Amazon FBA என்ற பெயரில் செயற்பட்டுவரும் amazonweb.vip இணையத்தளத்தில் இலங்கையைச் சேர்ந்த பலர் முதலீடு செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதை நம்பலாமா, வேண்டாமா? இதில் முதலீடு செய்யலாமா, வேண்டமா? இது எந்தளவு நம்பிக்கையானது? இது பிரமிட் வியாபாரமா? இதுவொரு Crypto currency வியாபாரமா என்று பல கேள்விகளை அடுக்குபவர்களுக்கான பதிவே இது.
• Amazon FBA என்றால் என்ன?
பிரபல இணைய வர்த்தக நிறுவனமான Amazon இரண்டு முறைகளில் பொருட்களை விற்பனை செய்துவருகின்றது. முதலாவது Merchant Fulfilled Network (MFN) முறையாகும். நாம் விற்பனையாளராக பதிவுசெய்த பின், நமது பொருள் Amazon இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும். அதனை ஒருவர் வாங்கினால், குறித்த பொருளை பொதியிட்டு வைத்திருந்தால் Amazon விநியோக முகவர் அதை நம்மிடம் பெற்றுக்கொண்டு, வாங்கியவரிடம் கொண்டுபோய் சேர்ப்பார். பின்னர் அதற்கான பணம் நமக்கு வந்துசேரும். இதுவே பரவலாக பின்பற்றப்படும் முறையாகும்.
இரண்டாவது Fulfillment by Amazon (FBA) முறையாகும். ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட காலத்தில் அதிக கேள்வி (கிராக்கி) இருந்தால், அந்தப் பொருட்களை மொத்தமாக உற்பத்தி செய்து அல்லது கொள்வனவு செய்து Amazon களஞ்சியசாலைக்கு நாம் அனுப்பவேண்டும். அந்தப் பொருள் Amazon தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, வாங்குபவருக்கு அவர்களினாலேயே நேரடியாக விநியோகிக்கப்படும். அதன்பின் அதற்கான பணம் நமக்கு அனுப்பப்படும். இந்த வியாபார முறையில் Amazon நிறுவனத்தின் பங்களிப்புகள் அதிகமாக இருக்கும்.
Amazon தளத்தில் FBA முறையில் எமது பொருட்களை விற்பனை செய்வதற்கு கீழுள்ள இணைப்பில் பதிவுசெய்ய வேண்டும்.
Amazon நிறுவனம் தனக்கென பிரத்தியேகமாக FBA தளத்தை (sell.amazon.com) வைத்திருக்கும் நிலையில், amazonweb.vip என்ற இணையத்தளம் “Amazon FBA” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. FBA முறையில் வியாபாரம் செய்வதென்றால், நமது பொருட்கள் மொத்தமாக Amazon களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், இங்கு பெளதீக ரீதியில் அப்படியான எந்தவொரு செயற்பாடும் இல்லை. பொருட்களை amazonweb.vip தளத்தில் வாங்கி, அங்கேயே விற்பனை செய்யவேண்டும்.
amazonweb.vip இணையத்தளத்துக்கும் Amazon நிறுவனத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. இந்த தளம் குறித்து Amazon நிறுவனம் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை. FBA வியாபாரத்துக்காக sell.amazon.com என்ற இணைய முகவரி இருக்கத்தக்க நிலையில், அதைப்போல் (மாதிரியாக) உருவாக்கப்பட்டதே இந்த amazonweb.vip தளமாகும். ஒருவரியில் சொல்லப்போனால் நம்பகத்தன்மையற்ற தளமாகும்.
• amazonweb.vip போலியானதா?
இந்த இணையத்தளம் மிக அண்மையில் (30.05.2022) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இணைய முகவரி (Domain) ஒரு வருடத்துக்கு மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. Scam detector தரவுகளின்படி குறித்த இணையத்தளத்தின் நம்பகத்தன்மை 0.5% என கணிக்கப்பட்டுள்ளது. இதனை போலியானதொரு இணையத்தளமாக சுட்டிக்காட்டியுள்ளது.
Amazon இலச்சினையுடன் web.vip என்ற வாசகம் சாதாரணமாக சேர்க்கப்பட்டு அதன் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் Amazon அப்படியொரு இலச்சினையை இதுவரை எந்த இடத்திலும் அறிமுகப்படுத்தவில்லை. அத்துடன் amazonweb.vip இணையத்தளம் பிரத்தியேகமாக (Not professional) வடிவமைக்கப்படவில்லை. இணையத்தள வடிவமைப்புடன் பரீட்சயமுள்ளவர்கள் இதனை போலியானது என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்வார்கள்.
amazonweb.vip பற்றி எந்தவிதமான சுயவிபரங்களும் இல்லை. தொடர்புகொள்வதற்கான முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என எதுவுமே இல்லை. இணையத்தளத்திலுள்ள Online chat என்பதை கிளிக் செய்தால் "Amazon Zena" என்ற பேஸ்புக் கணக்குக்கு (Page அல்ல) செல்கிறது. குறித்த பேஸ்புக் கணக்கில் பெண் ஒருவரின் போலியான புகைப்படம் தவிர, வேறெந்த தகவல்களும் இல்லை. இதுவொரு போலியான பேஸ்புக் கணக்காகும்.
• amazonweb.vip எப்படி செயற்படுகிறது?
ஏற்கனவே உறுப்பினராகவுள்ள ஒருவரின் Invite Code இருந்தால், அதன்மூலம் ஒரு கணக்கை திறக்கமுடியும். அதன்பின் அவர்கள் தருகின்ற நபரின் உள்நாட்டு வங்கி கணக்குக்கு பணம் வைப்பிலிட வேண்டும். அதன்பின் Task என்ற பெயரில் amazonweb.vip தளத்தில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை வாங்கி, விற்க வேண்டும். அதன்மூலம் நமக்கு தினசரி குறிப்பிட்டளவு வருமானம் கிடைக்கின்றது.
நாம் விற்பனை செய்யும் பொருட்களுக்கு கமிசன் அடிப்படையிலேயே இலாபம் வழங்கப்படுவதாகவும், பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியாக சேர்வதை உறுதிப்படுத்துவதற்காக நமது வருமானத்தில் 30% அடமானத் தொகையாக பிடிக்கப்படுவதாகவும், அது மாதத்தின் முதல் நாளில் வட்டியுடன் நமக்கு கிடைக்கும் எனவும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது Invite Code மூலம் புதிதாக ஆட்களை சேர்த்துவிட்டால், அவர்களுக்கு அதில் குறிப்பிட்டளவு கமிசன் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, ஒருவர் 10 பேரை சேர்ப்பார். அந்த 10 பேரும் 100 பேர்களை சேர்ப்பார்கள். ஆம், இதுவொரு பிரமிட் வியாபாரம்தான். இந்த வியாபாரத்தை குறுகிய நேரத்தில் பரவலடையச் செய்வதற்காக குலுக்கல் முறையில் செல்போன், கணனி என்பவற்றை பரிசாக வழங்குவதாகவும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமக்கு கிடைக்கின்ற வருமானம், முதலீடு என்பவற்றை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நமது வங்கி கணக்குக்கு மீளப்பெற முடியுமென கூறப்படுகிறது. அவர்கள் தருகின்ற வங்கி கணக்குக்கு பணம் வைப்பிலிட்டால், பின்வருமாறு வருமானம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
01. FBA வியாபாரத்துக்கு Amazon இணையத்தளமொன்றை வைத்திருக்கும் நிலையில் ஏன் புதிதாக ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்?
02. Amazon நிறுவனம் தனது FBA வியாபாரத்தை 19.09.2006 அன்று ஆரம்பித்துள்ள நிலையில், 30.05.2022 அன்று ஏன் புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்?
3. இது Amazon நிறுவனத்தின் கீழ் செயற்பட்டால், ஏன் ஒரு வருடத்துக்கு மாத்திரம் தங்களது இணைய முகவரியை (Domain) பதிவுசெய்ய வேண்டும்?
004. நமது உற்பத்தியில்லாத (சொந்தமில்லாத) பொருட்களை அவர்களது தளத்திலேயே வாங்கி, அங்கேயே விற்பதற்கு அவர்கள் ஏன் கமிசன் தரவேண்டும்?
05. பார்வைக்கு புலப்படாத (Virtual) பொருட்களை FBA முறையில் வியாபாரம் செய்வதை Amazon அறிமுகப்படுத்தவில்லை என்பது தெரியாதா?
06. amazonweb.vip மூலம் விற்பனை செய்யும் பொருட்கள், உத்தியோகபூர்வ amazon.com தளத்தில் ஏன் காட்சிப்படுத்தப்படுவதில்லை?
07. Invite Code மூலம் ஆட்களை சேர்க்கின்ற பிரமிட் வியாபாரத்தை உலகின் முதல்தர Amazon நிறுவனம் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்?
08. வியாபார தளங்களில் பொருட்களை விற்றால் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. அதைவிடுத்து ஏன் Task செய்யவேண்டும்? ஏன் நிரந்த வருமானம் வழங்கவேண்டும்?
09. சாதாரணமாக மாதமொன்றுக்கு முதலீட்டைவிட அதிகமான வருமானத்தை வீட்டிலிருக்கின்ற நமக்கு ஏன் வழங்கவேண்டும்? அவர்களே அதை எடுத்துக்கொள்ளலாமே?
10. ஒரு சர்வதேச நிறுவனம் இலங்கையை மையப்படுத்தி, ரூபாயில் முதலீடு செய்யும் வியாபாரத்தை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்?
11. இலங்கையில் amazonweb.vip இருப்பது போன்று, வேறு நாடுகளில் Amazon FBA தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறன்தா?
12. தனிப்பட்ட ஒருவரின் உள்நாட்டு வங்கி கணக்குக்கு அனுப்புகின்ற பணம், எவ்வாறு Crypto currency ஆக மாற்றப்படுகிறது?
13. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மாத்திரம் பணம் மீளப்பெற முடியுமென ஏன் வரையறுக்கப்பட வேண்டும்?
• அடுத்து என்ன நடக்கும்?
amazonweb.vip தளத்தில் முதலீடு செய்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு எங்களுக்கு இலாபம் கிடைக்கின்றது. நாங்கள் அதை எங்களது வங்கி கணக்குகளுக்கு மீளவும் பெற்றோம். ஆகவே, அதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்று வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். பொய்யாக இருந்தாலும் இருக்கும்வரை சம்பாதிப்போம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் கவர்ச்சியான இலாபங்களை காட்டியே மக்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கின்றனர். மாதமொன்றுக்கு முதலீட்டைவிட அதிகளவு இலாபம் கிடைக்குமென்றால் யார்தான் சும்மா இருப்பார்கள்? சரி, பிழைகளுக்கு அப்பால் எல்லோரும் பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுவார்கள். சிறியளவு முதலீடு செய்து அதிகமாக சம்பாதிக்க நினைப்பார்கள். அதுவும் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
நாம் குறுகிய இலாப நோக்கத்துடன் முதலீடு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், அதன் நிறுவனர்கள் நீண்டகால திட்டத்துடன் வீசியிருக்கும் சதிவலையில் நாங்கள் மாட்டியிருக்கிறோம். அவர்களது தளத்தில் நாங்கள் பொருட்களை வாங்கி, அங்கேயே விற்பதற்கு நமக்கு அவரகள் ஏன் பணம் தரவேண்டும். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
பிரமிட் முறையில் இந்த முதலீட்டுத் திட்டம் இயங்குவதால், குறுகிய காலத்துக்குள் அதிகளவானவர்கள் இதில் இணைந்துகொள்வார்கள். இதனால் குறுகிய காலத்துக்குள் அதிக முதலீடு அவர்களது வங்கி கணக்குகளில் வந்துசேரும். அதிலிருந்து சிறிது காலத்துக்கு உங்களுக்கு இலாபம் வழங்குவார்கள். இது இரையைப் போட்டு மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. இலங்கையில் பாரிய பணமோசடியில் ஈடுபட்ட Global Privelth நிறுவனமும் இந்த முறையிலேயே இயங்கியது குறிப்பிடத்தக்கது.
அவர்களது வங்கியில் போதுமானளவு பணம் வந்து சேர்ந்தவுடன் உடனடியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்கள். இணையத்தளம் முடங்கிவிடும். பணத்தை மீளப்பெறுவது நிறுத்தப்படும். முகவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதன்பின் தொடர்புகொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். கோடிக்கணக்கான நமது பணத்துடன் மோசடியாளர்கள் தலைமறைவாகிவிடுவார்கள். நமது பேராசை பெரு நஷ்டத்தில் முடிவடையும்.
இதுபோல பல சம்பவங்கள் இலங்கையில் நடந்துள்ளன. சமூக வலைத்தளம் என்ற பெயரில் அண்மையில் ஒரு பிரமிட் வியாபாரம் உருவாக்கப்பட்டது. Like செய்தால் பணம் கிடைக்குமென்று பல சலுகைகளை அறிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை நம்பி பலர் இலச்சினை பொறித்த ரீ–சேர்ட் அணிந்துகூட பிரசாரம் செய்தனர். அது போலியானது என்று கூறியபோது என்னுடன் முரண்பட்டனர். காலப்போக்கில் அது இருந்த தடமே இல்லாமல் போய்விட்டது.
அதுபோல போலியான amazonweb.vip இணையத்தளமும் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நமது பணத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தின் பின்னால் செல்லவேண்டாம். (பிரதி செய்யப்பட்டது)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.