ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு'ஆழிக்குமரன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு;
சாதனை 1) 1971ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது,
சாதனை 2) 1978ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,
சாதனை 3) 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,
சாதனை 4) 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,
சாதனை 5) 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,
சாதனை 6) 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),
சாதனை 7) 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,
சாதனை 8) 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை
சாதனை 9) 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.
ஓர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.
ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது, 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்ற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.
சாதனை முயற்சியின் போது "குளிர்ந்த கடலே கவலை தருகிறது, அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை" என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டுஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.