படகுகளில் அவுஸ்திரேலியா வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் நாடு கடத்தப்படுவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2012 (புதன்கிழமை)
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், நேற்று முன்தினம் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆட்கடத்தல்காரர்களின் சதிகளுக்கு ஏமாந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு இலங்கையர்கள் முயற்சிக்க வேண்டாம்.
அடுத்த ஆண்டில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எவரும் அங்கு தங்க வைக்கப்பட மாட்டார்கள். 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படுவர்.
எனவே, வீணாக பணத்தைச் செலவுசெய்து, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோத கடல்மார்க்கமாக பயணித்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்க வேண்டாம்.
இருப்பினும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 800 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் சட்டவிரோதமாக வருபவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு அங்கு எந்தவிதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. எனினும் அவர்கள் தாம் பணத்தினை ஈட்டுவதற்காகவே வருவதாக கூறுகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் அங்கு எவ்வித பணத்தையும் ஈட்டமுடியாது.
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணங்களைத் தடுப்பது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டு அரசாங்கங்களும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இணைந்து செயற்பட இணங்கியுள்ளன.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து செயற்படவுள்ளோம். அதேநேரம், இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்துள்ளது.
குறிப்பாக கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். உயர்கல்வியைத் தொடரவிரும்பும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் அவுஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இன்றைய பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.