வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் சோகமான சம்பவமாகக் கருதப்படுகின்றது.
அன்றைய தினம் காலை சுமார் 0 9 3 0 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்திருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் (Indian peace keeping forces - IPKF) முகாமிலிருந்து புறப்பட்டு, வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதி மற்றும் சிவபுரவீதி வழியாக ரோந்து மேற்கொண்டிருந்த இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வல்வை சந்தியை அண்டிய பகுதிகளில் கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.
வல்வைச் சந்தி, பிரதான வீதி, பெட்ரோல் செட் மற்றும் சிவபுரவீதி என்னும் பிரதேசத்தை உள்ளடக்கிய பெட்டி வடிவ பிரதேசத்திலேயே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாலும், காலை நேரம் என்பதாலும் பல பொது மக்கள் சண்டை நடைபெற்ற பகுதிக்குள் அகப்பட்டும் கொண்டனர்.
நடந்த துப்பாக்கிச் சண்டையில் சில இந்திய படையினர் கொல்லப்பட்டும் மேலும் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இறந்த பொதுமக்களுக்காக தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தூபி
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அதேதினமான ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து 3 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற அசம்பாவிதங்களில், சுமார் 60 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் மரணமடைந்தும், மேலும் பல பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் அன்றைய பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
அனைவரையும் அந்த குறித்த தினங்களில் உலுக்கியிருந்த இந்த சம்பவத்தில், மேலும் பல வீடுகள் மற்றும் கடைகள் என பல பொதுமக்கள் சொத்துக்களும் தீக்கிரையாகியிருந்தன.
சம்பவத்தின் பின்னர் பொதுமக்கள் குறித்த பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, சம்பவ இடம் பிணவாடையாலும் நெருப்பின் மீதிகளாலும் நிரம்பியிருந்திருந்தன. இச்சம்பவம் மற்றும் சம்பவ இடத்தின் தோற்றம் பலரையும் அச்சத்துகுள்ளாக்கியிருந்தது.
வல்வையர்களின் இதயங்களை ஊடறுத்த இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறையில் இருந்து கணிசமான மக்களின் நிரந்தர இடப்பெயர்வு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய 2 பிரபல பத்தரிகைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் தமிழாக்கம் கீழ்வருமாறு,
'தி கார்டியன்"
லண்டனில் இருந்து வெளியாகும் 'தி கார்டியன்" என்ற பத்திரிகையில் அதன் கொழும்பு நிரூபரான கிறிஸ்நற்றௌல் பின்வருமாறு எழுதியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிலை கொண்டுள்ள இந்திய அமைதிப்படையினரின் மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையில் 51 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து இந்தப் படுகொலைகள் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதவாறு இந்தியப் படையினர் மூடி மறைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்தக் கிராமத்தையே அழிப்பதற்கு முயற்சி செய்துள்ளதுடன் வைத்தியர் குழுவைக் கூட செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
வல்வெட்டித்துறையே, தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த ஊராக இருப்பதாலும், விடுதலைப்புலிகளின் பல போராளிகள் இங்கிருந்தே உருவாக்கப்படுவதாலும் பழிவாங்கும் ஒரு செயலாகவே இத் தாக்குதல் அமைந்துள்ளது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 51 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் தமது கையையோ, காலையோ இழக்கும் நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இந்நகரத்தில் பெரும்பாலானவர்கள் இடப்பெயர்ந்துள்ளதால் இது இப்பொழுது பாலைவனம்போல் காட்சியளிக்கின்றது. 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் (UNHCR), செஞ்சிலுவைச் சங்கம் (Red cross) ஆகியவற்றிற்கு நிவாரண உதவி கோரி மக்கள் விண்ணப்பித்துள்ளனர். 'இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இந்தியா படை விலகலைச் செய்யும் என்று இன்றும் கூறிக்கொண்டிருப்பதன் மூலம், இலங்கை அரசாங்கத்தின் விருப்பதற்கு மாறாக இந்தியா தனது படைகளை மேலும் அங்கு வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றது.
'தி இந்தியன் எக்ஸ்பிறஸ்"
இந்திய அமைதிப்படையினர், தமது வீரர்கள் 6 பேர் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில் நிராயுதப்பாணிகளான ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வல்வெட்டித்துறை இப்பொழுது பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. சனத்தொகையில் அரைவாசிப்பேர் இடம்பெயர்ந்து அயற்கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர்.
50 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 12 பேர் காணாமற்போயும், 123 வீடுகளும், மீன்பிடி உபகரணங்களும், சைக்கிள்கள் உட்பட 50க்கு மேற்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டும் உள்ளன. எரிக்கப்பட்ட வீடுகளில் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ் போன்ற இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களின் படங்கள் கூட எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவத்தினர் தம்மை எதிர்ப்பவர்களை அழிக்காது அப்பாவி மக்களை எதிர்த்து அழிக்கும் கொலைகாகரப் படையாகத்தான் (Innocent People Killing Force) அங்கு இப்பொழுது இருக்கின்றது.
இந்நாளில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.