வல்வையில் இசை, மற்றும் ஓவியப் பயிற்சிப்பட்டறை வரும் ஞாயிற்றுக்கிழமை 17.02.2013 அன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் கலை கலாச்சார இலக்கிய மன்றத்து இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக,வருடந்தோறும் புதுவருடத்தினத்தில் கலைப்பெருவிழாவையும், மற்றும் பல கலை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் நடாத்தி வருவது வழக்கம்.
இவர்களது முயற்சியில், வல்வையர் பலர் கலைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும், என்ற உயரிய நோக்கத்தோடு இந்தப் பயிற்சிப்பட்டறை உருவாக்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை 17/02/2013ல் வேம்படி, உடையாமணல் வீதியில் அமைந்துள்ள, கலாநிதி திரு.சபா. ராஜேந்திரன் (குட்டிமணி அண்ணா )
அவர்களது இலவச கல்விக்கூடத்தில், வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினரால் இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன.
இசையில் தேர்ச்சி பெற்ற இசை ஆசிரியர்களும், ஓவியத்தில் கைதேர்ந்த பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான திரு.சுலக்ஷனும், மேலும் சிலரும் இதில் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில், ஆர்வமுள்ள வல்வை மாணவ, மாணவியர்கள் இணைந்து தமது திறமைகளை மெருகூட்டிக்கொள்ளலாம்.
கலை கலாச்சார இலக்கிய மன்றத்து இளைஞர்களது இந்தக் கலை ஆர்வத்தால் அடுத்துவரும் ஆண்டுகளில், வல்வையில் ஒரு "வல்வை மெல்லிசைக்குழு" என்ற ஒரு குழுவும் உருவாக்கம் பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
ஊரில் பல இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம். துடிப்பான இந்த இளைஞர்களது இந்த இசை ஆர்வத்தால் இந்நாள் வரையில், வல்வையில் ஒரு இசைக்குழு உருவாகவில்லையே என்ற குறையும் இல்லாமல் போய்விடும் போல் தெரிகிறது.
மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ள பலரும் இதில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். அடுத்தாண்டுகளில் நாடகம்,குறும்படம் போன்ற துறைகளிலும் இவர்களின் இந்தப்
பயிற்சிப்பட்டறையை விரிவாக்க திட்டங்கள் உள்ளன.
எமது ஊரில் இவர்களால் இன்னும் பல நல்ல முயற்சிகள், நடைபெறவேண்டும் என வாழ்த்துவோம்!
இவர்களை முன்னேற்றும் முகமாக, புலம்பெயர்ந்த வல்வையின் நலன் விரும்பிகள் சிலர் ஆர்வத்தோடு
முன்வந்துள்ளார்கள்.
இசை வகுப்புகளுக்கான மாதாந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வல்வையின் நலன்விரும்பி திரு.தியாகராஜா.முரளிதரன் அவர்களும், மற்றும் இசைக்கருவிகளை அன்பளிப்புச் செய்ய என்னுடன், எனது நண்பர் திரு.சோதிலிங்கம் மணிவண்ணன் அவர்களும் முன்வந்துள்ளார்கள் .
இவர்களுக்கு கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர், தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்.
இவர்களைப்போல, வல்வையில் திறமையும் ஆர்வமும் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தவும்
வருங்காலங்களில், வல்வை இளைஞர்கள் கலைத்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டவும், புலம்பெயர் வல்வை மக்கள், மற்றும் வல்வை நலன்புரிச் சங்கங்கள் உதவ முன்வருவார்கள் என நம்புகின்றோம்!
ஒரு தாயைப்போல, எங்கள் எல்லோரையும் ஊட்டி வளர்த்து ஆளாக்கிய
எமது ஊரை, நாம் எல்லோரும் சேர்ந்து வளப்படுத்தி அழகு பார்க்கவேண்டும்!
வாருங்கள்!!
இத்தகவலை இலண்டனில் வாழும் வல்வை நலன்விரும்பி திரு குழந்தைவேல் பிரேம்குமார் (KP) தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.