"அரசவைக் கவிஞரின்" பாத்திரமே தவிர, உண்மையான இலக்கியவாதியின் இலக்கணம் அல்ல!
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2026 (சனிக்கிழமை)
"அரசவைக் கவிஞரின்" பாத்திரமே தவிர, உண்மையான இலக்கியவாதியின் இலக்கணம் அல்ல!
--- --- ---
* நிலம் - இறையாண்மை என்பதை கம்பர் எப்படிச் சித்தரிக்கிறார் என்பதை அறியாதவரா இந்த ஜெயராஜ்!!
* தொல்காப்பியம் சொல்லும் இனத்துவ வரலாற்றைப் புரியாதவரா இக் கம்பவாரிதி!!
* "மறந்து விடுங்கள்" என்பது புறநானூற்று மரபிற்குச் செய்யும் அவமதிப்பு!
* தமிழ்த்தேசியக் கட்சிகளின் பலவீனத்தை அறிந்து இயங்கும் சதி அரசியல் நிகழ்ச்சி நிரல்!!!
--- --- ---
ஒரு தேசத்தின் கூட்டு வரலாற்று நினைவாற்றல் என்பது, 'தடங்கள்' என்ற ஒரு பெரும் பலத்தையும் இயற்கை உரிமையையும் குறிக்கும். அத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சியைத் துண்டித்து, ஓர் தேசிய இனத்தின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் கருத்து வெளிப்பாடுகள் எப்போதுமே ஆபத்தானவை.
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் விழா மேடையில், கம்பவாரிதி இ. ஜெயராஜ், தமிழர்கள் 2009 இற்கு முற்பட்ட ஆயுதப் போராட்ட வரலாற்றை முற்றாக மறக்க வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழர்கள் வடக்கு-கிழக்கு தாயகப் பகுதிகளுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனவும் முன்வைத்துள்ள காரண-காரியக் கோரிக்கை ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான ஒரு சதி அரசியலின் பின்புலம் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று.
ஓர் அறம் சார்ந்த சமூகம் தனது வரலாற்றை எப்படிக் கடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள் ஊடாகக் கற்பித்துச் சென்றுள்ள பின்னணியில், ஈழமண்ணில் நின்று கொண்டே தமிழரின் கூட்டு நினைவழியாக்கத்திற்கு அழைப்பு விடுப்பது என்பது வெறும் மேடைப் பேச்சல்ல, அது ஈழத்தமிழினத்தின் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தல்.
புனை கதையாக இருந்தாலும் கம்பராமாயணம் உணர்த்தும் அடிமைத்துவத்திற்கு எதிரான அறச்சீற்றங்களும், ஓர் இனத்தின் சுயமரியாதை வரலாற்றை நியாயப்படுத்துகின்றன.
அவற்றை முற்றிலும் நிராகரித்து, ஈழத்தமிழர்களின் குருதி தோய்ந்த தியாகங்களை ‘மறதி’ என்னும் இருளுக்குள் தள்ள முயல்வது, இந்த இனத்திற்குச் செய்யப்படும் தமிழர் அறத்திற்கு மாறான, நன்கு திட்டமிடப்பட்ட பெரும் அநீதி.
இலக்கண நூலான தொல்காப்பியம், மொழிக்கான இலக்கணம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை எப்படிக் காக்க வேண்டும் என்பதற்கான வாழ்வியல் வழிகாட்டியுமாகும்.
"முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்" மரபைக் காக்க வேண்டும் என்று தொல்காப்பியம் வலியுறுத்துவது, வெறும் சொற்களை அல்ல, அச்சொற்கள் சுமந்து நிற்கும் இனத்தின் வரலாற்று உண்மைகளையும் சேர்த்தே என்பது தான் அதன் உட்பொருள்.
புறநானூற்றுப் பாடல்கள் எமக்குக் கற்பிப்பது போர்க்கள வீரத்தை மட்டுமல்ல, மாறாக ஒரு இனம் தனது தன்னாதிக்கத்திற்காகவும், நிலத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் செய்த தொடர் அரசியல் போராட்டங்களின் சாட்சியங்களைத்தான்.
"மாய்ந்த மகனோடு மடிந்தாள்" என்றும், "களம்புகுந்து மடிந்த வீரன்" என்றும் புறநானூறு பாடுவது, அந்தத் தியாகங்கள் வருங்காலச் சந்ததிக்கு நெஞ்சுறுதியையும் சுயமரியாதையையும் ஊட்ட வேண்டும் என்பதற்காகவே.
நடுகல் வழிபாட்டின் மூலம் வீரர்களின் வரலாற்றைப் பிற்காலச் சமூகம் அறியச் செய்த மரபு தமிழ் மரபு. அவ்வாறிருக்க, முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக ஈழத்து மண்ணில் தமது உயிர்களையும் உடமைகளையும் ஆராதனையாக்கி, ஓர் அரசு அற்ற இனமாக நின்று தமிழர்கள் நடத்திய உலகமே வியந்த அரசியல் போராட்டத்தை "மறந்துவிடுங்கள்" என்று கூறுவது புறநானூற்று மரபிற்கே இழைக்கப்படும் பெரும் அவமதிப்பாகும்.
2009 என்பது வெறும் ஒரு வருடமல்ல, அது ஈழத்தமிழினத்தின் கூட்டுத் துயரத்தினதும், அடக்க முடியாத அநீதிக்கு எதிரான தார்மீகக் குரலினதும் குறியீடு. அதனை மறப்பது என்பது தமிழரின் 12கூட்டு அடையாளத்தையே தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும்.
திருக்குறள் உரைக்கும் அரசியல் நெறிகளின்படி, ஒரு குடிக்கு அழகு என்பது அதன் "மறமானம் மாண்ட வழிச்செலவு" ஆகும்.
அதாவது, வீரமும் மானமும் மிக்க முன்னோரின் வழியில் நடப்பதே ஒரு சிறந்த சமூகத்தின் அடையாளம் என்கிறார் வள்ளுவர்.
அநீதிக்கு முன்னால் மண்டியிடாமல், இழந்த உரிமைகளை மீட்பதற்கான தார்மீக உணர்வை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதே அறிவுடைமையாகும்.
கம்பராமாயணத்தில்கூட, இலங்கை மன்னனான இராவணன் தனது பேராசையாலும் தர்மநெறி தவறியதாலும் வீழ்ந்தானே தவிர, அந்த மண்ணின் பூர்வகுடிகளான இயக்கர் இனம் தமது நிலத்தின் மீதும், தமது இறையாண்மையின்மீதும் கொண்டிருந்த பற்றைக் கம்பன் மிக ஆழமாகவே சித்திரிக்கின்றான்.
வீடணன் சரணாகதி அடைந்தபோதும்கூட, கும்பகருணன் போன்ற பாத்திரங்கள் மண்ணின் ”மானம்” - சுயமரியாதை” என்ற ஆமான உணர்வுடன் போரில் பலியாவதைத் தெரிவு செய்கின்றனர்.
அநீதிக்கு எதிரான போராட்ட வரலாற்றை அழித்துவிட்டு, ஒரு இனம் வெறுமனே சடலங்களாக வாழ்வதை எந்தவொரு தமிழ் இலக்கியமும் ஆதரிக்கவில்லை.
அத்தகையதொரு இலக்கியப் பாரம்பரியத்தில் தன்னை ஒரு இலக்கிய அறிஞர் என்று மார் தட்டும் ஒருவர், ஈழத்து மண்ணில் நின்று கொண்டு, இந்த இனத்தின் தியாகங்களை மறக்கச் சொல்வது என்பது, அவரது இலக்கியப் புலமை எத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகியிருக்கிறது என்ற ஐயம் சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகிறது.
வடக்கு - கிழக்கு தாயக நிலத்தின் பொருளாதாரப் பிடிப்பைத் தளர்த்துவதற்காக, புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்குப் பணம் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று கம்பவாருதி விடுத்த கோரிக்கை, ஈழத்தமிழினத்தை மீளவும் ஒரு பொருளாதார அடிமைத்தனத்திற்குள் தள்ளும் சூழ்ச்சியாகவே நோக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், தாயகத்தில் வாழும் மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களையும், கல்வியையும், சமூகக் கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் நிமிர்த்திப் பிடிப்பதற்குப் புலம்பெயர் உறவுகளின் ஆதரவு முதன்மைக் காரணியாக இருக்கிறது.
திருக்குறள் கூறும் "ஒப்புரவறிதல்" என்ற நெறியின்பிரகாரம், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் தமது மரபுவழி உறவுகளுக்குச் செய்யும் இந்த உதவி வெறும் தர்மமல்ல, அது தாயக நிலத்தின் மீதான அவர்களின் அரசியல் மற்றும் தார்மீகக் கடமையாகும்.
அதனை நிறுத்தக் கோருவது, வடக்கு - கிழக்கு மக்களின் பொருளாதார தன்னாதிக்கத்தை சிதைத்து, அவர்களை எப்போதும் வேறு சக்திகளில் தங்கியிருக்கும் ஒரு பலவீனமான சமூகமாகக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான ஏற்பாடு என்பதில் ஐயமில்லை.
இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட காரண - காரியத் தொடர்பு கொண்டவை என்பது மிகத் தெளிவானது.
நினைவிழக்கச் செய்வதன் மூலம் அரசியல் ரீதியாகவும், நிதியுதவிகளைத் தடுப்பதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் ஈழத்தமிழர்களை முற்றிலும் முடக்குவதே இதன் பின்னாலுள்ள உள்நோக்கமாக இருக்க முடியும்.
இக்கூற்றுகளின் பின்னணியில் உள்ள அரசியல் நிலைப்பாட்டை ஆராயும்போது, கம்பவாரிதியின் சமீபத்திய செயல்பாடுகளும் சர்ச்சைகளும் அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்தியாவின் தற்போதைய அதிகார மையச் சூழலோடும், அங்குள்ள மைய நீரோட்ட வலதுசாரிச் சித்தாந்தத்தோடும் அவர் கொண்டுள்ள நெருக்கம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற்ற பூஜை வழிபாடொன்றில், அவருக்குப் “பாதபூஜை” வழிபாடு செய்யப்பட்டபோது, ஒரு வாழையிலையை அவரது பாதங்களுக்குக் கீழே வைத்து அந்த வழிபாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களை நிலப்பிரபுத்துவ, ஆதிக்க மனோபாவத்தோடு பூஜிக்கும் இத்தகைய கலாச்சாரம், தமிழரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் முரணானது.
தங்களை ஒரு ஆன்மீக, இலக்கியப் பெருந்தகையாகக் காட்டிக்கொண்டு, இத்தகைய வழிபாடுகளை விரும்புவோர், உண்மையில் எத்தகைய, அதிகாரத்துவ சக்திகளின் முகவர்களாகச் செயல்படுகிறார் என்ற சந்தேகம் ஈழத்தமிழர்கள் மத்தியில் எழுவது முற்றிலும் நியாயமானது.
இந்தியாவின் குறிப்பிட்டதொரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஆதிக்கப் பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒருவர், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்ட வரலாற்றையும், அவர்களின் தனித்துவமான அரசியல் நியாயங்களையும் நீர்த்துப்போகச் செய்ய முற்படுவதும் தற்செயலான நிகழ்வல்ல.
ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பது வெறும் நிலத்திற்கான மோதல் அல்ல, அது மொழி - பண்பாடு, மற்றும் சுயமரியாதைக்கான நீண்ட அரசியல் விடுதலைப் பயணம்.
அதனை ஒரு பிராந்திய வாதத்திற்குள்ளோ அல்லது மதவாதச் சுருக்கத்திற்குள்ளோ அடக்கிவிட முடியாது.
பாத வழிபாட்டுச் சர்ச்சையின் மூலம் தனது நிலப்பிரபுத்துவ அடிமைத்துவ மனோபாவத்தை வெளிப்படுத்திய ஒருவர், ஈழத்து மண்ணிற்கு வந்து தமிழர்களின் விடுதலை வரலாற்றை மறக்கச் சொல்வதும், தமிழரின் வாழ்வாதார வழிகளை அடைக்கச் சொல்வதும் திட்டமிட்ட ஒரு பண்பாட்டு - அரசியல் ஆக்கிரமிப்பின் வடிவம்.
ஈழத்தமிழினம் அறிவாலும் உணர்வாலும் முதிர்ச்சியடைந்த ஒரு சமூகம். இலக்கியப் பேச்சுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் நயவஞ்சக அரசியல் நோக்கங்களை இனங்கானும் வல்லமை தமிழர்களிடம் உண்டு.
எனவே, தமிழ் இலக்கியங்கள் காட்டிய அறத்தின் வழியிலும், கடந்து வந்த வரலாற்றுச் சுவடுகளின் துணையோடும், போராட்ட நினைவுகளையும் கூட்டுப் பலத்தையும் எக்காலத்திலும் கைவிடப் போவதில்லை என்ற தீர்க்கமான செய்தியை இத்தகைய சக்திகளுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும்.
ஈழத்தமிழினத்தின் தற்கால அரசியல் வெளியானது, நேர்மையான மற்றும் தூரநோக்குடைய அரசியல் தலைமையற்ற பெரு வெற்றிடமாகவே தொடர்ந்து நீடித்து வருகின்றது.
2009 இற்குப் பின்னரான சூழலில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு களமிறங்கிய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், மக்களின் நீண்டகால அரசியல் நியாயங்களை வென்றெடுப்பதை விடுத்து, தேர்தல் கட்சி அரசியலையும், ஆசனப் பங்கீடுகளையும், அதிகாரப் போட்டிகளையுமே முதன்மைப்படுத்தி வந்துள்ளன.
இத் தேர்தல் மையவாத அரசியலால் ஏற்பட்ட தொடர்ச்சியான பலவீனங்களும், உட்கட்சிப் பூசல்களும் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பை முற்றாகச் சிதறடித்துள்ளன.
ஒரு பலமான, ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுத் தலைமைத்துவம் இல்லாத இந்த அவல நிலையை, தமக்கு ஏற்ப பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டுதான், கம்பவாரிதி போன்றவர்கள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இத்தகைய ஆபத்தான, கருத்துக்களை மிகத் துணிச்சலாக விதைத்து வருகின்றனர.
ஒரு சமூகத்திற்குள் அரசியல் ரீதியான தற்காப்பு அரண்கள் உடையும் போது, வௌிச் சக்திகளும் அவர்களின் முகவர்களும் மிக இலகுவாக உள்ளே நுழைந்து, அந்த இனத்தின் நினைவழியாக்கத்தை (Cultural Amnesia) அரங்கேற்ற முடியும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமே ஜெயராஜின் இந்த நயவஞ்சகப் பேச்சு.
இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, கொழும்பு மேடைகளில் கம்பன் விழா நடத்தும் கம்பவாரிதி, தமிழரின் அறக்கோட்பாடுகளை விடவும் தென்னிலங்கையின் அதிகார வர்க்கத்தை அரவணைப்பதிலேயே எப்போதும் பெரும் ஆவர்வம் காட்டி வந்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேன முதல் இன்றைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரை, பேரினவாதப் போக்கைக் கொண்ட தென்னிலங்கை ஆட்சியாளர்களை கம்பன் விழா மேடைகளுக்கு அழைத்து, அவர்களுக்குச் செங்கம்பளம் விரித்து, "விருதுகள்" வழங்கி கௌரவிப்பதில் அவர் காட்டும் தாராளமயம் ஈழத்தமிழர்கள் நன்கு அறிந்தவை தான்.
2009 போர்க்கால துயரத்தின் வடுக்கள் கூட இன்னும் காயாத மண்ணில் நின்று கொண்டு, மக்களின் குருதியிலும் கண்ணீரிலும் அதிகாரக் குதிரை ஓட்டும் பேரினவாதப் பாத்திரங்களுக்கு இலக்கிய மேடைகளில் திலகமிட்டு விருது வழங்குவது எத்தகையதொரு சாணக்கியம்?
அநீதி இழைத்த அரச அதிகாரத்தை நோக்கி விரல் நீட்டிக் கேள்வி கேட்க வேண்டிய ஒரு தமிழ் இலக்கியப் பாரம்பரியம், கொழும்பு மண்டபங்களில், அநீதியின் குறியீடுகளாக விளங்கும் ஆட்சியாளர்களின் பாதங்களில் விருதுகளைக் கொட்டித் தீர்ப்பது, பெரும் வேடிக்கை அல்லவா?
இந்தியாவில் வாழையிலையின் மேல் பாதபூஜை ஏற்றுக்கொண்டு தனக்குள்ளே 'ஆன்மீக சக்கரவர்த்தியாக உவகை கொள்ளும் ஜெயராஜ், கொழும்பில் பேரினவாத அதிகார வர்க்கத்திற்கு விருதுகளைத் தாராளமாக வாரி வழங்கி, தன்னை ஒரு 'அரசியல் இராஜதந்திரி ' எனவும் காட்டிக் கொள்ள முனைகிறார்.
இது ஒரு வகையான நவீன "அரசவைக் கவிஞரின்" பாத்திரமே தவிர, உண்மையான இலக்கியவாதியின் இலக்கணம் அல்ல.
கம்பராமாயணத்தில் இராவணனின் அநீதியான ஆட்சியைத் தோலுரித்துக் காட்டிய கம்பனின் பெயரால் விழா நடத்திவிட்டு, நிஜ வாழ்க்கையில் அதே அநீதியான அதிகார வர்க்கத்திடம் தஞ்சம் புகுவது முரண்பாடுகளின் உச்சமாகும்.
தென்னிலங்கை அதிகார மையங்களின் துணையோடும், இந்திய ஆன்மீக - அரசியல் சக்திகளின் நிழலோடும் ஈழத்து மண்ணில் கால் பதிக்கும் ஜெயராஜ் போன்றவர்கள், தமிழ் மக்களின் குருதி தோய்ந்த தியாக வரலாற்றை 'மறக்கச்' சொல்வதன் பின்னாலுள்ள அரசியல் தந்திரம் இப்போது துலக்கமாக விளங்குகின்றது.
தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தால் ஏற்பட்ட இந்த இடைவெளியை, ஜெயராஜ் போன்றோர், தமது சுயலாபங்களுக்கும் பிற சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழினம் இத்தகைய போலி ஆன்மீகவாதிகளினதும், சந்தர்ப்பவாத இலக்கியவாதிகளினதும் முகமூடிகளைக் கிழித்தெறிந்து, தமது கூட்டு நினைவாற்றலையும் அரசியல் விழிப்புணர்வையும் என்றும் இதயத்தில் ஏந்தி நிற்கும் என்பது வரலாற்று உண்மை.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.