உயிர்வரை இனித்தாய்..வெளிவரவுள்ள எம்மவர்களின் திரைப்படம் பற்றி, டென்மார்க் அரசும் அதி நவீன தயாரிப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2014 (வெள்ளிக்கிழமை)
உயிர்வரை இனித்தாய்..தமிழகத்தில் இருந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு நிகராக விரைவில் வெளியிடப்பட்டுள்ள எம்மவர்களின் திரைப்படமான “உயிர்வரை இனித்தாய்” திரைப்படத்துக்கு, டென்மார்க் அரசும் அதி நவீன தயாரிப்பு உபகரணங்களை வழங்கி ஆதரவளித்துள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினைப்பற்றி, படத்தின் இயக்குனர் கே.செல்லத்துரை அவர்கள் Valvettithurai.org வேண்டுகோளிற்கிணங்க வாசகர்களுக்காக தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு.
டென்மார்க் அப்ரேடெஜி, தமிழ்நாடு கிரியேட்டி சிட்டி ஆர்ட்ஸ் மற்றும் ரியூப் தமிழ் இணைந்து வழங்கும் “உயிர்வரை இனித்தாய்” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக்காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பாடல் வெளியீட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
டென்மார்க்கில் உருவாக்கப்பட்டிருந்த “இளம்புயல்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வல்வையைச் சேர்ந்த வஸந்த் செல்லத்துரை கதாநாயகனாகவும், நர்வினி டேரி கதாநாயகியாகவும் இப்ப்டத்தில் நடித்துள்ளார்கள். இந்த முழுநீளத் திரைப்படத்தில் ஐரோப்பாவில், வடபுல டென்மார்க் முதற் கொண்டு தென்புல பிரான்ஸ்வரை பல நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் திரைக்கலைஞர்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த இக்கதை இன்றைய இளைஞர்களுக்கு காதலுக்கும், காமத்திற்குமுள்ள வேறுபாட்டை விளக்கி, காதல் உயிர் சார்ந்தது என்ற உன்னதத்தை எடுத்துரைப்பதாகவும், அத்துடன் அரசியல் கலப்பற்ற பொழுதுபோக்கு சித்திரமாக அமைந்து, ஒவ்வொரு உரையாடல்களும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சித்திரமாக வெளிவரவுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் செல்லத்துரை மாஸ்டர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டெசூபனும், படத்தொகுப்பு, வர்ணச் சேர்க்கை, இசை மற்றும் சரவுண்ட் ஒலிச்சேர்க்கை ஆகியவற்றை வஸந்த் செல்லத்துரையும் மேற்கொள்ள, திரைப்படத்தினை வல்வையைச் சேர்ந்த திரு.கே.எஸ்.துரை (செல்லத்துரை மாஸ்டர்) அவர்கள் இயக்கியுள்ளார்.
உயிர்வரை இனித்தாய் இவருடைய இயக்கத்தில் வெளியாகும் மூன்றாவது திரைப்படமாகும். இவர் முன்னர் இயக்கியிருந்த இளம்புயல் திரைப்படம் இந்தியிலும் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்தாண்டுகாலமாக திரைத்துறையில் புலம்பெயர்ந்த தமிழ் இளையோரை பயிற்றுவித்து, இந்திய கலைஞர்களுடன் இணைந்து, சுமார் ஒரு கோடி இந்திய ரூபா செலவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பயிற்சிகளை வழங்கி, அத்தோடு ஐரோப்பிய திரைப்பட கல்விப் பின்புலத்திலும் பயிற்றுவித்து, நீண்டகால அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஜனிகாந்தின் எந்திரன் படம் உருவாக்கப்பட்டது போல பல்லாயிரக்கணக்கான வர்ணப்புகைப்படங்களாக “ஸ்ரேரி போட்” அமைக்கப்பட்டு, 6 மாதகாலம் கொலிவூட் திரைப்படங்கள் போல “டபிள் வர்ணக்கரெக்சன்” செய்யப்பட்டு, துல்லியமான “சரவுண்ட்” ஒலித் தொழில்நுட்பத்தில் மூன்றாண்டுகால தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.
தற்போது டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் சினிமாத்துறை விரிவுரையாளராக உள்ள வஸந்த் செல்லத்துரை இப்பணியில் முன்னணி வகிக்கிறார். டென்மார்க் அரசு அதி நவீன தயாரிப்பு உபகரணங்களை வழங்கி ஆதரவளித்துள்ளமை இங்கு சிறப்புடன் நோக்கத்தக்கது.
வர்த்தக சினிமா தயாரிப்பின் அத்தனை நுட்பங்களையும் இலங்கைத் தமிழினத்தின் கரங்களுக்கும் கொண்டு வரவேண்டியதும், நமக்கான வர்த்தக சினிமாவை உருவாக்க வேண்டியதும் அவசியம் என்கின்றார் படத்தின் இயக்குனர் அவர்கள்.
அன்று வல்வை பாரத் கலாமன்றத்தின் நாடகக் கலைஞர்கள் இன்று ஐரோப்பாவிலும், தமிழகத்திலும் முன்னெடுத்துள்ள சினிமா முயற்சி வல்வை மக்களுக்கு புதிய நம்பிக்கையைத்தரும் என்பதில் ஐயமில்லை என்றும் இந்தத் திரைப்படத்தை இலங்கையில் திரையிட வல்வை மக்களின் ஆதரவு வேண்டுமென திரைப்பட இயக்குநர் கே.எஸ்.துரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வல்வை மக்கள் அகில இலங்கைக்குமான வெளியீட்டை பொறுப்பேற்றால் மகிழ்வுதரும் என்கிறார் மேலும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.