரம் ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர்.[1] கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உட்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர்.[1] அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
திங்கட்கிழமை இரவு 09:20 மணியளவில் யாழ் நகரில் இருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கருகில் இருந்த கடைகள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டன.[9][11] கொழும்பிற்கு வெளியே இருந்து வெளியிடப்பட்ட ஒரேயொரு தினசரிப் பத்திரிகை ஈழநாடு ஆகும். பத்திரிகை முகாமையாளர் ப. சிவானந்தன், உதவியாளர் சச்சிதானந்தன் ஆகியோர் எரிகாயங்களுக்குள்ளாயினர்.[1]
அன்றிரவு 10 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினுள் நுழைந்த தென்னிலங்கை வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு நூலகத்தை சேதப்படுத்தி கட்டடத்திற்குத் தீயிட்டனர்.[1] யாழ் காவல் நிலையம் நூலகத்திற்கு 700 யார் தொலைவில் அமைந்திருந்தது. நூலகத்தில் இருந்த அனைத்து நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் அனைத்தும் தீக்கிரையாகின. தளபாடங்கள் எரிக்கப்பட்டன.[9][3][11]
நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் சி. வி. கே. சிவஞானம் மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.[1] தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.[1]
சூன் 2 இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி சூன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. சூன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.[9][11]
சீருடைகளில் வந்தோரால் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில்,[12] இரண்டு அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர், அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக நான்சி மறே என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.[13] 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்குச் சொந்தமான "டெய்லி நியூசு" பத்திரிகை 1981 நிகழ்வை "அன்றைய அரசினால் விடுவிக்கப்பட்ட குண்டர்களால்" இவை நடத்தப்பட்டதாக தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்தது.[14]
தாக்குதல் நாளன்று இரண்டு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வாடி வீட்டில் இருந்து நூலகம் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கூறியது:
“
ஒரு துரதிட்டவசமான நிகழ்வு, அங்கு ஒரு சில காவல்துறையினர் குடிபோதையில் இருந்தார்கள், அவர்களே எவ்வித அறிவுறுத்தலுமின்றி கொள்ளையடித்தனர்.[15]
”
தேசியப் பத்திரிகைகள் இந்நிகழ்வு குறித்து செய்திகள் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரின் கருத்து:
“
அவர்களின் (தமிழ்) தாயகம் இல்லாத இந்த நிலத்தில் பாகுபாடு இருந்தால், ஏன் இங்கே தங்கியிருக்கிறீர்கள். எந்த பாகுபாடும் இல்லாத உங்கள் நாட்டிற்கு (இந்தியா) ஏன் திரும்பிச் செல்லக்கூடாது. அங்கே உங்கள் கோவில்கள் உள்ளன. அங்கே உங்கள் கலாச்சாரம், கல்வி, பல்கலைக்கழகங்கள் போன்றவை உள்ளன. - டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, நா.உ, சூலை 1981.[15]
”
யாழ்ப்பாண நகரத்தில் ஏற்பட்ட அனைத்து அழிவுகளிலும், யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிவுதான் யாழ்ப்பாண மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.[16][17] இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், யாழ்ப்பாண நகர முதல்வர் நடராஜா ரவிராஜ் ஒரு பல்கலைக்கழக மாணவராகக் கண்ட தீப்பிழம்புகளை நினைவு கூர்ந்ததில் இப்போதும் வருத்தப்பட்டார்.[3]
1991 இல் அப்போதைய அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா பகிரங்கமாகக் குறிப்பிட்டுக் கூறியது:
“
1981 இல் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலின் போது, எங்கள் கட்சி (ஐதேக) உறுப்பினர்கள் சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பலரை வடக்கே அழைத்துச் சென்று, அழிவை உருவாக்கி, வடக்கில் தேர்தல்களை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தனர். இதே குழுவினரே இப்போது பிரச்சனையையும் ஏற்படுத்துகிறார்கள். யாழ்ப்பாண நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களை யார் எரித்தார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், எங்களை எதிர்ப்பவர்களின் முகங்களை மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும்.
”
இவர் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய அவரது கட்சி உறுப்பினர்களையே குறிப்பிட்டார். இவர்கள் பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள்.[15]
2016 இல், அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில், நூலக எரிப்புக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.[19]
நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் 1981 சூன் 5 ஆம் நாள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பீட்டர் கெனமன் தலைமையில் யாழ்ப்பாணம் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
“
நாட்டின் இந்தப் பகுதியை "எதிரி அரசின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைப் போல" அரசாங்கம் நடத்தும்வரை யாழ்ப்பாணத்தில் இயல்பான நிலைமைகளை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று கட்சி உறுதியாக நம்புகிறது.[9]
அன்றைய ஐதேக அரசாங்கம் 1981 மே-யூன் வன்முறைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவில்லை என அமெரிக்காவின் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் 1981 இலங்கைக்கான உண்மை அறியும் ஆணைக்குழுவின் தலைவருமான ஓர்வில் எச். ஷெல்[20][15] இக்குற்றங்களுக்கு எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
நூலகம் எரிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர், 1982 இல், யாழ் நூலக வாரம் ஒன்றை யாழ்ப்பாண சமூகம் முன்னெடுத்தது. இதன் மூலம் பொது மக்களிடம் இருந்து ஏராளமான நூல்கள் சேகரிக்கப்பட்டன. கட்டடத்தைப் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. அதே வேளையில் தமிழருக்கு எதிரான 1983 கறுப்பு யூலை வன்முறைகள் தென்னிலங்கையில் ஆரம்பித்தது. 1984 இல் நூலகக் கட்டடம் மீளப் புனரமைக்கப்பட்டது. ஆனாலும், தொடந்த ஈழப்போரினால், கட்டடம் எறிகணைகளாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் சேதமடைய ஆரம்பித்தது. இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர். இதனால் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது.[3][21][21]
1998 இல், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசு நூலகத்தை மீளக் கட்டியெழுப்ப முடிவெடுத்து, இலங்கை முழுவதிலும் இருந்தும்,[8][22] வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து இதற்கான பங்களிப்பை செலுத்துமாறு வேண்டினார்.[23] ஏறத்தாழ US$1 மில்லியன் இதற்காக செலவழிக்கப்பட்டு, 25,000 நூல்கள் வரை சேகரிக்கப்பட்டன.[24][25] இறுதியாக 2004 ஆம் ஆண்டில் நூலகம் பொது மக்களுக்கு மீளத் திறக்கப்பட்டது.[26]
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.