பிள்ளையாரின் பெருமை கூறும் பெருங்கதை விரதம் இது. இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் முழுமுதற் கடவுளான வினை தீர்க்கும் விக்கினேஸ்வர பெருமானின் புனிதமும் மகிமையும் கூறும் இந்த புண்ணிய விரதம் அனைவராலும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று.
தெய்வீக திருவிளையாடல்கள். பிழை பொறுத்து அருள் கொடுக்கும் பிள்ளையார் படிப்பு பிள்ளையார் கோயில்களில் 21 நாட்கள் இருபத்தியோர் இழை காப்புக்கட்டி ஐங்கரக்கடவுளை அர்ச்சனை பண்ணி ஒரு பொழுது உணவருந்தி ஒருமனமாய் அனுஷ்டிக்கப்படும்.
துன்பங்களை களைந்து பெருங்கதையை படிப்பவர்களும் அருகில் இருந்து விரும்பி கேட்பவர்களும் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெறுவார்கள்.
பக்தி பூர்வமாக காலை எழுந்து சந்தியா வந்தனம் முடித்து யானை முகத்தானை மனதில் இருத்தி பிள்ளையார் கோயில் சென்று அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று ஒவ்வொரு நாளும் பிள்ளையார் கதை படித்து ஒரு நேர உணவு உண்டு பசி உற்றோருக்கு உணவளித்து 21 நாட்கள் விரதம் இருத்தல் வேண்டும்.
கஜமுகா சூரன் தேவர்கள், முனிவர்களை யும் பெண்களையும் சொல்லொணா துன் பம் கொடுத்ததாகவும் இவற்றை அழித்து மக்களையும் தேவலோகவாசிகளையும் காப்பாற்றி கருணை கூர்ந்ததாகவும் பெருமை வாய்ந்த பிள்ளையாரை வணங்க பெருங்கதை படிப்பு வகை செய்யும் ஐங்கரனை மிக சுலபமாக வழிபடலாம்.
இருகரம் குவித்து சிரசில் மூன்று முறை குட்டி இரண்டு கைகளை மாறி மாறி செவியை தொட்டு தோப்புக்கரணமிட்டு இருந்து எழும்பி வணங்குதல் வேண்டும். இவருக்கு மோதகம், பொரி, அரிசி, அவல், கடலை தேன், பால்,மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், இளநீர், இராசவள்ளிக் கிழங்கு, 21 நாளும் செய்து நைவேத்தியம் செய்து படைத்து வழிபடல் வேண்டும்.
காசீபரின் மனைவி அதிதி விநாயகரை நோக்கி தவம் செய்தார். அவளின் தவத்திற்கு இரங்கி என்ன வேண்டும் என்று விநாயகப்பெருமான் கேட்க தேவர்களையும், பக்தர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அருள்புரிந்து குழந்தை வடிவெடுத்து அதிதியிடம் வந்து மகோற்சகடர் என்ற பெயரோடு வளர்ந்து வந்தார். இதனை அறிந்த காசிராசன் வந்து மகோற்சகடரை அரச சபைக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த கூடன் என்ற அசுரன் அரண்மனை வாசலில் பாறாங்கல்லாக மாறி படுத்திருந்தான்.
மகோற்சகடர் காசி ராசன் மூலமாக ஆயிரம் தேங்காய்களை வரவழைத்து பாறையாகி கிடந்த அரக்கர் மேல் உடைக்க செய்தார். வலி பொறுக்க முடியாது கதறி இறந்து போனான் கூடன் என்ற அசுரன். தேங்காய் உடைத்து கொன்றபடியால் தேவர்கள் தேங்காய் உடைத்து வழிபடுவோரை பூரண அருள் புரிதல் வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் பிள்ளையாரை தேங்காய் அடித்து கும்பிடுவோரை அருள் பொழிந்து ஆளுவதாகவும் ஐதீகம்.
இவ்விரதத்தினை மேற்கொள்ளும் போது பயபக்தியோடு பக்திபூர்வமாக தீய உணர்வுகள், தீயகுரோத செய்கை கள் யாவற்றையும் களைந்து ஓர் நினைவுடன் தீய பழக்க வழக்கம், புலால் உண்ணால், மனதை அலைபாய விடாது ஓர் நினைவோடு விநாயகர் கவசம் பக்தி பாடல்கள் பதிகங்கள் பாராயணம் செய்து விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனை ஓர் நினைவுடன் அர்ப்பணித்துப் பாருங்கள்.
நிச்சயமாக உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அமைதியான வாழ்வையும் நிலையான வாழ்வு கைவரப் பெற்று அர்த்த முள்ள வாழ்வு வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.
குருகுலத்தில் உதித்த மூத்த தருமனும் தம்பியரும் கிருஷ்ணனிடம் போய் போரில் எதிர்த்த பகைவரை வெற்றி கொள்வதற்குரிய விரதம் எதுவென கேட்க சித்தி விநாயகனை அரசனிடம் போக புறப்படும் போதும் போருக்கு போகும்போதும் ஏடு தொடக்கும் போதும் உத்தியோகங்கள் போகும் போதும் அர்ச்சித்து விநாயக விரதம் இதுவென்றும் பாம்பாகி கிடந்த விஷ்ணு நோற்று பாம்பு உரு நீங்கியதும் உமை கதவை அடைத்த போது சிவன் இந்நோன்பினை நோற்று கதவு திறந்ததும் வச்சிரமாலி என்னும் மன்னன் நோற்று உடற்பிணி தீர்த்து மீண்டும் அரசாட்சி திலோத்தமையை மணம் புரிந்து மைந்தர்களைப் பெற்று இறுதியில் கயிலை சேர்ந்ததாகவும் மன்னன் விக்கிரமாதித்தன் இந்நோன்பினை நோற்க வைத்து எடுத்தெறிந்த மனை வியால் நகர் இழந்து பின் முறைப்படி விரதம் இருந்து பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் அறிய முடிகிறது.
மாபெரும் உன்னதம் நிறைந்த இந்த விநாயகப் பெருமானை நாம் ஒவ்வொருவரும் நோன்பு நோற்று பெருவாழ்வு வாழ்வோமாக.
“திருவாக்கும் செய் கருமங் கைகூட்டுச் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும். உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவார் தம் கை. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.