‘மோகன்’ என்றுஅழைக்கப்படும் இராமதாஸ் மோகனதாஸ், படிக்கும் காலத்தில் சிதம்பரா சித்திர ஆசிரியர் ‘பாலாமாஸ்டரின்’ மேற்பார்வையில் ஓவியம்வரைந்து, பேரறிஞர் அண்ணாவினால் கௌரவிக்கப்பட்ட தமிழ் நாட்டு ஓவியர் மாதவனின் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டு சிறந்த ஓவியரானார்.
ஓவியத்தை ஒய்வு நேரத் தொழிலாகக்கொள்பவர்கள் மத்தியில் முழுநேர ஓவியராக தனது தொழிலில் கால்பதித்தார். இவரது கைவண்ணத்தி ல்வல்வையிலும், பருத்தித்துறையிலும் விளம்பரப் பலகைகள் மிளிர்ந்தன.
யாழ்குடாநாட்டில் மட்டுமல்ல அதைத் தவிர்ந்த வேறு இடங்களிலும் கோயில்களில் இவரின் வண்ணத் தூரிகை தன் திறமையைக் காட்டத்தயங்கவில்லை.
வல்வையில் 1974 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களினால் வல்வை வைத்தியலிங்கப் புலவரின் பெருமையை அறிந்து கொண்ட சில இளைஞர்கள் அவரின் உருவப்படத்தை வல்வை சன சமூக சேவா நிலையத்தில் மிளிர வைக்க விரும்பினர்.
அந்நாளில் லீலா பஞ்சாங்கக் கலண்டரில் புலவரின் தம்பி மகனான சித்திர ஆசிரியர் நடராசா அவர்களினால் வரையப்பட்ட புலவரின் மார்புடன் கூடிய வரிப்படம் அவரது நினைவு நாளில் செப்டம்பர் 3 இல் வெளிவந்துகொண்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு புலவரின் முழுஉருவப்படத்தையும் வரைந்து, இன்று பட்டி தொட்டியெங்கும் அவரது உருவம் வெளிவரக் காரணமாயிருந்தவர் ஓவியர் மோகனே!
அது மட்டுமல்லாது 2008 இல் அவுஸ்திரேலியாவிலுள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் வல்வையின் மூன்று முத்துக்களான, இந்திராணி ஆஸ்பத்திரியைக் கட்டிய தெய்வத்திரு அப்புக்க்குட்டியா பிள்ளை, சிதம்பரக் கல்லூரியை நிறுவிய தெய்வத்திரு சிதம்பரப்பிள்ளை, வல்வை சிவன் கோவிலைக் கட்டிய தெய்வத்திரு வெங்கடாசலம் பிள்ளை ஆகியோரின் முத்திரை வெளியிட முன்வந்த போது பெரியவரின் உருவப்படத்தை வரைந்ததுடன் மற்றைய இருவரின் உருவப்படத்தையும் வரைந்து தந்தவரும் ஓவியர் மோகனே!
தொழிலுக்காக ஓவியம் வரைந்தாலும் 1971இல் வல்வை சன சமூக சேவா நிலையத்தால் வெளியிடப்பட்ட ‘அலை ஒளி’ கையெழுத்துச் சஞ்சிகைக்கு 1974 இல் சித்திரம் வரைந்தது அவரது ஆத்மாவைக் குளிர வைத்தது. பின்னர்1975 இல் வெளி வந்த ‘அருவி’ கையெழுத்துச் சஞ்சிகையின் கௌரவ ஓவியராகி, சஞ்சிகையின் முழு ஓவியங்களையும் வரைந்ததுடன், கண்ணன் என்ற பாலசுப்ரமணியத்தின் ‘ஹைட்ரோஜின்பொம்ப்’ என்ற சித்திரக் கதைக்கு ஓவியம் வரைந்து வல்வை இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
வல்வையின் பல படைப்பாளிகளின் நூல்களுக்கு ஊதியம் எதுவும் பெறாது ஓவியம் வரைந்து தனது ஊர்ப்பற்றையும் இலக்கியப்பற்றையும் வெளிக்காட்டினார்.
இளவயதிலிருந்து ஈழ நெருப்பைத் தன் நெஞ்சிலே சுமந்த இவர் யுத்த அனர்த்தத்தினால் இந்தியா சென்றாலும் ஈழத்திற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்தவர். இவ்வுலகை நீத்து வானுலகம் புகும் காலங்களிலும் ‘வல்வை இலக்கிய வட்டம்’, ‘ஈழம்’ என்ற கனவுலகிலேயே மிதந்தவர் இவர்.