சிவன் கோவில் கொடியேற்றத்திற்கு முன்பு வருகின்ற வெள்ளி அல்லது திங்களன்று வரும் பொருத்தமான நன்னாளில் ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, இரவு அம்பாள் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுவது வழமையானது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெறாதிருந்த சிவன் கோவில் பிரம்மோற்சவம் இவ்வாண்டு 03-03-2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதால் மாரி தேவி உற்சவம் 25-02-2022 வெள்ளியன்று நடைபெறவுள்ளது.
அம்பாளுக்கு வருடம் முழுவதும் எத்தனையோ உற்சவம் நடைபெற்று வருகின்ற போதும், சிவன் கொடியேற்றத்திற்கு முன்பு வருகின்ற இந்த உற்சவமே மாரி தேவி உற்சவம் என விசேடமாகக் குறிக்கப்படுக்கிறது .
அன்றைய தினம் சிவன் கோவில் அர்த்த சாமப் பூசை முடிவடைந்ததும், சிவன் கோவில் பிரதம குரு, புளியடி ஊடாக அம்பாள் வாசலுக்கு உள்ளே சென்று, மூலமுர்த்தியான அம்பாளுக்கும், உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கும் பஞ்ச தீபம் காட்டி பூசை செய்து திரும்புவது இந்த மாரி தேவி உற்சவத்தில் உள்ள சிறப்பம்சம் ஆகும். இன்றைய பிரதம குருவான மனோகரக் குருக்களின் தந்தையாரான பரமேஸ்வரகுருக்கள் – அம்பாளுக்கான பூசை நிறைவேய்தியதும் அம்பாளின் மைய மண்டபத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து அம்பாளைத் தரிசித்துச் சென்றதை யான் பலமுறை பார்த்திருக்கின்றேன்.
விக்கினங்கள் எதுவும் இன்றி சிவன் திருவிழா நிறைவேற வேண்டி கிராம தேவதைகளைக் கட்டுப்படுத்துவதற்காக முத்துமாரி அம்மனுக்கு நிகழ்த்தப்படும் பூசையும் வழிபாடுமே இந்த மாரி தேவி உற்சவம் எனக் கருதப்படுகின்றது. இது ஏற்கக்கூடிய காரணமாக இருப்பினும் வேறு காரணமும் உண்டு.
வேங்கடாசலம் எனும் நாமத்தால் அறியப்பட்ட பெரியதம்பியார் அவர்களே சிவன் ஆலயத்தை 1867 ல் கட்ட ஆரம்பித்து, 1883 ல் பிரதிஸ்டாபிஷேகம் செய்வித்தார் என யாழ்ப்பாண வைபவ கௌமுதி எனும் பழைய யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல் கூறுவதுடன், அவர் சிலகாலம் அம்பாள் கோவிலில் தர்மகர்தாவகவும் இருந்தார் எனவும் அந்நூல் தகவல் தருகிறது.
இதன்படி அவரது காலத்திலேயே மாரி தேவி உற்சவம் நடைபெறும் ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. இது மட்டுமல்லாமல், அம்பாள் கோவிலில், சிவன் கோவில் சார்பான திருவிழாக்கள் நான்கு இன்றும் நடைபெற்று வருவதையும் நாம் நோக்க வேண்டும்.
1.மாரி தேவி உற்சவம்
2. பிரம்மோற்சவத்தின் (13ஆம் ) சப்பறத் திருவிழா
3. நவராத்திரி 8 ஆம் பூசை
4. திருவெம்பாவை 8 ஆம் பூசை ஆகியவையே அவையாகும்.
ஆகவே ஒரே நிர்வாக கட்டமைப்பில் இரு கோவில்களும் இருந்த காரணமும் மேற்குறித்த மாரி தேவி உற்சவம் தோற்றம் பெறக் காரணமாக இருந்திருக்கலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.