PSTA, OCB ஆலோசனையின் பின்னரே நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2026 (சனிக்கிழமை)
பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசைக் காக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (Protection of the State from Terrorism Bill) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (Prevention of Organised Crimes Bill) ஆகியவை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, அன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலங்கள் குறித்து கவலைகளையும் எதிர்ப்புகளையும் வெளியிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், பரந்தளவிலான உடன்பாட்டை எட்டிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டங்களையும் விதிகளையும் பயன்படுத்தி அதிகாரத்தில் நீடிக்கும் எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"நாங்கள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலம் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அல்ல" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை தமது அரசாங்கம் மதிப்பதாகவும், தேர்தலில் வாக்காளர்கள் தம்மை பதவியிலிருந்து அகற்றத் தீர்மானித்தால் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் திசாநாயக்க குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புப் கிளம்பியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் சட்டமூலங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (06) கொழும்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. (Newswire)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.