வரலஷ்மி விரதம் இன்றாகும். வரலஷ்மி விரதத்தின் போது கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் விரதமிருந்து பூசைகளை மேற்கொள்வது மரபாகும்.
வரலஷ்மி விரதத்தின் சிறப்பு
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ் விரதம் இந்த வருடம் ஆடி மாதமும், நவமி திதியும் அமைந்த வெள்ளிக்கிழமை அமைவதால் அம்பிகையின் அருள் நிறைந்த நாளாக இது கருதப்பட்டு கொண்டாடப்படுகின்றது.
சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை),வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது.
இந் நாளில் விரதமிருந்து லக்ஷ்மியை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியமவிதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள் என்பது நம்பிக்கை. அப்படி செய்ய இயலாதவர்கள் லஷ்மி வீற்றிருக்கும் ஆலயங்களிலும் சென்று இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
வரலஷ்மி விரதத்தின் சிறப்பு பற்றிக் கூறும் புராணக் கதை
முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது அங்கிருந்த சித்ர நேமி என்ற கணதேவதை நியாயம் கேட்டார்கள். அவன் ஒரு தலைப் பட்சமாக சிவன் ஜெயித்ததாக கூறினான்.
பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து தவிப்பாயாக என்று சபித்து விட்டாள். பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுது அழகிய தடாக தீர்த்தத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்று கூறினாள். அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து வந்தான்.
பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு, தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம் என்று கூறினார்கள். அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான்.
சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் (ஆடி அல்லது ஆவணி) சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில் முறைப்படி மஹாலஷ்மியை நோக்கி இந்த விரதத்தை தொடங்க வேண்டும் என்பது மரபு.
எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றும் புராணங்களில் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.